சென்னை அண்ணாசாலை அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்.

0

தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்ஊழியர்கள் இன்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓய்வுபெற்ற ஊழியர்கள் தாங்கள் அணிந்து வந்த சட்டை பனியன் ஆகியவற்றை கழற்றிவிட்டு அரை நிர்வாணத்துடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் நடந்தது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:- மின்சார வாரியத்தில் பணி செய்து 90 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று ஓய்வூதிய பலன்களை பெற்று வருகிறோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின் ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் ஓய்வுபெற்ற மின் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு அறிவித்த உடனேயே ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.

ஆனால் 10 மாதமாக அக விலைப்படி உயர்வு வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. ஓய்வூதியதாரர்களின் மகள் விவாகரத்து உதவி, மாற்றுத்திறனாளி குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றை நிறுத்திவிட்டனர்.

எங்களது உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன.

வேறு வழியில்லாமல் தான் அரசின் கவனத்தை ஈர்க்க இப்போராட்டத்தை நடத்துகிறோம்.

மேலும் தாமதப்படுத்தினால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply