இலங்கையில் எரிபொருள் விலையில் நேற்றைய தினம் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலை திருத்தம் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே எரிபொருள் விலையில் இன்று அல்லது நாளை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



