குழந்தை வரம் அருளும் குமரி கிருஷ்ணர் வழிபாடுகள்

0

கி.பி.13ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆதித்ய வர்மா என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் தீவிர கிருஷ்ண பக்தர். இவரை சர்வாங்கநாதன் என்றும் அழைப்பார்கள். இவரது கனவில் கிருஷ்ணர் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் தனக்கு ஆலயம் எழுப்புமாறு கேட்டுள்ளார். அவ்வாறு இந்த மன்னரால் நாகர்கோவிலில் கிருஷ்ணசுவாமி ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் இந்த பகுதியும் கிருஷ்ணன் கோவில் என மாறியது. கி.பி. 15ம் நூற்றாண்டு காலத்தில் வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவில் இருந்து இந்த கோயிலுக்கு விஜயம் செய்தனர். இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் வீற்று இருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி, தனது இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்தி நின்ற கோலத்தில் இரு கால்களையும் சற்று மடக்கி ஒரு குழந்தையாக அழகுற காட்சி தருகிறார். குமரி மாவட்டத்தின் குருவாயூர் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

தினந்தோறும் கிருஷ்ணசுவாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெய் அலங்காரம் செய்யப்படுகிறது. இது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பால கிருஷ்ணசுவாமி, நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண்பதே மனதில் மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் காட்சியாக இருக்கும். இந்த காட்சியை கண்டு கோயிலில் பூஜிக்கப்படும் நைய்வேத்திய பிரசாதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டுதல் வைத்து சந்தான வரம் பெற்றவர்கள், பின்னர் தங்கள் குழந்தையுடன் வந்து சோறு ஊட்டி துலாபாரம் கொடுக்கிறார்கள். இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் ஸ்ரீ கணபதிக்கும், ஸ்ரீ சாஸ்தாவுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இங்குள்ள உற்சவ மூர்த்தி மற்றும் பூதத்தானுக்கு ஜோடி பாதுகைகளுடன் தனித்தனி சன்னதி இருக்கிறது.

இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீபூதத்தான் இரவு நேரத்தில் பாதுகைகள் அணிந்து கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மக்களை பாதுகாப்பதற்காக வலம் வருகிறார் என்று நம்பப்படுகிறது. இக்கோவிலில் ஸ்ரீகணபதி என்பவரால் கிபி 1770ம் ஆண்டில் கொடி மரம் நிறுவப்பட்டுள்ளது. இக்கோவிலில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்கு பின், புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கடந்த 2009 ல் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று கோயில் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கிருஷ்ண பகவான் வலம் வந்து பக்தர்களுக்கும் காட்சி அளிப்பார். சித்திரை 9ம் திருவிழா அன்று, தேரோட்டமும் நடைபெறும். இக்கோயிலில் தினமுமு் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply