மன சங்கடம் போக்கும் அம்மன் வழிபாடு..!

0

வாழ்க்கையில் ஒளி கொடுக்கும் தாய் என்று பக்தர்களால் போற்றப்படும் பனசங்கரி அம்மனுக்கு கர்நாடகாவில் பல இடங்களில் கோயில் இருந்தாலும் பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பதாமி நகரில் இருக்கும் பனசங்கரி அம்மன் கோயில் பிரசித்திபெற்று விளங்குகிறது. பெங்களூரு மாநகரில் இருந்து 495 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ளது பதாமி நகரம். சாளுக்கியவர்கள், மராத்தியர்கள், ஹொய்சலர்கள் மன்னர்கள் ஆட்சி நடத்திய இப்பகுதியில் கடந்த 7ம் நூற்றாண்டில் அடர்ந்த இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியான சோலசகுட்டே என்ற இடத்தில் பனசங்கரி அம்மன் கோயில் கட்டப்பட்டது. கேட்ட வரம் கொடுக்கும் தேவி என்றும், ஒளிப்படைத்தவள் என்றும், பக்தர்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் நாயகி என்றும் இவள் போற்றப்படுகிறாள்.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் துர்காமசூராதேவி என்று அம்மனை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. சக்தியின் அம்சமான இவளின் மகிமையை ஸ்கந்தபுராணம் மற்றும் பத்மபுராணத்திலும் பதிவு செய்துள்ளனர். கடந்த 630ம் ஆண்டு சாளுக்கிய மன்னர்களில் ஒருவரான ஜெகதகமலா தலைமையில் கல்யாணபுரியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சமயத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1019ம் ஆண்டில் ராஷ்டிரகுட்ட மன்னர்கள் ஆட்சி காலத்தில் பனசங்கரி மூல கடவுளாகவும், ஒளியாகவும் திகழ்கிறாள் என்பதை உணர்ந்து தீபஒளி தூண் அமைத்தனர். இது இன்றளவும் செங்குத்தாக நின்று பக்தர்களுக்கு காட்சி தருகிறது.

மராட்டியத்தை ஆட்சி நடத்திய பரசுராம் அகளே ஆட்சி செய்தபோது 1750ல் கோயில் புனரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து வைஷ்ணவ, சைவ, ஜெயின் மற்றும் ஷாக்தா மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டுதோறும் அறுவடைத்திருநாள் என்ற பெயரில் ஜனவரி மாதம் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் விழாவில் கர்நாடகம் மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விழாவில் தேர் பவனி, கும்பம் படைத்தல் நடத்தப்படுகிறது. இதைக்காண பக்தர்கள் அலை மோதுவார்கள். விழாவில் சிறப்பம்சமாக 108 காய்கறிகளை கொண்டு சமைத்த உணவை அம்மனுக்கு நைவேத்தியமாக படைப்பார்கள்.

இதற்காக நடத்தப்படும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டால், பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனின் தரிசனம் பெறுவார்கள். அதன்படி இவ்வாண்டு திருவிழா ஜனவரி 20ம் தேதி நடக்கிறது. இவ்விழா ஒரு மாத காலம் நடப்பது சிறப்பாகும். கோயில் திருவிழாவில் பங்கேற்று அம்மனுக்கு பூஜை செய்து வேண்டினால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேளாண் தொழில் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருப்பதால், பொங்கல் வைத்து வழிபாடு செய்து நேர்ந்து கொள்ளும் பக்தர்களையும், வேண்டுதல் நிறைவேற்றியதால் நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்களையும் நிறைவாக காணமுடியும். பனசங்கரி தரிசனம் பெற்ற பின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறந்ததாக பலர் பெருமையாக சொல்லி மகிழ்கிறார்கள். பழங்காலத்தில் சிவபெருமானின் அருள் வேண்டி தவம் கிடைத்த பலர் முனிவர்கள் பனசங்கரி அம்மனின் அருள் பெற்று சிவனின் கிருபையை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாநிலத்தில் பல புண்ணிய ஸ்தலங்கள் இருந்தாலும், பதாமி பனசங்கரி அம்மன் கோயிலுக்கு தனி மகிமை உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். பதாமியில் குடிக்கொண்டுள்ள பனசங்கரி அம்மனை உள்ளூருக்கு கொண்டு வந்து நிலை நிறுத்தும் நோக்கத்தில் முன்னோர்கள் முயற்சி செய்ததின் காரணமாக பெங்களூரு, சிக்கமகளூரு, ஹூப்ளி உள்பட பல இடங்களில் பனசங்கரி அம்மன் கோயில் கட்டி விழா நடத்தப்படுகிறது. பதாமியில் கொண்டாடப்படும் விழாவை போல், பெங்களூருவில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் ஆண்டு தோறும் விழா எடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு பூஜை உண்டு. அன்று மாலை நேரத்தில் அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடுவார்கள். இந்த கண்கொள்ளாக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தினமும் 5 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை, பண்டிகை காலங்களில் சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக ஹோமம், பூஜை ஆகியவை நடத்தப்படுகிறது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply