மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.
மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை.
ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.
சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.



