சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம்..!

0

யாரேனும் ஒருவர் தன்னை பாபாவின் குழந்தையாக பாவித்து பாபாவிடம் வேண்டிய அளவு சரணடைந்து, அந்த சரணாகதியை முழுமையானதாகச் செய்துகொள்ள முயற்சிகள் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால், பாபா அவருடைய எல்லா சுமைகளையும் ஏற்க முன் வந்து, அந்த பக்தரை உண்மையிலேயே தனது குழந்தையாக ஆக்கி கொள்கிறார். அதாவது அவனுடைய பொறுப்புகள் எல்லாவற்றையும் பாபா ஏற்பார். பாபாவே கூறியுள்ளபடி, ‘ ஒருவன் காண்பது என்னை – என்னை மட்டுமே – எனினும், என்னைப் பற்றிய பேச்சுக்களையே செவிமடிப்பினும், என்னிடம் மட்டும் பக்தி கொள்வானாயினும், ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி, என்னிடமே நிலைத்திருப்பின், அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை ‘.

பாபாவிடம் பக்தி செலுத்துவோர் இங்கு ஏராளமானோர் உள்ளனர். ஆனால் பாபாவிடம் சரணடைந்து அவரது குழந்தையாக வேண்டுபவர்கள் எத்தனை பேர்? மனித குலத்தில் உள்ள பெருங்குறை இது. சுலபமாக அளிக்கப்படுவதை யாரும் மதிப்பதில்லை. தமது குழந்தைகளுக்கு அமானுஷ்யமான, அதிசயத்தக்க உதவி பாபா அளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்களுக்குப் பின்னரும் விசுவாசம் ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே நீ பாபாவிடம் சரண் புகுந்து விட்ட குழந்தை எனில், வேண்டியதை அளிக்கத் தயாராக பாபா இருப்பதை நீ உணர்வாய். பாபாவிடம் இந்த கணமே பூரண சரணாகதி அடையுங்கள், மற்ற எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொள்வார்.

பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே. பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும் வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம். ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார். எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை (விரதம்) இருப்பதை பாபா ஒருபோதும் அங்கிகரிக்கவில்லை. நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply