சீரடி சாய்பாபாவின் மனதில் இடம் பிடித்தவர்கள் பற்றி தெரியுமா..?

0

சீரடி சாய்பாபாவுக்கு சீடர்கள் என்று யாருமே கிடையாது. அவர் யாரையும் தன் சீடராக ஏற்கவில்லை. லட்சோப லட்சம் பக்தர்களில் யாரையும் அவர் சீடராக தேர்வு செய்து அறிவிக்கவும் இல்லை.

உண்மையில் சொல்லப் போனால் பாபாவுக்கு சீடராக இருக்கும் தகுதி இந்த உலகில் யாருக்குமே இல்லை. வான் மண்டலத்தில் உள்ள சூரியனுக்கு, குட்டி நட்சத்திரங்கள் எப்படி ஈடாக முடியும்?

சீரடியில் சாய்பாபா வாழ்ந்த 60 ஆண்டுகளில் எத்தனையோ பேர், அவரது சீடராக முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

அப்படி வந்தவர்களில் குசபாவ் என்பவரும் ஒருவர். இவருக்கு கிருஷ்ணாஜி காசிநாத் கோஷி என்ற பெயரும் உண்டு.

இவருக்கு சிறு வயதிலேயே மந்திர – தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக தத்த மகராஜ் என்பவரிடம் சென்று சீடராக சேர்ந்தார்.

தத்த மகராஜ் எல்லாவித யோகப் பயிற்சிகளையும் குசபாவுக்கு அளித்தார். ஆன்மிக பழக்க – வழக்கங்களில் நெறிப்படுத்தினார். குசபாவை மிகச் சிறந்த சீடர்களில் ஒருவராக மாற்றினார்.

என்றாலும் குசபாவ் ஆழ்மனதில் அசாதாரண சக்திகளையும் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. கையை உயர்த்தினால் தாம் நினைக்கும் பொருட்கள் எல்லாம் அதில் வர வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக அவர் தன் குருவை வற்புறுத்தினார். குரு அவரைக் கண்டித்தார். தரக்குறைவான சக்திகளை தெரிந்து கொள்வதால் தீய வழியில் செல்ல நேரிடும் என்று எச்சரித்தார்.

என்றாலும் குசபாவ் விடவில்லை. தொடர்ந்து தினமும் வலியுறுத்தினார். இதனால் குரு ஓரளவு அவருக்கு இணங்க வேண்டியதாயிற்று.

குசபாவுக்கு அவர் சில ரகசிய மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். சில சக்திகளை ஒரு இரும்பு வளையத்தில் ஏற்றிக் கொடுத்தார். குசபாவ் அந்த இரும்பு வளையத்தை தன் கையில் அணிந்து கொண்டார்.

ரகசிய மந்திரங்களை உச்சரித்ததும் அவருக்கு அந்த சக்தி கிடைத்தது. அவர் கையை உயர்த்தியதும் வெட்ட வெளியில் இருந்து அவர் கையில் இனிப்புகள், பழ வகைகள் தோன்றின.

அப்படி வருபவைகளை குசபாவ் ஒரு போதும் சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனவே அவர் தன் கையை உணர்த்தி வரவழைக்கும் தின்பண்டங்களை மற்றவர்களுக்கு வினியோகம் செய்தார்.

இந்த வித்தையை கற்றபோது குசபாவுக்கு சுமார் 20 வயது இருக்கும். அந்த சமயத்தில் ஒருநாள் அவரது குரு இமயமலைக்கு புறப்பட்டார்.

அவர் குசபாவிடம், “இனி நான் உனக்கு குரு இல்லை. உனக்கு சீரடியில் உள்ள சாய்பாபாதான் குரு. இன்றே சீரடி புறப்படு. சாய்பாபாவை சந்தித்து ஆசி பெறு. அவர் தான் உன்னை மேம்படுத்துவார்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

1888-ம் ஆண்டில் ஒருநாள், குசபாவ் சீரடிக்கு புறப்பட்டுச் சென்றார். பாபா வீற்றிருந்த மசூதிக்கு சென்றதும் அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

மசூதி வாசலில் காலடி எடுத்து வைத்ததுமே பாபா அளவு கடந்த கோபத்துக்குள்ளானார் “உள்ளே வராதே அங்கேய நில்” என்றார்.

குசபாவ் எதுவும் புரியாமல் நின்றார். “கையை உயர்த்தியதும் தின்பண்டங்களை வரவழைக்கும் செயலை உடனே நீ நிறுத்த வேண்டும். அந்தச் செயல் திருட்டுக்கு சமமானது. அதை நீ நிறுத்தாத வரை இந்த மசூதிக்குள் வரக்கூடாது” என்றார்.

குசபாவுக்கு என்ன செய்து என்று புரியவில்லை. குரு கற்றுத் தந்த மந்திர வித்தையை தொடர்ந்து செய்வதா அல்லது சாய்பாபா சொல்வது போல அவற்றை கைவிட்டு சரண் அடைவதா? என்று குழம்பினார். அவருக்குள் மனப் போராட்டம் அதிகரித்தது.

பலத்த மனப் போராட்டத்துக்குப் பிறகு அவர் சாய்பாபாவிடம் சரண் அடைந்தார். தனது கையில் அணிந்திருந்த இரும்பு வளையலைக் கழற்றி வீசினார். கையை உயர்த்தியதும் இனிப்புகளை வரவழைக்கும் வித்தையையும் கைவிட்டார்.

ஆணவம், அகந்தையை கைவிட்ட அவர், சீரடியில் தங்கி சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். சாப்பாட்டுக்காக பாபாவைப் போல பிச்சை எடுத்து சாப்பிட்டு காலத்தைக் கழித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குசபாவை, சீரடி சாய்பாபா ஏற்றுக் கொண்டார். மசூதியின் ஒரு மூலையில் அமர்ந்து, பகல் முழுவதும் ராமதாசரின் “தாச போதா” என்ற நூலை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாபாவின் உத்தரவை ஏற்று ஒருநாள், இருநாள் அல்ல…. மூன்று ஆண்டுகள் குசபாவ் அப்படி நடந்து கொண்டார். பிறகு அவர் தினமும் காலை பாபாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வழக்கத்தில் வைத்திருந்தார்.

ஒரு நாள் அவரை அழைத்த பாபா, “மூன்று தலை கொண்டவரை (தத்தாத்ரேயர்) போய் பார்” என்று கூறினார். இதையடுத்து குசபாவ் கான்காபூருக்கு சென்று தத்தாத்ரேயரை வழிபட்டு விட்டு வந்தார்.

அதன் பிறகும் குசபாவை சோதிக்க பாபா தவறவில்லை. புனித நூலான ஸ்ரீகுரு சரித்திரத்தை 108 தடவை பாராயணம் செய்யும்படி உத்தரவிட்டார்.

ஸ்ரீகுரு சரித்திரத்தை ஒரு தடவை பாராயணம் செய்ய 3 நாட்கள் ஆனது. 108 தடவை பாராயணம் செய்து முடிக்க குசபாவுக்கு சுமார் ஓராண்டு ஆகி இருந்தது.

இந்த காலக் கட்டத்தில் குசபாவின் மனதை பாபா முழுமையான பக்குவத்துக்கு மாற்றி இருந்தார். என்றாலும் குசபாவிடம் இறுதியாக ஒரு சோதனையை பாபா நடத்தினார்.

ஏகாதசி தோறும் குசபாவ் உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். ஒரு ஏகாதசி தினத்தன்று அவரிடம் பாபா, “நீங்கள் ஏகாதசி தினத்தன்று எதை மட்டும் சாப்பிடுவீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு குசபாவ், “நான் கந்தமூலம் மட்டும் சாப்பிடுவேன்” என்றார். கந்தமூலம் என்றால் ஒரு வகை சர்க்கரை வள்ளிக் கிழங்காகும்.

பாபா வேண்டும் என்றே கந்தமூலம் என்ற சமஸ்கிருத வார்த்தையை “கந்தா” என்று மாற்றிக் கூறினார். கந்தா என்றால் மராட்டிய மொழியில் “வெங்காயம்” என்று பொருள்.

பாபா ஒரு வெங்காயத்தை எடுத்து குசபாவிடம் கொடுத்து, “சாப்பிடு” என்றார். குசபாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஏகாதசியன்று வெங்காயம் சேர்க்கக் கூடாது என்பதை அவர் கடைபிடித்து வந்தார். எனவே அவர் அதிலிருந்து தப்பிக்க, “பாபா, இன்று நீங்கள் வெங்காயம் சாப்பிட்டால் நானும் சாப்பிடுகிறேன்” என்றார்.

உடனே பாபா வெங்காயம் சாப்பிட்டார். இதையடுத்து குசபாவும் வெங்காயம் சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் துவாரகமாயி மசூதிக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் பாபா, “ஏகாதசி தினமான இன்று இந்த பிராமணர் வெங்காயம் சாப்பிட்டார்” என்று கூறி கேலியும் கிண்டலும் செய்தார்.

உடனே குசபாவ், “நான் மட்டுமல்ல பாபாவும் வெங்காயம் சாப்பிட்டார்” என்றார். அதை மறுத்த பாபா, அதை நிரூபிக்க வாந்தி எடுத்தார்.

அதில் எந்த வெங்காயத் துண்டுகளும் இல்லை. அதற்கு பதில் சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டுகளாக இருந்தது.

இதைக் கண்டதும் குசபாவ் ஆச்சரியமடைந்தார். பாபா எடுத்த வாந்தியை பிரசாதமாகவே நினைத்தார். அதை எடுத்து உட்கொண்டார்.

மகான்களிடம் சிஷ்யர் என்ற அந்தஸ்தைப் பெற விரும்புபவர்கள் இப்படித்தான் செய்வார்கள். இந்த அடிப்படையிலேயே பாபாவின் உச்சிஷ்டத்தை குசபாவு எடுத்து உட்கொண்டார்.

தனது சாமர்த்தியமான இந்த செயல் மூலம் சாய்பாபாவின் சிஷ்யர் போல குசபாவ் மாறினார். பாபா, அதுவரை யாரையும் சிஷ்யராக ஏற்கவில்லை.

ஆனால் குசபாவ் மீது அவருக்கு கனிவு பிறந்தது. அவரை பாபா மனதார ஏற்றுக் கொண்டார்.

குசபாவுவை அழைத்து அவர் தலை மீது கை வைத்து பாபா ஆசீர்வாதம் செய்தார். பிறகு அவர் குசபாவிடம், “இன்று நான் உனக்கு ஒரு சக்தியை வழங்குகிறேன். என்னை நீ எப்போதெல்லாம் முழு மனதுடன் நினைக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் உள்ளங்கையில் இருந்து திருநீறு தோன்றும். அந்த திருநீறு பிரசாதத்தை என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு நீ கொடுக்கலாம். அந்த திருநீறு மக்களின் துன்பங்களை தீர்க்கும்” என்றார்.

இதனால் குசபாவ் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். பாபாவை மனதில் நிறுத்தி ஜெபித்ததும், அவர் உள்ளங்கையில் இருந்து விபூதி மழை பொழிந்தது.

அதன்பிறகு குசபாவ் பாபாவை வணங்கி விடைபெற்றார். ஏழை-எளியவர்களுக்கு பாபா கொடுக்கும் விபூதி பிரசாதத்தை அளித்து அற்புதங்கள் செய்தார். ஆயிரக்கணக்கானவர்களின் நோயை பாபாவின்திருநீறு தீர்த்து வைத்தது.

பாபா தம் வாழ்நாளில் வேறு யாருக்கும் இந்த சக்தியை வழங்கவில்லை. எனவே பாபாவின் அற்புத அவதார வாழ்வில் குசபாவும் தனி இடம்பெற்றுள்ளார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply