தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய பிறகு அதன் மீது உறுப்பினர்கள் 2 நாட்கள் விவாதம் நடந்தது.
அந்த விவாதங்களுக்கு பதில் அளித்தும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார்.
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் கடந்த 8-ந் தேதி மீண்டும் கூடியது.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் அந்த சட்டசபை கூட்டம் முடிந்தது.
இதைத் தொடர்ந்து சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதமே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் பட்ஜெட் கூட்டம் இந்த மாதம் தொடங்குவது அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகிறது.
பட்ஜெட் தாக்கால் செய்யப்படுவதற்கு முன்பாக முக்கிய துறைகளின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தொழில்துறை மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
தொழில் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் பிறகு மதியம் வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளை அழைத்தும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து இன்னும் சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்க முடிவு செய்துள்ளார்.
ஓரிரு நாட்கள் வரிசையாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.
இதன் பிறகு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தயாரிப்பதற்கான பல்வேறு ஆலோசனை வழங்குவார்.
இறுதியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு அதிலும் பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் முழுமையாக தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் மார்ச் முதல் வாரத்திற்குள் செய்து முடிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து சட்டசபையில் எந்த தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூடும் தேதியை முறைப்படி அறிவிப்பார்.
பட்ஜெட் சம்பந்தமான ஆயத்த பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளதால் அனேகமாக மார்ச் 10-ந் தேதி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



