
திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி சாலையில் உள்ள தெற்கு ‘கருங்குளம்’ என்னும் திருத்தலத்தில் அமைந்திருக்கும் ‘பூசாஸ்தா’ கோயிலில் பங்குனி உத்திரத்தன்று கொழுக்கட்டை வழிபாடு நடைபெறுகிறது. இந்தக் கொழுக்கட்டையை முழுக்க முழுக்க ஆண்களே தயார் செய்கிறார்கள். இந்தக் கொழுக்கட்டையைத் தயார் செய்வதற்கு 63 கிலோ அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். விரதம் கடைப்பிடிக்கும் ஆடவர்கள் மாவைத் தயார் செய்ய வேண்டும். கொழுக்கட்டைக்கான அரிசியை இயந்திரம் (மெஷின்) மூலம் அரைக்கக்கூடாது. இதற்கென்று உள்ள கல் உரலில் மாவு இடிக்கும் ஆண்கள், வாயில் துணியைக் கட்டிக்கொள்வார்கள். எந்தக்காரணத்தைக்கொண்டும் பேச மாட்டார்கள். எல்லாம் சைகை மூலமாகத்தான் வேலை நடைபெறும்.

மாவு இடித்ததும் நீர்விட்டு பிசைந்து உருட்டித்தட்டி அடுக்குவார்கள். மூலிகைக்கொடிகளின் மீது பெரிய வாழை இலையைப் பரப்பி அதன்மீது தட்டிய மாவை அடுக்குவார்கள். அடுக்கும்போதே இடையிடையே பூப்போன்ற தேங்காய்த்துருவல், சிறுபயிறு, வெல்லம் கலந்த பூரணத்தையும் வைப்பார்கள். மாவும் பூரணமும் மாறி மாறி அடுக்கிய பிறகு, அப்படியே இலைகளால் மூடி மூலிகைக் கொடிகளால் பொட்டலம்போல் உருண்டை வடிவில் கட்டுவார்கள். மாலை வேளையில் கோயில் முன்பு விறகுக்கட்டைகளை எரித்து, பெரிய அளவில் தணல் உண்டுபண்ணுவார்கள். நெருப்பு ‘தக, தக’ என்று அனல் வீசும். அப்போது கோயில் சாமியாடிக்கு (பூசாரி) அருள் வரும். அவர் ஆடிக்கொண்டே வந்து கொழுக்கட்டை உருண்டையைத் தூக்கி தணல் நடுவில் வைப்பார். அந்தச்சமயத்தில் மேளதாளம் முழங்கும்.
சாமி ஆடியபடியே கொழுக்கட்டை உருண்டையை உருட்டி… உருட்டி… வேக வைப்பார். வெந்தபின், சாமியாடி உத்தரவு கொடுத்ததும், தணலில் வெந்த கொழுக்கட்டையை சுவாமி ஐயப்பனுக்குப் படைப்பார்கள். பிறகு, மறுநாள் அந்தப் பெரிய கொழுக்கட்டையைக் கத்தியால் துண்டு துண்டாகப் பகிர்ந்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தை உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம். இந்த விழா பங்குனி உத்திரத்தன்று திருநெல்வேலி மாவட்டம் கன்னியாகுமரி சாலையில் உள்ள கருங்குளம் என்னும் திருத்தலத்தில் அமைந்திருக்கும் ‘பூசாஸ்தா’ கோயிலில் நடைபெறுகிறது. இக்கோயிலுக்குச் செல்ல திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியிலிருந்து வாகன வசதிகள் உள்ளன.- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
