மரண பயம் நீங்க எமனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

எமனுக்கு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 16.கி.மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் தனி கோயில் உள்ளது. இந்த ஊரில் சிவனும், எமனும் அருகருகே தனித்தனியாக கோயில் கொண்டு அருள் பாலிக்கின்றனர். திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி உடனுறை புராதனவனேஸ்வரர் கோயில் உள்ளது. சுவாமிக்கு பழமைவனநாதர் என்ற பெயரும் உண்டு. கோயில் கி.பி. 12, 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. கோயிலில் மதுரை சௌண்டகோப்பரகேசவர்மன், ராஜகேசரிவர்மன், ராஜேந்திரசோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவன், வரகுணமகாராஜன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், மற்றும் விஜயநகரத்து வேங்கடபதிராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தகைய வரலாற்று பின்னணி உள்ள திருச்சிற்றம்பலத்தில் சிவனுக்கு அருகே எமனும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

எமதர்மன் கோயில் வரலாறு

திருச்சிற்றம்பலத்தில் நந்தவனம் ஒன்று அமைந்திருந்தது. நந்தவனத்தில் அரிய வகை மலர்கள் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசின. அப்போது இங்கு வந்த சிவபெருமான், இனிய காற்றாலும், மலர்களின் வாசத்தாலும் மயங்கி தூக்கத்தில் ஆழ்ந்தார். அங்கு வந்த பார்வதி தேவியார், எவ்வளவோ முயன்றும் சிவபெருமானைக் கண்விழிக்க செய்ய முடியவில்லை. உடனே பார்வதி தேவியார் மன்மதனை அழைத்து பாடச்செய்தார். கண் விழித்த சிவபெருமான், கோபத்தில் மன்மதனை எரித்துவிடுகிறார். அந்த இடமே மதன்பட்டவூர். இவ்வூரில் மன்மதனுக்கு இன்றும் கோயில் இருக்கிறது. மன்மதனை எரியூட்ட கட்டைகள் எடுக்கப்பட்ட இட கட்டையங்காடு, மன்மதன் இறந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் அறிந்த இடம் ஒட்டங்காடு. மன்மதனை அடக்கம் செய்து, பால் தெளிக்கப்பட்ட இடம் பாலத்தளி.

பால் தெளிக்க நாள் குறித்த இடம் குறிச்சி. திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மதன்பட்டவூர், கட்டையங்காடு, ஒட்டங்காடு, பாலத்தளி, குறிச்சி ஆகிய ஊர்கள் இன்றும் அதேபெயரில்தான் அழைக்கப்படுகின்றன. மன்மதனை இழந்து வருந்திய ரதிதேவி, தன் கணவன் உயிரை மீண்டும் தரும்படி சிவபெருமானிடம் அழுது வேண்டினாள். சிவன் மனம் இறங்கி, காமன்பொட்டல்(கண்ணாகுளம்) என்ற இடத்தில் மன்மதனை உயிர்ப்பித்து அருளினார். அப்போது அங்கு வந்த எமதர்மராஜன், சிவபெருமானிடம், தனக்கு உயிர்களை பிடிக்கும் பணி அளித்திருக்கும்போது அதைச் செய்ய தனக்கு கட்டளை இடும்படி வேண்டினார். சிவபெருமானும் எமதர்மனுக்கு அருள்புரிந்தார். தாம் அருளாசி வழங்கும் ஆலயத்திற்கு சற்று அருகிலேயே அமர்ந்து அப்பணியை செய்ய உத்தரவிட்டார். அன்று முதல் திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜன் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருவதாக வரலாறு. இக்கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கோயில் அமைப்பு

திருச்சிற்றம்பலத்தில் மட்டுமே எமதர்மராஜன் மூலவராக தனிக்கோயில் கொண்டுள்ளார். எமதர்மராஜன், எருமை வாகனம் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். ஒரு கையில் பாசக்கயிறும், மற்றொரு கையில் சுவடிக்கட்டும், ஒரு கையில் கெதையும், மற்றொரு கையில் சூலாயுதத்தையும் தமது வலதுதோள் மீது சாத்தியபடி காட்சி தருகிறார். சிவபெருமானின் அவதாரமாகவும் பக்தனாகவும் எமதர்மராஜன் கருதப்படுவதால் அவரது நெற்றியில் திருநீறு அணியப்பெற்றுள்ளார். சுவாமிக்கு கருநீலம் மற்றும் வெண்ணிற ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. தன்னை வணங்க வரும் பக்தர்கள் கொண்டு வரும் மாலையை ஏற்கும் இவரது பக்கத்தில், சித்திரகுப்தனும், அவருக்கு பக்கத்தில் எமகிங்கரர்களும் இருக்கின்றனர். கோயில் வளாகத்தில், அய்யனார், பாம்புபிடாரன், தூண்டில்வீரனார், ஆண்டியப்பசுவாமி, முனீஸ்வரன், கருப்பண்ணசுவாமி, கொம்புக்காரன், ராக்காச்சிஅம்மன், வடுகச்சி அம்மன் ஆகிய பரிவாரதெய்வங்கள் உள்ளன. தலவிருட்சம் விளாமரம். கோயிலில் அமைந்துள்ள தீர்த்தம் எம தீர்த்தமாகும். இந்தகுளத்தில் ஆண்கள்மட்டுமே நீராடுகின்றனர். பெண்களுக்கு அனுமதி இல்லை. இக்குளத்தில் நீராடுவதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைவதாக ஐதீகம்.

பூஜை, அபிஷேகம்

எமதர்மராஜனுக்கு, சாதாரண நேரங்களில் தேங்காய், பழம் ஆகியவற்றுடன் தீபாராதனை செய்யப்பட்டு, திருநீறு வழங்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை உள்ள எமகண்ட நேரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. வருடந்தோறும் சித்ராபவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகமும் பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. நீண்ட ஆயுள் வேண்டியும், வழக்குகளில் வெற்றி பெறவும், நோய்கள் அகலவும் செய்வினைக் கோளாறுகள் போன்றவை நீங்கவும் இங்குவரும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளை ஒரு காகிதத்தில் எழுதி எமதர்மராஜன் கையில் உள்ள சூலாயுதத்தில் கட்டிவிட்டு சென்று விடுகின்றனர். எழுதப்பட்டுள்ள காகிதத்தில் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நீதிவழங்கி, அருள் வழங்குவதாக நம்பிக்கை. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். எமன் எனும் தர்மராஜனை தரிசிக்க விரும்புகிறவர்களும், சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply