பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள்..!

0

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று மலைக்கோவிலில் உற்சவ சாந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்காக பழனி கோவில் சன்னதி, உட்பிரகாரம், வெளிப்பிரகாரங்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் மலைக்கோவில் கைலாசநாதர் சன்னதியில் புனிதநீர் நிரம்பிய வெள்ளிக்குடம் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், சாந்தி கும்ப பூஜை, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் உட்பிரகாரம் வழியாக சுற்றி எடுத்து வரப்பட்டு சன்னதியில் வைத்து உச்சிக்கால பூஜை மற்றும் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து கலச அபிஷேகம் நடைபெற்றது.

பழனி முருகன் கோவிலில் இரவு 8.30 மணிக்குமேல் ராக்கால பூஜை நடைபெறும். இந்த பூஜைக்கு பின் நடைசாத்தப்பட்டு முருகன் பாதம் பல்லக்கில் வைத்து பள்ளியறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து அன்றைய வரவு செலவுகள் படிக்கப்பட்ட பின்னர் பூஜை நடைபெற்று பள்ளியறை கதவு சாத்தப்படும். மீண்டும் அதிகாலை கோவில் திறக்கப்படும் போது பள்ளியறையிலிருந்து பூஜை செய்து பாதம் சன்னதிக்கு கொண்டு வந்து நடை திறந்து விஸ்வரூப தரிசனம் நடை பெறும்.

தைப்பூச கொடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் ராக்கால பூஜைக்கு பின் பள்ளியறை பூஜை நடத்தப் படவில்லை. உற்சவ சாந்தி சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர் நேற்று முதல் மீண்டும் பள்ளியறை பூஜை தொடங்கியது.

இதே போல் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலிலும், கோவில் வளாகம், சன்னதிகள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து சாயரட்சை பூஜையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை முன்பு சிறப்பு ஹோமம் நடைபெற்றது, அதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply