பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அனுமன் வழிபாடு..!

0

அஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறான். அவற்றில் ஒன்று, சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பஞ்சமுக அனுமன் திருக்கோயில். ராமாயண காவியத்தில் ராவணன் தன் படைகளையெல்லாம் இழந்து தனியாக இருந்தபோது அவனை ராமன் வீழ்த்தாமல், ‘இன்று போய் நாளை வா’ என அனுப்பிவிடுகிறார். ராவணன் தந்திரமாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராமரை வீழ்த்திட பலசாலியான மயில் ராவணனை உதவிக்கு அழைத்தான். அந்த மயில்ராவணன், பல வரங்களைப் பெற்ற மாயாவியான அசுரன். இக்கட்டான சந்தர்ப்பத்தில் தன்னிடம் உதவி கேட்ட ராவணனுக்கு உதவ ஒப்புக்கொண்டான் மயில்ராவணன். ராமபிரானை வீழ்த்த நிகும்பலா யாகம் எனும் ஒரு யாகத்தை செய்யத் தொடங்கினான் மயில் ராவணன். அதையறிந்த ராமபிரான் மயில்ராவணனை தோற்கடிக்க சரியானவர் அனுமனே என உணர்ந்து அனுமனை அழைத்து தன் சக்தியோடு ஆசியையும் தந்து அவனை அழிக்க அனுப்பினார்.

பின் கருடன், வராகமூர்த்தி, நரசிம்மர், ஹயக்ரீவர் போன்றோரும் தங்களின் சக்தியை அனுமனுக்கு அளிக்க அனுமன் விஸ்வரூபத் திருக்கோலம் எடுத்து மயில்ராவணனை வதம் செய்தார். அன்று அனுமன் எடுத்த பஞ்சமுகத் திருக்கோலத்தை நாம் இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் அனுமனின் ஐந்து முகங்களையும் ஒரே திசையில் நேரே பார்க்கும்படி அமைத்திருப்பது சிறப்பு. ஆலயத்தினுள் நுழைந்ததும் கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்து வரங்களை அள்ளித்தரும் வரசித்தி விநாயகர், மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுடன் அருள்கிறார். அதையடுத்து தல விருட்சமாக அரசும், மலைவேம்பும் இணைந்து காணப்படுகிறது. மூலக்கருவறையில் மேற்குப் பார்த்த சந்நதியில், ஐந்தரை அடி உயரத்தில், வலது திருக்கரங்களில் நாகம், கலப்பை, அங்குசம், கலசம், அபயமும்; இடது திருக்கரங்களில் மரம், கபாலம், சஞ்சீவி பர்வதம், புத்தகம், கதை போன்றவற்றைத் தரித்தும் அருளே வடிவாய் எழுந்தருளியிருக்கிறார் இந்த ஆஞ்சநேயர்.

இந்த அனுமனின் கருட முகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் கருட ஸஹஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நீங்க அருட்பாலிக்கிறார். வராக முகத்திற்கு திங்கட்கிழமைகளில் வராக ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சம் கிட்டுகிறது; கடன்கள் தொலைகின்றன. அனுமனின் முகத்திற்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹனுமத் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் பகைவர்கள் தொல்லைகள் விலகும். நரசிம்ம முகத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் அனைத்தும் அகல்கின்றன. ஹயக்ரீவ முகத்திற்கு புதன்கிழமைகளில் ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கல்வி, சொல்லாற்றல், நல்வாக்கு போன்ற நற்பலன்கள் கிட்டுகின்றன. பஞ்சமுக ஹனுமானின் மகிமைகளை சொல்லி மாளாது என்கின்றனர் பக்தர்கள்.

ராமபிரான், சீதாபிராட்டி-இளையவரோடு உற்சவமூர்த்தியாக கருவறையில் எழுந்தருளியுள்ளார். சனிக்கிழமைகளில் இந்த அனுமனை தரிசித்து வலம் வர சனிதோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். இத்தலத்தில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மட்டைத் தேங்காய் கட்டி வழிபடுகின்றனர். மூன்று முறை மட்டைத் தேங்காயை நேர்ந்து கொண்டு கட்டுவதற்குள் பக்தர்களின் கோரிக்கைகளை அனுமன் நிறைவேற்றி விடுவாராம். வெற்றிலை மாலை, எலுமிச்சம்பழ மாலை, வாழைப்பழ மாலை என விதவிதமாய் பக்தர்களால் இந்த அனுமனுக்கு சாத்தப்படுகிறது. குறிப்பாக ஏலக்காய் மாலையை நேர்ந்து கொண்டு இவருக்கு சாத்தினால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். ஆலயத்தில் உள்ள துலாபாரத்தின் மூலம் பக்தர்களின் பாரங்களைத் தான் ஏற்கிறார் இந்த அனுமன். ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்சநிலை என எல்லாம் சேர்ந்த ஒரே வடிவம் அனுமனே.

புத்தி, பலம், தைரியம் போன்றவற்றைத் தம்மை வணங்குவோர்க்கு தந்திடுவார் இந்த ராமதூதன். ராமபக்திக்கு இலக்கணம் வகுத்த ராமனுக்குப் பிரியமான அனுமனை வேண்ட, கிட்டாதது எதுவுமேயில்லை. அடுத்த கல்பத்தில் பிரம்மாவாகத் திகழப்போகும் பெரும் பொறுப்பும் அனுமனுக்கே என கூறப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி நன்மைகளை வாரி வாரி வழங்கி நானிலத்தில் நாம் நலமுடன் வாழ அர்சாவதார மூர்த்தியாய், சிரஞ்சீவியாக நம்முடனேயே வாழ்ந்து வருகிறார் அனுமன். சென்னை தாம்பரம் – வேளச்சேரி மார்க்கத்தில் மேடவாக்கம் அருகே கௌரிவாக்கத்தில் பழனியப்பா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply