
குலதெய்வம் யார்? எங்கே இருக்கிறது? எப்படி அறிவது?அறிந்துகொள்வோமா?
நட்சத்திரங்களைப் பற்றித் தொடரலாம் என நினைக்கும் போது வாசகர்கள் குலதெய்வம் பற்றி கூடுதல் தகவல்கள் கேட்கிறார்கள்,
வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே முதல் கடமை. எனவே இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
எல்லை தெய்வம் என குறிப்பிடுகிறீர்கள். அதன் பெயர் எப்படி அறிவது? என்கிறார் வாசக அன்பர் ஒருவர்.
இன்னும் பலர் என் ஜாதகத்தில் 5 ம் இடத்தில் எந்தக் கிரகமும் இல்லை. அப்படியானால் எப்படி அறிவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
எல்லை தெய்வம் என்றால் ஐயனார், ஐயப்பன், சாஸ்தா எனத் தந்திருந்தேன். இது ஒரு உதாரணம்தான். சுடலைமாடன், முனியப்பன், முனீஸ்வரன், காத்தவராயன், மதுரைவீரன் என இன்னும் பல பெயர்களும் உண்டு. சாமிகளும் உண்டு.
பெண் தெய்வம் என்றால் காத்தாயி, வீரமாயி, வீரமாகாளி, மாரியம்மா, காளியம்மா, புடவைக்காரி, சேலையம்மா, கன்னியம்மா என இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறார்கள்.
எனவே உங்கள் பூர்வீகத்திலிருந்து இதை ஆராய்ந்தால் எளிதாக உங்கள் தெய்வத்தை இனம்காண முடியும்.

5ம் இடத்தில் கிரகம் இல்லாவிட்டால் அந்த வீட்டின் அதிபதி கிரகம் அமர்ந்த இடம் பார்க்கப்பட வேண்டும்.
அந்த கிரகம் யார்? அதன்படி எப்படி தெய்வத்தை அறிவது என்பதை முந்தைய பதிவில் தெரிவித்தேன்.
உங்கள் ஜாதகத்தில் 5ஆம் அதிபதி கிரகம் அமர்ந்த இடம்.
மேஷம் என்றால்:- வறண்ட, கரடுமுரடான பாறைகள் நிறைந்த பகுதியில் கோயில் இருக்கும்.
ரிஷபம் :- வயல் பகுதியில் இருக்கும்.
மிதுனம்:- வாரச்சந்தை அல்லது வருடச் சந்தை ஊரின் எல்லைப் பகுதி ஆகியவற்றில் இருக்கும்,
கடகம்:- கடல், ஆறு, குளக்கரை பகுதியில் இருக்கும்.
சிம்மம்:- நகரின் மையப்பகுதி, ஊரின் தலைநகர், அல்லது சிவனின் பெயரில் அமைந்த நகரம்(உதாரணம்:- திருவண்ணாமலை) அமைந்திருக்கும்.
கன்னி:- சுற்றுலாத்தலம், மக்கள் ஒன்று கூடும் இடம். உதாரணம் திருப்பதி, நாகப்பட்டினம், கன்யாகுமரி, குற்றாலம்…

துலாம்:- இதுவும் மக்கள் ஒன்று கூடும் இடம்தான், சந்தைப்பகுதி, வியாபாரநகரம், என்று இருக்கும். உதாரணம் ஈரோடு, கள்ளக்குறிச்சி ….
விருச்சிகம்:- துணி துவைக்கும் துறை, கிளை ஆறு ஓடும் இடம், சுடுகாட்டுப்பகுதி, முட்புதர் உள்ள பகுதியில் இருக்கும் ஆலயம்.
தனுசு:- அனைவராலும் வணங்கும் தெய்வம், உதாரணம் சென்னை காளிகாம்பாள்- இந்த தலம் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது ஆனாலும் அனைவராலும் வணங்கப்படும் அம்மன் இவள். பிள்ளையார்பட்டியும் இந்த வகைதான். இது போன்ற தெய்வ ஆலயங்கள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்கின்ற இடம்.
மகரம்:- சுடுகாட்டுப்பகுதி, வறண்ட நிலப்பகுதி, சதுப்பு நிலப்பகுதி, உபயோகமற்ற மரம், செடிகொடி உள்ள காட்டுப்பகுதி.
கும்பம்:- புகழ் பெற்ற கோயில் உள்ள நகரப்பகுதி, உதாரணம்:- காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை… இதன் சுற்றுவட்டாரப் பகுதி.
மீனம்:- கடற்கரை ஊர், நகரம் உள்ள பகுதி, ஞானிகள், மகான்கள் இருந்த பகுதி.
இந்தக் குறிப்புகளையும் சென்ற பதிவின் ( சூரியன் இருக்க, சந்திரன் இருக்க என தகவல் தந்தேன் அல்லவா! அந்த பகுதியையும்) தகவலையும் இணைத்துப் பார்த்தால் உங்கள் தெய்வத்தை நீங்களே அறிந்து கொள்ள முடியும்,
தமிழகத்தில் குலதெய்வமாக வழிபடும் சாமிகளின் எண்ணிக்கை 1100 க்கும் மேல் உள்ளது என்பதாக அறிகிறேன். இது நான் தெரிந்துகொண்டது. இன்னும் கூட இருக்கலாம்!
முதலில் குலதெய்வம் என்பவர் யார்? அவர் ஆகாயத்தில் இருந்து வரவில்லை.
அவர் உங்கள் குலம் காக்க உயிர்த் தியாகம் செய்த உங்கள் குடும்பத்தின் முன்னோர் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
அல்லது உங்கள் குலம் தழைக்க அல்லது ஊரைக் காக்க தன் உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஆவார்.
என்ன இருந்தாலும் இறந்தவர் ஆவியானது ஊருக்குள் வரக்கூடாது என்ற கோட்பாட்டின் படி, எல்லையில் தங்கி உங்கள் ஊரை அல்லது உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்.
சரி எப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்க வேண்டும்?

‘அதான் வருடத்துக்கு ஒருமுறை திருவிழாவின் போது நாங்கள் முறையாக வழிபாடு செய்கிறோமே… அப்புறம் என்ன?’ என்பவர்களுக்கு…
உங்கள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியும் உங்கள் குலதெய்வத்தின் ஆசியுடன்தான் நடைபெற வேண்டும்.
உங்கள் குழந்தை அல்லது பேரன் பேத்திகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்து உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் தான் நடக்கவேண்டும்.
நீங்கள் வீடு கட்டியவுடன் அல்லது வாங்கியவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடம் உங்கள் குலதெய்வக் கோயில்.
உங்கள் பிள்ளைகள் உயர்கல்வி கற்கச் செல்கிறார்களா? குலதெய்வ வழிபாடு செய்த பிறகு துவக்குங்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துள்ளதா. அட… வரவே இல்லை என அலுத்துக் கொள்கிறார்களா? உடனே உங்கள் தெய்வத்தைப் பார்த்து வாருங்கள்.
புதிய தொழில் தொடங்க இருக்கிறீர்களா? அனுமதியை உங்கள் குலதெய்வத்திடம் பெறுங்கள்.
பெண் பிள்ளை பூப்பெய்து விட்டாளா? நல்ல வாழ்வு அமைய வேண்டும் என உங்கள் சாமியிடம் வேண்டுங்கள்.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் குலதெய்வத் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டே இருங்கள். எல்லா நலமும், வளமும், அருளிக்கொண்டே இருப்பார் அந்தக் கண்கண்ட தெய்வம்.
ஒருசிலர் எங்கள் குலதெய்வம் திருப்பதி,எனச் சொல்கிறார்கள். அது இஷ்ட தெய்வம். இருந்தாலும் குலதெய்வம் தெரியாதவர்கள் இப்படி இஷ்ட தெய்வ வழிபாடு செய்து இந்த “வணக்கத்தை என் குலசாமியிடம் சேர்த்துவிடு” என வேண்டிக் கொள்ளலாம். அந்த வழிபாடு அனைத்தும் உங்கள் குலதெய்வத்தைச் சென்றடையும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே நம்பிக்கையோடு செய்யப்படும் எந்தச் செயலும் எந்த வகையிலும் நமக்கு நன்மையே தரும்.- Source: thehindu
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
