சனிதோஷம் நீக்கும் பெரிய ஆஞ்சநேயர்

0

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஆஞ்சநேயர் கோயில். ஆந்திரா, தமிழகம், கர்நாடகா என பல்வேறு தென்னக பகுதிகளை சேர்ந்த திரளான குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறார். மூலவர் சுயம்பாக சுமார் 11 அடி உயரத்தில் கம்பீரமாக கிழக்குநோக்கி பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இலங்கையை ஆண்ட ராவணேஸ்வரன் சிவபெருமானின் தீவிர பக்தர். கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் வரம் பெற்ற ராவணன் தீய எண்ணம் கொண்டு, சீதாதேவியை கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தார். சீதாதேவியை மீட்க ராமபிரான் இலங்கை மீது போர் தொடுத்தார். கடும் போரில் லட்சுமணன் மயக்கமுற்று சஞ்சீவி மூலிகை கிடைத்தால் மட்டுமே பழைய நிலையை அடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த ஆஞ்சநேயர், சஞ்சீவி மூலிகை உடைய மலையை பெயர்த்து வருவதை அறிந்த அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒரு திட்டம் தீட்டினார். ராவணனிடம் சுக்கிராச்சாரியார், ‘சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு வந்தால் உன் மகன் இந்திரஜித்தின் அழிவு நிச்சயம். இதனால், உன்னிடம் அடிமைப்பட்டு கிடக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான சனியை விடுவித்து அனுமனை பிடித்துகொள்ள கட்டளையிடு. சனி பார்வை பட்டால் துன்பம் ஏற்பட்டு சஞ்சீவி மலையுடன் அனுமன் வர இயலாத நிலை ஏற்படும்’ என தெரிவித்தார். இதை ஏற்ற ராவணன் உடனே தன் அரியணைகீழ் படிக்கட்டாக கிடந்த சனி பகவானை விடுவித்தான்.

அனுமனை வழிமறித்த சனி பகவான், ராவணனின் உத்தரவை கூறி அனுமனை பிடிக்க முயன்றார். ஆனால், ராமநாமத்தை உச்சரித்தபடி அனுமன் சஞ்சீவி மலையை சனிபகவானின் தலைமீது வைத்தார். இதனால் பாரம் தாங்காத சனீஸ்வரன் துடிதுடித்து பதறினார். அப்போது ஆஞ்சநேயர் சனீஸ்வரனை தனது காலால் மிதித்து அழுத்தினார். இதனால், மேலும் வலி ஏற்பட்டு சனீஸ்வரன் ஆஞ்சநேயரிடம் மன்னிப்பு கோரினார். அதற்கு ஆஞ்சநேயர், ‘சனீஸ்வரரே ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் உம்மை விடுவிக்கிறேன்’ என பதிலளித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட சனீஸ்வரனிடம், ‘ஸ்ரீராம நாமத்தை உச்சரித்தபடி என்னை தரிசித்து மகிழும் எந்த ஒரு பக்தரையும் நீ துன்புறுத்தக்கூடாது’ என நிபந்தனை விதித்தார்.

அவ்வாறே நிபந்தனைக்கு கட்டுப்படுவதாக சம்மதித்ததால் சனீஸ்வரன் விடுவிக்கப்பட்டார். இவ்வாறாக சனீஸ்வரனின் ஆணவத்தை அடக்கிய தலமாகும் இது.
இங்கு 11 அடி உயர சுயம்பு ஆஞ்சநேயர் தனது காலால் சனீஸ்வரனை மிதித்தபடி அருள்பாலிக்கின்றார். இவ்வாறாக அருள்பாலிக்கும் தலம் இது ஒன்று மட்டுமே என புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் இடது திருக்காலினை முன் வைத்துள்ளார். அவரது வலது திருக்கால் பூமியிலிருந்து சற்றே தூக்கியுள்ளது. சனி பகவான் ஆஞ்சநேயரின் கமல திருபாதத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். சனியின் தலை அவரின் இடது திருபாதத்தின் கீழ் அகப்பட்டுள்ளது, சனியின் கால்கள் அவரின் வலது திருபாதத்தின் கீழ் உள்ளது. சனி பகவானின் முகம் யாரையும் நோக்காமல் பூமியை நோக்கியுள்ளது.

ஸ்தல விருட்சமாக கோயில் பிரகாரத்தில் வலப்புறத்தில் நெல்லிமரம் உள்ளது. கோயில் நுழைவாயிலில் சிறிய திருவடி, பெரியதிருவடி ஆகியோர் நின்றபடி கைகூப்பி வரவேற்கின்றனர். பக்தர்களின் குறைகளான குழந்தை பாக்கியமின்மை, நோயால் அவதி, கடன் தொல்லை ஆகியவை இத்திருக்கோயிலில் வந்து வழிபடுபவர்களுக்கு நீங்குவது கண்கூடான ஒன்று. சனிதோஷம் உள்ளிட்ட தோஷமுள்ளவர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதால் தோஷ நிவர்த்தி பெற்று பலன் அடைகின்றனர். இதற்காக கோடி தீப பிரார்த்தனை செய்தும், முடி காணிக்கை கொடுத்தும் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா, புரட்டாசி மாத பெருவிழாவில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்களது குறைகளை தீர்க்கும் பெரிய ஆஞ்சநேயரை வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply