பத்து ஆஞ்சநேயர்களை ஒன்றாக தரிசிக்க ஆவலா? அப்படியானால் ஒரு தடவை இங்கு செல்லுங்கள்..!

0

ஒரே ஆலயத்தில் சேவை சாதிக்கும் பத்து ஆஞ்சநேயர்களை ஒரு சேர தரிசிக்க ஆவலா? அப்படியானால் சென்னை பட்டாளம் மார்க்கெட் அருகில் அங்காளபரமேஸ்வரி கோயில் தெருவில் உள்ள இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆஞ்சநேயர் ஆலயத்திற்குப் போக வேண்டும். கூப்பிய திருக்கரங்களுடன் கருடபகவான் தரிசனமளிக்க மூன்று நிலை ராஜகோபுரம் வழியே ஆலயத்துள் நுழைகிறோம். நாலரை அடி உயரத்தில் வரசித்தி விநாயகர் பாசம், அங்குசம், மோதகம், அபயக்கரம் காட்டி கொலு வீற்றிருக்கிறார். வலப்புறம் அனுமனின் பிரதான சந்நதி உள்ளது. முழுவதும் சலவைக்கல்லினாலான தரை தளத்துடனும், மேற்புறம் சித்திர வேலைப்படுகளுடனும், அலங்கார மின் விளக்குகளோடும் மூலவர் கருவறை ஒளிமயமாக உள்ளது. அனுமன் சந்நதி முன் சுதை உருவில் மிகப்பெரிய ஆதிசேஷன் காணப்பட அதற்குள் தனித்தனி நாக வடிவங்களில் ராதாகிருஷ்ணர், பாலகிருஷ்ணர், ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் அருள்கின்றனர்.

மூலவரின் கருவறையின் மேலே தியான அனுமனின் சுதை உருவம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. சலவைக்கல்லினாலான வாயிற்படியையும், வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளிக்கதவுகளையும் தாண்டி, அழகான மண்டபத்தில் சுயம்பு மூர்த்தமான செந்தூர அனுமனையும், அதற்கு மேல் உள்ள பீடத்தில் பளிங்கினாலான சஞ்சீவி மாருதியையும் தரிசிக்கிறோம். அவர்களுக்கு இடப்புறம் கிருஷ்ணரின் உற்சவத் திருமேனியும், வலது புறம் சிவபெருமானும் தரிசனம் அளிக்கின்றனர். அதையடுத்து பஞ்சமுக அனுமான். அவருக்கு வலது புறம் அனுமனின் உற்சவத் திருமேனி உள்ளது. செந்தூர அனுமன் துளசி மாலைகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, கதையை தன் கையில் ஏந்தி கம்பீரமாக அருட்காட்சியளிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் வாக்கியப்படி மிகவும் வரப்ரசாதியாகத் திகழும் மூர்த்தியாம் இவர். குறிப்பாக மழலைச் செல்வம் வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு தட்டாமல் பிள்ளை வரம் தரும் பரமகருணாமூர்த்தியாகத் திகழ்கிறார் இவர்.

தினமும் காலையும், மாலையும் ஏழு மணிக்கு விசேஷ பூஜைகள் இவருக்கு நடக்கின்றன. ஒவ்வொரு அமாவாசைக்கும் செந்தூரத்தினால் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அனுமனின் கருவறையைச் சுற்றிலும் அனுமன் சாலீஸா ஹிந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அனுமனின் தமிழ்த் துதிகளும் காணப்படுகின்றன. இந்த அனுமன் வட இந்திய முறைப்படி ஆராதிக்கப்படுகிறார். கருவறையின் கோஷ்டங்களில் பளிங்கினாலான தியான அனுமன், அபய அனுமன், பஞ்சமுக அனுமன் போன்றோர் உறைகின்றனர். பிராகாரத்தை வலம் வரும்போது வலப்புறம் ராமதாச அனுமனின் சந்நதி உள்ளது. தன் இதயத்தில் சீதாராமரை தரிசனம் காட்டும் அனுமனின் சந்நதி இது. சனிபகவானைத் தன் பாதங்களுக்கு அடியில் மிதித்த திருக்கோலத்தில் ஒரு அனுமன் காட்சி தருகிறார்.

அடுத்து பாதாள உலகில் வாழும் ஏழுதலை நாகத்தின் வாலை தன் இடது கரத்தால் தூக்கிக் கொண்டுள்ள நிலையில் உள்ள அனுமனை தரிசிக்கிறோம். வெளிப்பிராகாரத்தில் ஆழ்வார்களின் சந்நதியும், ருக்மாயி, பாண்டுரங்கன், தேவி கருமாரியம்மன், நவகிரகங்கள் போன்றோரும் அருள்கின்றனர். அடுத்து, காசியில் உள்ளது போலவே காசிவிஸ்வநாதர் சதுர அமைப்புள்ள பள்ளத்தில் அருள்கிறார். அவரது வாயிலின் இருபுறங்களிலும் பாலகணபதி, பாலமுருகனுடன் அன்னை விசாலாட்சி தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஆலயத்தினுள் ராமர், சீதை, லட்சுமணர், அனுமனுடன் உள்ள சந்நதி ஒன்றும் உள்ளது. விஷ்வக்சேனர், சுதர்சனமூர்த்திகளும் இந்த கருவறையில் அருள்கின்றனர். அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன், ஐயிரண்டு திருவுருவங்களில் அருளும் திருத்தலம் இது.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply