தீபாவளி பண்டிகை….!!!

0

தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.

தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.

தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்தங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.

இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.

முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.

அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது. தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.

தீபாவளி, ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

Leave a Reply