வாழ்விற்கு தேவையான செல்வத்தை வழங்கும் அட்சய திருதியை

0

அ ட்சய திருதியை நன்னாளான தினம் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியானது மிகவும் அதிகமாக இருக்கும் “அட்சயா” என்னும் சொல் “அழியாதது” என்ற பொருளை உணர்த்துகிறது. “திருதியை” என்னும் சொல் சந்திரனின் மூன்றாம் பிறை நாளைக் குறிக்கிறது.

எனவே அட்சய திருதியை நாளில் நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலோ அல்லது தங்கம், வெள்ளி, வீடு, மனை போன்றவற்றை வாங்கினாலோ அது காலப்போக்கில் சந்திரனானது வளர்வதை போல வளருமே தவிர அழியாது என்பது ஐதீகம்.

மனிதர்கள் அனைவருக்கும் தேவையானது பணம். பை நிறையப்பணம் இருப்பவர்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனும் வாக்கின்படி, செல்வம் இல்லாதவர்களை சக மனிதர்களும் ஏற்றுக் கொள்ள தயங்குவதை கண்கூடாக காணமுடிகிறது.

உழைப்பும் முயற்சியும் இருந்தாலும்.. அதோடு செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியின் அருள் மிகுந்த கடைக்கண் பார்வையும் கிடைத்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் நம் முன்னோர்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியை பூஜிக்க ஏற்ற சிறப்பான நாளாகத் தேர்ந்தெடுத்தது அட்சய திருதியை நாளைத்தான். தமிழ் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பின் வளர்பிறையில் வருவது அட்சய திருதியை. திதிகளில் சிறப்புமிக்க திதிகளான பவுர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதிகளின் வரிசையில் இந்த அட்சய திருதியை திதியும் இணைந்து, வாழ்விற்கு தேவையான செல்வத்தை வழங்கும் சிறப்பை பெற்று மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

‘சயம்’ என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்பது பொருள். அட்சயம் என்றால் குறைவில்லாதது, அள்ள அள்ள குறையாதது என்று அர்த்தம். பஞ்சபாண்டவர்களுக்கு சூரியனால் வழங்கப்பட்ட அட்சயப்பாத்திரத்தில், எடுக்க எடுக்க குறையாத உணவு கிடைத்தது போன்று, இந்த அட்சயத்திருதியை நன்னாளில் மகாலட்சுமியை வணங்கி என்றும் குறையாத செல்வங்களை பெறலாம்.

வேதகால பஞ்சாங்கத்தில் அட்சய திருதியை மிகச்சிறந்த நன்னாளாக கூறப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்யும் நற்செயல்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். அதாவது தான தர்மங்கள் செய்யும்போது அதிக புண்ணியமும் நல்வாழ்வும் கிடைக்கும் என்பார்கள். அட்சய திருதியை தினத்தன்று அன்னதானம் செய்யலாம். அறக்கட்டளைக்கு நிதிஉதவி செய்யலாம். எந்தவொரு தான, தர்ம செயல்களையும் செய்வதற்கு அட்சய திருதியை நாள் ஒரு துவக்கமாக அமையட்டும்.

இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி மற்றும் வைர, பிளாட்டின நகைகள் வாங்குவதற்கு முக்கியமான காரணம் இன்றைய தினம் வாங்கப்படும் நல்ல பொருள்கள் முடிவில்லாமல் தடையில்லாமல் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் அதுமட்டுமல்லாமல் வாழ்க்கை எப்பொழுதும் செழுமையாகவே இருக்கும். அதுபோல, அட்சய திருதியை அன்று நாம் வாங்கும் பொருள் அல்லது செல்வம் நம்மிடம் பன்மடங்கு பெருகும்.

லட்சுமி பூஜை

அட்சய திருதியை அன்று மகாலட்சுமி பூஜை செய்தால், நமது இல்லத்திற்கு மகாலட்சுமி வந்து சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள் என்பது ஐதீகம். லட்சுமியை வணங்கும்போது வெள்ளை உணவுகள் வைத்து படைப்பது சிறப்பு. முக்கியமாக பால் பாயாசம், ரவா லட்டு இடம் பிடிப்பது அவசியம். வரலட்சுமி நோன்பு மற்றும் தீபாவளி பூஜையின்போது செய்யப்படும் லட்சுமி பூஜை போன்றே அவரவர் வசதிக்கு ஏற்ப லட்சுமி பூஜை செய்யலாம். சுமங்கலிக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட் போன்றவையுடன் காசு வைத்து தானம் செய்யலாம். சிலர் தற்போது வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் போன்றவற்றைக்கூட தானம் செய்கின்றனர்.

அட்சய திருநாளில் தங்கம் வாங்க…

இவ்வருடம் அட்சய திருதியை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கம் வாங்கி மென்மேலும் பொன், பொருள் வளர்ச்சியும், குபேர சம்பத்தும், ஸ்ரீமகாலட்சுமியின் கடாட்சமும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். நேர்மையாக சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்ததை மேலும், மேலும் பெருக்கி கொள்ள கூடியதாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்படி சம்பாதித்த பொருளை பிறருக்கு கொடுத்து நம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுவே நிறைவான வாழ்வை கொடுக்கும். இதை வலியுறுத்துவதே அட்சய திருதியை போன்ற நாட்களாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply