
தேவர்களுக்கும் உலகத்து உயிரினங்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம்தான் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலம்.
திருச்செந்தூர் கந்த சஷ்டிப் பெருவிழா 12 நாள் நிகழ்வுகள்!
தமிழ்க் கடவுள் என்று போற்றப்பெறும் முருகப்பெருமான் கருணையின் வடிவானவர். பகைவர்க்கும் அருளும் பண்பு கொண்டவர். அதனால்தான், சூரபத்மனை சம்ஹாரம் செய்தாலும்கூட, அவனையே தனக்கு உரிய மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆட்கொண்டு அருளினார். தேவர்களுக்கும் உலகத்து உயிரினங்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்த சூரபத்மனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த திருத்தலம்தான் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலம். கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் செந்தூர் தலத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
கந்த சஷ்டிப் பெருவிழா

சூர சம்ஹாரம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் என 12 நாள்கள் கோலாகலமாக நடக்கும் இந்தப் பெருவிழாவில் நிகழவுள்ள திருநிகழ்வுகள்…
8.11.18 (கந்த சஷ்டி விழா தொடக்கம்)
கொடியேற்றம்
`கந்த சஷ்டி திருவிழா’ கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டு சஷ்டி மண்டபத்தில் விரதம் தொடங்குவார்கள்.
8.11.18 முதல் 12.11.18 வரை (உபயதாரர்கள் மண்டகப்படி)
மண்டகப்படி

அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜையும் நடைபெறும். பிறகு 5.30 மணிக்கு அருள்மிகு ஜெயந்திநாத சுவாமிகள் யாகசாலைக்குப் புறப்படுவார்.
நண்பகல் 12 மணியளவில் யாக சாலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெறும்.
அதன் பிறகு அருள்மிகு ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தின் மீதேறி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகியவற்றுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். பிறகு, மூலவர் சந்நிதியான சண்முக விலாசத்தை அடைவார்.
12.11.2018 (வேல் பூஜை)
வேல் பூஜை
கந்த சஷ்டியின் ஐந்தாவது நாளில் சூரனை சம்ஹாரம் செய்யும் சுப்ரமணியரின் வேலுக்குச் சிறப்பு பூஜை நடைபெறும். பிறகு அந்த வேல், கருவறையில் வீற்றிருக்கும் சண்முகரிடம் வைக்கப்படும்.
13.11.2018 (சூர சம்ஹாரம்)

சூர சம்ஹாரம்
வழக்கமான பூஜைகள், மண்டகப்படி முடிந்தபிறகு அருள்மிகு ஜெயந்திநாதப் பெருமான் தங்கத் தேரிலேறி வசந்த மண்டபத்திலிருந்து சூரனை வதம் செய்வதற்குப் புறப்படுவார். சண்முகநாதர் சந்நிதியில் வைக்கப்பட்ட வேலை ஜெயந்திநாதர் தம் திருக்கரத்தில் ஏந்திக்கொண்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் கடற்கரைக்கு எழுந்தருள்கிறார். `முருகனுக்கு அரோஹரா, ஷண்முகருக்கு அரோஹரா’ என்ற முழக்கம் விண்ணை எட்டி மண்ணில் எதிரொலிக்க, சூரபத்மனை சம்ஹாரம் செய்து, அவனை மயிலாகவும் சேவலாகவும் ஆட்கொள்வதுடன், பக்தர்களுக்கும் அருளாசி வழங்குகிறார்.
விரதம் முடித்தல்
காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகனை வணங்கி உணவருந்தி தங்களது விரதத்தினை முடித்துக்கொள்வார்கள்.

14. 11. 2018 (திருக்கல்யாணம்)
திருக்கல்யாணம்
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். பிறகு 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதல் நடைபெறும். மாலை 6.30-க்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
15. 11. 2018 (பட்டினப் பிரவேசம்)

அருள்மிகு குமரவிடங்கபெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
16.11.18 – 18.11.18 (ஊஞ்சல் காட்சி )
பட்டினப்பிரவேசம் நிறைவடைந்த பிறகு, குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் அடுத்த மூன்று நாள்கள் தினமும் மாலை 6 மணியளவில் திருக்கல்யாண மண்டபத்தில் அமைந்திருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருகிறார்.
19.11.18 (சாயாபிஷேகம்)

திருவிழாவின் கடைசி நாளன்று மாலை, ஜெயந்திநாதருக்கு சாயாபிஷேகம் என்னும் அபிஷேகம் நடைபெறும். உற்சவர் ஜெயந்திநாதரின் திருவுருவத்துக்கு முன்பாக ஒரு நிலைக்கண்ணாடி வைத்து, அதில் தெரியும் இறைவனின் பிம்பத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். எனவேதான், இந்த அபிஷேகம் `சாயாபிஷேகம்’ என்று அழைக்கப்படுகிறது (சாயா – ‘நிழல்’ என்றால் பிம்பம் என்று பொருள்).- Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
