“எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன்!” – பாபா மகிமை

0

இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. கடவுளால் உருவாக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்குள்ளும் கடவுள் வாசம் செய்கிறார். சாயிநாதர் பாபா, `நான் எந்த உயிரின் வடிவத்திலும் எனது பக்தர்களைத் தேடி வருவேன்’, `எவன் ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் என்னைக் காண்கிறானோ அவனே என்னை முழுவதுமாக அறிந்தவன்’ என்று தன் பக்தர்களுக்குக் கூறுகிறார்.

தாம் கூறியவற்றை பாபா எப்படித் தம் பக்தர்களுக்கு நிரூபித்திருக்கிறார் என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
அந்தப் பெண் பாபாவின் பக்தை. ஷீரடியில் தங்கியிருந்தாள். ஒருநாள் மதியவேளையில் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் வீட்டின் முன்னர் ஒரு நாய் பசியுடன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். நாயின் மீது இரக்கம் கொண்டவளாக, அதற்கு ஒரு ரொட்டித்துண்டை எடுத்து வீசினாள். அந்த நாயும் ரொட்டித்துண்டை உண்டுவிட்டு நன்றியுடன் அங்கிருந்து சென்றது. பின்னர், அவள் அவரை தரிசிக்க துவாரகாமாயிக்குச் சென்றாள். அவளைக் கனிவுடன் நோக்கிய அவள் தனக்குச் சுவையான ரொட்டித்துண்டை அளித்து, தனது பசியைப் போக்கியதற்கு நன்றி கூறினார்.

அந்த பக்தைக்கு எதுவும் விளங்கவில்லை. அவள் பாபாவிடம், தான் அவரைப் பார்க்கவே இல்லை என்றும் பின்னர் எவ்வாறு ரொட்டித்துண்டை அளித்திருக்க இயலும்? என்றும் கேட்டாள். இதைக் கேட்டு பாபா புன்னகைத்தபடி தொடர்ந்தார்… “இன்று பகல் உன் வீட்டுக்கு வந்த நாய் நானேயாவேன்; நீ அதற்கு ரொட்டித்துண்டைப் போட்டதன் மூலம் என்னுடைய பசியை ஆற்றினாய்; நீ இன்று மிகவும் நல்ல காரியம் செய்தாய்; இதையே நீ தொடர்ந்து செய்; அது உன் வாழ்வில் சிறப்பினை அளிக்கும்” என்றார்.

ஷீரடியில் லக்ஷ்மிபாய் என்பவர் பாபாவின் தீவிர பக்தை. ஒருமுறை அவளிடம் தனக்கு மிகவும் பசியாக இருக்கிறது என்றும், தனக்கு ஏதேனும் உணவு சமைத்து எடுத்து வரும்படியும் கேட்டார் பாபா. உடனே லக்ஷ்மிபாய் வீட்டுக்கு விரைந்து ரொட்டியையும் காய்கறியையும் தயாரித்துக்கொண்டு வந்தாள். அவளிடமிருந்து அந்த உணவினைப் பெற்றவர், அதை தன் அருகே இருந்த நாய்க்குக் கொடுத்தார். இதைப் பார்த்த லக்ஷ்மிபாய்க்கு மிகுந்த கோபம் வந்தது. அவளுடைய கோபத்தைத் தெரிந்துகொண்டு, கோபத்தைத் தணிக்கும்விதத்தில், ”அனைத்து உயிர்களிலும் இருப்பது நானே; நாயும் மனிதரும் வெவ்வேறாக இருந்தாலும், ஆத்மா என்பது ஒன்றே. அதன் பசியைப் போக்கியதன் மூலம் இன்று நீ என் பசியைப் போக்கினாய்” என்றார்.

ஷீரடியில் இருந்த மற்றொரு பெண்மணி, தான் தினமும் வீட்டில் சுவையான உணவு தயாரித்து எடுத்துக்கொண்டு துவாரகாமாயிக்கு வந்து பாபாவுக்குப் பரிமாறுவது வழக்கம். பாபாவை தன் வீட்டுக்கு உணவருந்த வரும்படியும் அழைப்பாள். அவருப் திருவடிகள் தன் வீட்டில் பட வேண்டும் என்பதில் அவளுக்குத் தணியாத ஆசை. அப்படி ஒரு நாள் அவள் அழைத்தபோது பாபாவும் வருவதற்குச் சம்மதித்தார். அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண்மணி பாபாவுக்காகப் பல்வேறு பதார்த்தங்களைத் தயாரித்தாள். அப்போது, அவள் வீட்டுக்குள் நாய் ஒன்று நுழைந்தது. அது பாபாவுக்காகத் தயாரித்துவைத்திருந்த பதார்த்தங்களை தூய்மையற்றதாக மாற்றிவிடுமோ என்று பயந்த அவள், விறகுக்கட்டையை எடுத்து அந்த நாயின் மீது எறிந்தாள். நாயும் அங்கிருந்து ஓடியது. அன்று பாபா அவள் வீட்டுக்கு வராமல் போகவே, அவள் அவரைக் காண துவாரகாமாயிக்குச் சென்றாள். அவளைக் கண்ட பாபா, தாம் அவள் வீட்டுக்கு உணவருந்த வந்ததாகவும், அவள் எரியும் விறகுக்கட்டையைக் கொண்டு தன்னைக் காயப்படுத்தியதாகவும் கூறினார். அந்தப் பெண்ணும் தன் தவறை உணர்ந்து பாபாவிடம் மன்னிப்புக் கோரினாள்.

ஹன்ஸ்ராஜ் என்னும் பக்தர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் தன் மனைவியுடன் ஷீரடிக்கு வந்து பாபாவின் அருளால் நோயிலிருந்து விடுபட்டார். ஆனால், புளிப்பு, காரமான பதார்த்தங்கள், தயிர் முதலியவற்றை அவர் உண்ணக் கூடாது என்று கூறியிருந்தார் பாபா. ஹன்ஸ்ராஜுக்கு தயிர் மீது அதிக விருப்பமிருந்தாலும், அவர் தயிரை உண்ணாதபடி பாபா தடுத்து வந்தார். தினமும் ஹன்ஸ்ராஜும் அவரது மனைவியும் துவாரகாமாயிக்கு வரும் நேரத்தில், பாபா பூனையின் ரூபத்தில் அங்கு சென்று தயிரைக் கொட்டிவிடுவது வழக்கம்.

இப்படி தினமும் தனது உணவுக்காக வைக்கும் தயிரைக் கொட்டிவிடுவதால், அந்தப் பூனையின் மீது மிகுந்த கோபம் கொண்டார் ஹன்ஸ்ராஜ். ஒரு நாள் துவாரகாமாயிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவர், அந்த பூனையைக் கடுமையாக அடித்தார். பின்னர், நிம்மதியுடன் மசூதிக்கு சென்றவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஹன்ஸ்ராஜ் தன்னை மிகவும் கடுமையாக அடித்ததாகக் கூறிய பாபா, தனது மேலாடையை விலக்கிக் காண்பித்தார். அவரின் முதுகில் காயங்கள் இருந்தன. இதைக் கண்ட ஹன்ஸ்ராஜ் மிகவும் வேதனையடைந்தார். பூனையின் ரூபத்தில் வந்தவர் பாபாதான் என்பதை அறிந்த ஹன்ஸ்ராஜ் தன் தவற்றை உணர்ந்து மிகுந்த வேதனையடைந்தார். மேலும், அன்று முதல் பாபா சாப்பிடக் கூடாது என்று குறிப்பிட்டிருந்த உணவுகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்.

இப்படி பாபா, தான் அனைத்து உயிர்களிடத்தும் இருப்பதை தனது பக்தர்களுக்கு உணர்த்தினார். நாமும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டி பாபாவின் அருளைப் பெறுவோம்!- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply