
பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய குற்றம் குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம்.

பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக ‘பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்’ என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும். வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும்.

ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். தனது பக்தனை எந்தசூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
