திருநீறுக்கு பதிலாக வளையலை பிரசாதமாக தரும் அன்னை!

0

திருச்சி அருகே உள்ள கருமண்டபத்தில் கோயில்கொண்டிருக்கிறாள் அன்னை இளங்காட்டு மாரியம்மன். அன்னை இந்த இடத்தில் வந்து அமர்ந்து அருள்புரிவது பற்றி செவிவழி புராணக் கதை ஒன்றுள்ளது. தஞ்சைக்கு அருகே உள்ள ஊர் இளங்காடு. இங்கு தான் தங்கிக்கொள்ள சரியான தங்கும் இடம் அமையாமல் வருந்தினாள் இளங்காட்டு மாரியம்மன். தன் மூத்த சகோதரி சமயபுரம் மாரியம்மனிடம் இது குறித்து முறையிட்டாள். ‘‘பழனிக்குக் காவடி சுமந்துகொண்டு உன் ஊர் வழியாக பலர் செல்வார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் புறப்பட்டுச்செல். மலைக்கோட்டை நகரை நீ கடக்கும்போது, உன்னை காளியும் ஒண்டி கருப்புசாமியும் வழி மறிப்பார்கள். அந்த இடத்திலேயே நீ நிலைகொள்வாயாக’’ என தமக்கை ஆலோசனை கூற தங்கையும் பழனி பக்தர்களுடன் சேர்ந்து காவடி சுமந்து சென்றாள். அவர்கள் தஞ்சையைக் கடந்து திருச்சி வந்தனர். கருமண்டபம் அருகே வந்தபோது தங்கையை காளியும், கருப்புசாமியும் வழிமறிக்க, தங்கை அங்கேயே தங்கிவிட்டாள்.

இந்த விபரங்களை கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு சிறுமிக்கு அருள் வந்து கூற, ஊர் மக்கள் ஒன்றுகூடி என்ன சிறுமி அருள்வாக்கு சொன்ன இடத்திலேயே ஓர் அம்மனை பிரதிஷ்டை செய்து, மேலே கூரை வேய்ந்தார்கள். அந்த அம்மனே இளங்காட்டு மாரியம்மன். காலப்போக்கில் குடிசையாய் இருந்த கோயில் கற்கோயிலாய் மாறியது. நூறு ஆண்டுகள் பழைமையான, ஊருக்கு மத்தியில், அழகான இக்கோயிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் இளங்காட்டு மாரியம்மன். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் கருப்பண்ணசாமி குதிரைமேல் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மேற்கு பிராகாரத்தில் பிள்ளையார், நாகர்கள் சந்நதி உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்ணு, துர்க்கை தனித்தனியே சந்நதி கொண்டு அருள் பெருக்குகிறார்கள். வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களை தரிசிக்கலாம்.

ஆலயம் நடுவே உள்ள மகாமண்டபம், அழகிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக காட்சி தருகிறது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயில் துவாரபாலகிகளின் சுதை சிற்பம் அழகாய் மிளிர, கருவறையில் இளங்காட்டு மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் அமைதி தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னை மூன்று கரங்களில் உடுக்கை, கத்தி, கிண்ணம் ஏந்தி, நான்காவது கரத்தில் வரத முத்திரை காட்டுகிறாள். ஒவ்வொரு வைகாசி மாதமும் அன்னைக்கு பத்து நாட்கள் உற்சவம் மிககோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழா வைகாசி மாதம் வளர்பிறையில் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். முதல்நாளன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த ஐந்து நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னை உள்பிராகாரத்தில் திருச்சுற்று உலா வருவதுண்டு. தினசரி இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறும்.

ஏழாம் நாள் திருவிழாவாக மாலை 5 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெறும். 300 பெண்கள்வரை கலந்து கொள்ளும் இந்த பூஜையைக்காண கண்கோடி வேண்டும். பட்டுப்புடவை உடுத்தி மங்களகரமாக வரும் பெண்கள் தங்களுடன் குத்துவிளக்கை மட்டும் கொண்டு வருவார்கள். பூஜைக்கு தேவையான பூ, திரி, எண்ணெய், குங்குமம், அனைத்தையும் ஆலய நிர்வாகம் வழங்கும். எட்டாம் நாள், இரவு 7 மணிக்கு கோரையாற்றிலிருந்து கரகாட்டம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை, சிலம்பாட்டம் இவற்றுடன் கரகம் ஆலயம் வந்து சேரும். ஒன்பதாம் நாள், காலை 7 மணிக்கு அக்னிசட்டி, பால்குடம், மயில் காவடி, அலகு குத்துதல் என சுமார் 1000 பக்தர்கள் கலந்து கொள்ளும் காவடித் திருவிழா நடைபெறும். காலை 8 மணிக்கு பூ மிதித்தல் என அழைக்கப்படும் தீமிதித் திருவிழா நடைபெறும். காலை 10 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு காவு பூஜையும், இரவு இன்னிசை கச்சேரியும் நடைபெறும்.

பத்தாம் நாள் திருவிழாவாக அம்மன் திருவீதி உலா வருவதும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். மறுநாள் நடைபெறும் விடையாற்றி விழாவுடன் உற்சவம் நிறைவுபெறும். திருவிழா நாட்களில் தினசரி அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தின் போது அன்னையை ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்கின்றனர். மூன்று நாட்களுக்கு பின் இந்த வளைல்களை ஆலயத்திற்குவரும் பெண்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். நவராத்திரி நாட்கள் அனைத்தும் அன்னைக்குத் திருவிழா நாட்களே. உற்சவ அம்மனை தினசரி விதம் விதமாய் அலங்காரம் செய்வார்கள். அந் நாட்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல மார்கழி 30 நாட்களும் அன்னைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகை நன்னாளில் சொக்கப்பனை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

ஆடி மாதம் 28ம் தேதி கருப்பண்ணசாமிக்கு அருகே உள்ள ரெட்டமலை கோயிலில் கிடா வெட்டுதலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாபூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணமாக, குழந்தைப் பேறு கிடைக்க, வேலை கிடைக்க என நிறையபேர் இப்படி பிரார்த்தனை செய்து, பலன் பெறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆலயம்வரும் அவர்கள் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி மகிழ்கின்றனர். இங்குள்ள விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு மாத சங்கடகர சதுர்த்தி நாளன்றும், விநாயகர் சதுர்த்தி நாளன்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளியன்று ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட, எண்ணியது எண்ணியபடி ஈடேறும். காலை 6 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

சென்னை, தஞ்சை, கும்பகோணம் ஊர்களிலிருந்து பாதயாத்திரை வருவோர், இரவு இந்த ஆலயத்தில் தங்குகின்றனர். இரவு உணவை அவர்களே தயார் செய்து, உண்டு, ஒய்வெடுத்து காலையில் பயணத்தை தொடர்கின்றனர். தன்னை நம்பி வரும் பக்தர்களின் நலனைக் காப்பதில் இந்த இளங்காட்டு மாரியம்மனுக்கு நிகரில்லை என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருச்சி மாவட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கருமண்டபம் பகுதியில் உள்ளது இந்த ஆலயம். நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply