வல்லமை தரும் வாயு புத்ரன் பற்றி இவை எல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

0

தேவலோக மங்கை புஞ்சிசஸ்தலை என்பவள் தான் பெற்ற சாபத்தின் காரணமாக மலைதேசத்தில் கேசரி என்னும் வானரனுடன் வசித்து வந்தாள். அவ்வாறு வசித்து வந்தபோது அங்கே புஞ்சிசஸ்தலை என்னும் அவளது பெயர் மாறி அஞ்சனை என்ற பெயரால் அழைக்கப்பட்டாள்.

விதிப்பயனால் வாயு பகவானை கண்டு உணர்ந்து அதன்மூலம் கருவுற்று அழகிய ஆண்மகவு ஒன்றைப் பெற்றாள். அவன் திடமான தேகமும், ஞானமும், அறிவு முதிர்ச்சியும் வாய்ந்தவனாக இருந்தான். வாயுவினால் உண்டான அவன் வாயு புத்திரன் என அழைக்கப்பட்டான். அனைத்து சக்திகளும் கைவரப்பெற்ற அவன் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் தாவும் சக்தியும் எங்கும் எதிலும் நுழைந்து சஞ்சரிக்கும் சக்தியும் உடையவனாக விளங்கினான்.

ஒரு முறை சூரியனை ராகு பற்றியது. அது சிவந்த பழம் ஒன்று வானில் பழுத்திருப்பதுபோல் குழந்தை வாயு புத்திரனுக்குத் தோன்றியது. அதனைக் கவர வானில் பறந்தான். அவனது வேகத்தைக் கண்டு பயந்து, ராகு இந்திரனிடம் தஞ்சம் அடைந்தான்.இந்திரனோ காற்றில் வந்த பாலகனைத் தனது வஜ்ஜிராயுதம் கொண்டு அடித்தான். அதனால் அவன் தாடை உடைந்தது. தாடைக்கு அனு என்பது பெயர். இந்திரன் தெரியாமல் அடித்தனால் வாயு கோபித்துக் கொண்டு என்ன செய்வது என அறியாமல் நின்றான். பிரம்மன் முதலிய தேவர்கள் வந்து அனு முறிந்ததனால்” அனுமன் ” எனப் பெயரிட்டு, இவன் சிரஞ்சீவியாக வாழ்வான். பிரம்மாஸ்திரம், தேவாஸ்திரம் போன்ற எந்த அஸ்திரங்களாலும் இவனுக்கு சாவில்லை. இவன் நிரந்தரமானவன் இவனுக்கு அழிவில்லை என வரம் தந்தனர். இவ்வாறு அனுமன் சிரஞ்சீவி வரத்தினைப் பெற்றான்.

அனுமன் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். சூரியனின் ரதத்திற்கு முன்சென்று சூரியனிடம் இருந்து நவவியாகரணம் எனப்படும் ஒன்பது வகை வியாகரணங்களைக் கற்றவன் அனுமன்.அனுமன் சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டிருந்தவன், இருவரும் இளமை காரணமாக ரிஷிகள் வசிக்கும் ஆசிரமங்களுக்குச் சென்று சிறு சிறு குறும்புகள் செய்து வந்தனர். ரிஷிகளுக்கு அது மனவருத்தத்தை அளித்தது. ரிஷிகள் “உன்னைப் புகழும்போது மட்டும் உனக்கு உன் பலம் தெரியும். இல்லாவிடில் உன் தகுதி திறமை பற்றி நீயே அறிய மாட்டாய்.. எப்போது நீ ராமபிரானைக் காண்கின்றாயோ அப்போது முதல் உன் பலம் உன்னால் உணரப்படும்” என சபித்தனர். அனுமன் ராமனை வனவாசத்தில் சந்தித்தது முதல் அவன் தன் பலத்தினை உணரத் துவங்கினான். ராமன் சொற்படி ராமனின் கணையாழியுடன் சீதையை தேடிச் சென்றான்.

பாலைவனத்தில் அழல் நடுவே புகுந்து சுவயம்பிரபைக்கு ஏற்பட்ட சாபத்ததை நீக்கினார். சம்பாதி மூலம் வழியறிந்து கொண்டு மகேந்திர கிரி தாவி அங்கு தடுத்த மைந்நாகத்தினைத் தலைகீழாகத் தள்ளினான். சுரசை என்பவள் வாயில் புகுந்து வெளிவந்தான். வழியில் அங்காரதாரை, காயக்கிரகி என்கிற அரக்கியர்களைக் கொன்றான். இலங்கை பவள மலையை அடைந்து காவல் காத்த இலங்கினி என்னும் அரக்கியை அறிந்து, அவள்மூலம் சீதை இருக்கம் இடத்தினை உளவறிந்து, கண்டு, பணிந்து கணையாழி, தந்து, தன் சுய உருவைக் காட்டி சீதையிடம் சிரஞ்சீவித் தன்மை பெற்று வாழ்க! என ஆசி பெற்றான். அவளிடம் இருந்து சூளாமணியைப் பெற்ற பிறகு அசோக வனத்தை அழிக்கத் துவங்கினான்.

கிங்கரர்களை வதைத்து, சம்புமாலி பஞ்ச சேனாபதிகள், அட்சயகுமாரன் முதலியோரைக் கொன்றவன் . இந்திரஜித் விட்ட பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு, தன்னை ஆசனம் தந்து கௌரவப் படுத்தாத ராவணன் எதிரில் தன் வாலினைச் சுருட்டி ஆசனமாகக் கொண்டு அதன் மீது அமர்ந்து பதில் சென்னவன். ராவணன் அவன் வாலில் தீ வைக்கக் கூறினான். அத் தீயைக் கொண்டு இலங்கையை எரியச் செய்து வந்த வழியே திரும்பி ராமனைத் தொலைவிலேயேக் கண்டு, “கண்டேன் சீதையை” என்னும் நல்ல சொல்லுடன் சூளாமணியைக் கொடுத்து விவரங்கள் கூறினான். இலங்கை யுத்தம் துவங்கியது. ராமபிரானுக்கு சீடரானர். துன்முகனைக் கொன்றான். யுத்தத்தின்போது லட்சுமணனின் துயரத்தை அறிந்தது. ராவணன் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என எண்ணினான். அதனால் ராவணன் முன்பு போய் நின்று தன்னை பலம் கொண்ட மட்டும் குத்தச் சொன்னான்.

அவன் குத்த அது அனுமன் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்படிக் குத்தக்கூடாது. இப்படிக் குத்த வேண்டும் என ராவணன் வயிற்றில் குத்தினான். அவன் பறந்து சென்று தொலைவில் மோதினான். உலகைத் தாங்கும் 8 யானைகளின் கொம்புகளும் தேகத்தில் புதையுண்டன. அவை ராவணன் கனம் தாங்காமல் முறிந்து உடைந்து உதிர்ந்தன. ராவணனும் மூர்ச்சித்து விழுந்தான். போரில் சாய்ந்த லட்சுமணனை குட்டிபோல் தூக்கிச் சென்றவன். சுக்கிரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த வேலினைப் பிடித்து உடைத்து எறிந்தான். அதிகாயன், தோவந்தகன், திரிசிரன், நிகும்பன், துமஷன், வச்சிர நந்தன், அகம்பன் என்னும் அசுரர்களையும் வதைத்தான். லட்சுமணன் முதலானோர் மயக்கமுற்றபோது சஞ்சீவி மலையை வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து மூர்ச்சை தெளிவித்தவன்.

ராமாயண யுத்தத்தில் ராமன் வென்று மீண்டும் அயோத்திக்குச் சென்றான். இந்த நாட்களுக்குள் வரவில்லை என்றால், அக்னியில் உயிர் துறப்பேன் எனக்கூறி அக்னி வளர்த்து சுற்றி வந்தனர். பரதனும், சத்ருக்னனும், ராம லட்சுமணர்கள் புறப்பட்டு விட்டார்கள்! வந்து கொண்டு இருக்கின்றார்கள்!! எனக்கூறி அவர்கள் தீயில் இறங்காது தடுத்த அருளாளன் அனுமன். விபீஷணன் அனுமனது பெருமைகளையும், இலங்கையில் செய்து வந்த பராக்கிரமங்களையும் ராமனுக்குக் கூறினார். ராமனும் கேட்டு மகிழ்ந்து “பிரம்மபதம்” ராமனால் அளிக்கப் பெற்றார். இவைகள் எல்லாம் நமக்கு ராமயணத்தின் மூலம் அறியப்படும் செய்திகள் ஆகும். இவைத்தவிர தனிப்பட்ட முறையிலும் போற்றுதலுக்கும், பாராட்டுவதற்கும் உரியவன் அனுமன்.

பஞ்ச பூதங்களால் அழியாதவர். சுத்தமான பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு திருமணமோ, பெண்கள் தொடர்போ இல்லாமல் இருந்தவர். மாருதி, ஆஞ்சனேயன், கேசரி புத்திரன், வாயு புத்திரன் என்னும் வேறு பெயர்களும உண்டு. சுந்தரன் என்னும் இவன் பெயரால் சுந்தரகாண்டம் தோன்றியது.
சஞ்சீவிராயனாகச் சென்று சஞ்சீவி கொண்டு வரச் செல்லும்போது கால நேமியை வதைத்தார். கொண்டு வரும்போது எதிர்த்த மால்யவந்தன் என்பவனை கர கரவென சுழற்றி கடலில் எறிந்தவர். சதகண்ட ராவணன் என்பவன் சுக்ரீவனையும், விபீஷணனையும் வென்றவன். வென்றதற்கு அடையாளமாக அவர்களை காலால் எட்டி உதைத்து அகௌரவப்படுத்தினான். தகவல் அறிந்த அனுமன் அவனது பலமான வாயினால் வருவித்து தண்டனை அளித்துத் துரத்தி விட்டவன்.

சதகண்டனின் உதிரத்தில் பிறந்த சதகண்டர்களை வதைக்கக் குரங்கு, நரசிம்மம், கருடன், வராகம், குதிரை ஆகிய 5 முகம் உடைய பஞ்சமுக ஆஞ்சனேயராக உருக்கொண்டு அவர்களை வதைத்தான். ராமனால் அதற்காக ரத்னமாலை பரிசாக அளிக்கப்பட்ட சிறப்பு உடையவன். சிரஞ்சீவித் தன்மை பெற்றதால் ராமாயணக் காலத்தினைத் தொடர்ந்து கிருஷ்ணவதாரம் நடைபெறும் போதும் வாழ்ந்தவன். நாராயணனைச் சுமந்து வருவதால்தான் உயர்ந்தவன் என்ற இறுமாப்பில் கருடன் அனைவரையும் ஏளனமாகப் புறந்தள்ளினான். அவனது கர்வத்தினை தன் வாலை ஆட்டி அவனை நிலைகுலையச் செய்து அடக்கியவன். நாரத வீணை என்னும் வீணையை இசைக்க ராமனின் புகழைப் பாடுவதில் வல்லவன் அனுமன். கற்பாறையின் எதிரில் நின்று நாரதவீணை இசைத்து அந்தக் கல்லும் திரவ நிலையில் உருக திரவத்திலும் தாளமிட்டு பின்னர் மீண்டும் இறுகச் செய்யும் சக்தி வாய்ந்த அனுமன்.

கிருஷ்ணாவதார காலத்தில் கர்வம் கொண்ட சத்திய பாமாவின்கர்வத்தை அடக்க முடிவு செய்தான் அனுமன். ருக்மணியை சீதையாகவும், கண்ணனை ராமனாகவும் கண்டு நாரத வீணை வாசித்து கல்லை உருக்கி, தானம் செய்து மீண்டும் இறுகச் செய்தான் அனுமன். சகலகலாவல்லி சத்தியபாமாவை மேற்கண்ட செயலைச் செய்யக்கூறி, இயலாமல் போய் கர்வம் அடக்கியவன் அனுமன். ராமனின் வாகனமாய் இருந்தவன். கும்பகர்ணன் மீது மலைகளைப் பெயர்த்து எறிந்தும் அவனது அஞ்சாத நிலையினைக் கண்டு இப்பேர்பட்ட வீரனும் உண்டோ! ஆனால் இருக்க வேண்டிய இடம் இலங்கை அல்லவே என சலித்தவன் அவன். பீமன் புஷ்ப யாத்திரை மேற்கொண்டு நாடு நாடாக சென்றான். தன்னை வெல்பவர் யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் சென்றான். அவன் செல்லும் வழியில் படுத்துக் கொண்டான். வாலை பெரிதாக்கி நீட்டிக் கொண்டான். வழியில் கிடப்பவனை நகரச்சொல்லி பீமன் சத்தம் கொடுத்தான்.

என்னால் முடியாது வேண்டுமானால் பாதையில் கிடக்கும் என் வாலை நகர்த்தி விட்டுச் செல் என பதில் கூறினான். பீமனும் முடியும் மட்டும் முயன்று வாலை நகர்த்த முடியாத நிலையில், ராமநாமத்தை பீமன் சொல்ல, தானே வால் பாதையை விட்டு நகர்ந்தது கண்டு கர்வம் அடங்கியது மட்டும் இல்லாமல் அனுமனிடம் பீமன் நட்புக் கொண்டான். அர்ஜுனன் ரதத்தின் கொடியாகவும் இருந்தான். அனுமன் திடசிந்தனைகள் உடையவன். மனோதைரியம் மிக்கவன். எண்ணியதை முடிக்கும் மன நிலையையும் சக்தியும் கைவரப் பெற்றான். மனம் செல்லும் வேகத்தில் செல்லும் சக்தியைப் படைத்தவன். பலசாலி. புத்திக்கு அதிபதி. வேண்டியதை அருள்பவன். அன்பிற்குக் கட்டுப்பட்டு அஞ்சலி செய்வான். அநீதியை அடித்து அழிப்பான். ராமனின் காலடிகளைத் தாங்கியவன், கிருஷ்ணாவதார காலத்திலும் ஜீவித்து இருந்ததோடு தற்காலத்தும் எண்ணிய நல்லன எல்லாம் தரும் காலம் கடந்து யுக புருஷனாக விளங்குகிறான். வணங்கும் பக்தர்களுக்கு வல்லமை தருவான் இந்த வாயு புத்ரன்.

ஆஞ்சநேயரில் யோக ஆஞ்சநேயர் வல்லமை கொண்டவர். சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு, மேத்தா நகரில் உள்ள ஔவையார் தெருவில் யோக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை 6.45 முதல் 7 மணி வரை கோபூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. பகல் 10.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு ஸ்வாமிக்கு சயன பூஜை நடைபெறுகிறது. அப்போது ஊஞ்சலில் ஆஞ்சநேயரின் உற்சவ விக்ரகத்தை வைத்து தூங்க வைக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த ஆஞ்சநேயரை வழிப்படுபவர்களுக்கு மனபலம் கூடும், வல்லமை கிடைக்கிறது. எதையும் சாதித்துக்காட்டும் திறன் உருவாகுகிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply