எரிபொருட்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவ்வாறு தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை நிதி அமைச்சு உதாசீனம் செய்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் உள்நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இருப்பினும், தமது கோரிக்கைக்கு நிதி அமைச்சிடம் இருந்து இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 108 முதல் 109 டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிபொருட்கள் விலையேற்றத்திற்கு அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மாதம் முழுவதும் விலை அதிகரிக்கப்படாவிட்டால் ஒரு லீற்றர் பெற்றோலில் 48 ரூபா 30 சதமும், ஒரு லீற்றர் டீசலில் 15 ரூபா 68 சதமும் நட்டம் ஏற்படும் என பெற்றோலிய வளக்கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



