சீரடி சாய்பாபாவுக்கு காட்டப்படும் ஆரத்தி மிக, மிக சக்தி வாய்ந்தது

0

சீரடிக்கு சென்று சாய்பாபாவை கண்குளிர வழிபட வேண்டும் என்று முடிவு செய்ததுமே, பக்தர்கள் மனதில் அடுத்து எழும் மிகப்பெரிய கேள்வி…

எந்த நேரத்து ஆரத்தியில் கலந்து கொள்வது என்பது தான். ஏனெனில் பாபாவுக்கு காட்டப்படும் ஆரத்தி அந்த அளவுக்கு முக்கியமானது. சீரடியில் தினமும் பாபாவுக்கு 4 வேளை ஆரத்த நடத்தப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு நடத்தப்படுவது காகட ஆரத்தி. மதியம் 12 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை 6 மணிக்கு தூப ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தி நடத்தப்படுகிறது. இந்த 4 கால ஆரத்தி வழிபாடு மிக, மிக சக்தி வாய்ந்தது.

திருப்பதி, பண்டரிபுரம் உள்ளிட்ட தலங்களில் கடவுளுக்கு எப்படி ஆரத்தி காட்டி, பூஜைகள் செய்யப்படுகிறதோ, அதுபோல சீரடியிலும் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. சாய்பாபா உயிரோடு இருந்தபோதும், அவருக்கு 4 வேளை ஆரத்தி காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் சீரடி சாய்பாபா தனக்கு சந்தனம் பூசி, ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை. இன்னும் சொல்லபோனால் தன் நெற்றியிலும், உடலிலும் சந்தனம் பூசப்படுவதை அவர் வெறுத்தார்.

ஆனால் மகல்சாபதி, மேகா ஆகியோரின் தீவிர பக்தி, சாய்பாபாவுக்கு பூஜைகள், ஆரத்திகள் காட்டப்படுவதற்கு வித்திட்டது. 1909 களில் இது தொடங்கியது. முதலில் தமக்கு பூஜைகள் செய்யப்படுவதை பாபா எதிர்த்தாலும் நாளடைவில் அவர், பக்தர்கள் விருப்பத்துக்கு கட்டுப்பட வேண்டியதாயிற்று.

டாக்டர் பாண்டிட் என்பவர் தான் மிகவும் துணிச்சலாக பாபா நெற்றியில் சந்தனமிட்டார். அதுவரை மகல்சாபதி, பாபாவின் கழுத்தில் தான் சந்தனமிட்டு வந்தார். பாபா நெற்றியில் பண்டிட் சந்தனமிட்டதும், மசல்சாபதியும் சந்தனம் வைத்து பூஜைகள் செய்யத் தொடங்கினார். சாய்பாபா உடலில் சந்தனம் பூசப்படுவதற்கு சீரடியில் உள்ள சில முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாபா நெற்றியில் சந்தனம் பூசுபவரை அடிக்கப்போவதாக அறிவித்தனர்.

இதை அறிந்ததும் சாய்பாபா ஆவேசமானார். மகல்சாபதியை அழைத்து “எனக்கு பூஜை செய்… யார் தடுக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று முழங்கினார். உடனே மகல்சாபதி, பாபாவின் உடலில் சந்தனம் பூசினார். அட்சதை, மலர்கள் தூவினார். நைவேத்தியம் படைத்தார். ஆரத்தி காட்டினார். பாபாவின் ஆவேசத்தால் முஸ்லிம்கள் அமைதியாகி விட்டனர். அன்று முதல் சாய்பாபாவுக்கு ஆரத்தி காட்டும் பழக்கம் சீரானது.

அது மட்டுமின்றி இந்துக்களும், முஸ்லிம்களும் சமரசம் ஆனார்கள். இதனால் சாய்பாபா மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து பாபாவுக்கு ஆரத்தி காட்டி பூஜைகள் செய்வது என்பது நாளடைவில் மரபாக மாறியது. வட மாநிலங்களில் ஆலயங்களில் இறைவனுக்கு ஆரத்தி காட்டப்படும் போது பக்தி பாடல்கள் பாடப்படுவது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. அந்த வழக்கத்தின் படி சீரடியிலும் சாய்பாபாவுக்கு ஆரத்தி காட்டப்படும் போது பாடல்கள் பாடுவது தொடங்கியது.

பிறகு ஆரத்தி பாடல்களை சாய்பாபா தம் பக்தர்கள் மூலம் எழுத வைத்தார். 4 வேளை ஆரத்திக்கும் 4 விதமான பாடல்கள் எழுதப்பட்டன. இதனால் ஆரத்தி வழிபாட்டில் தெளிவு ஏற்பட்டது. ஆரத்தி பாடல்களில் மொத்தம் 20 உள்ளன. இதில் பெரும்பாலான பாடல்கள் ஸ்ரீகிருஷ்ணனை ஜோகீஸ்வர் பீஷ்மா என்ற சாய் பக்தரால் இயற்றப்பட்டதாகும். தாஷ்கணு மகராஜ் எழுதிய உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்களும் ஆரத்தி பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடல்களைப் பாடியபடி பாபாவுக்கு ஆரத்தி காட்டப்படும் போது பக்தர்கள் மனம் உருகிவிடும். சாய் பாபாவோடு ஒன்றி இரண்டற கலந்து விடுவார்கள். தற்போது சீரடியில் 4 வேளை ஆரத்திக்காக முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், 2 மணி நேரத்துக்கு முன்பே போய் வரிசையில் உட்கார்ந்து விடுகிறார்கள். முதலில் இடம் பிடித்து முதன்மையானவர்களாக சென்றால் தான் பாபாவுககு நடத்தப்படும் ஆரத்தியை கண்குளிர பார்த்து வழிபட முடியும் சென்று கவனமாக இருப்பார்கள்.

சாய்பாபா உயிருடன் இருந்தபோது, இந்த மாதிரி தான் ஆரத்திக்கு பக்தர்கள் முண்டியடித்தனர். ஆண்களும், பெண்களும் கூடியதும் இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரத்தி நடைபெறும். ஆரத்தி பாடல்களை பக்தி பரவசத்தோடு பக்தர்களும் சேர்ந்து பாடுவார்கள். ஆரத்தி முடிந்ததும், “ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு சாயிநாத் மகராஜிக்கு ஜெய்” என்று முழக்கமிடுவார்கள். இது சமாதி மந்திர் முழுவதும் எதிரொலிக்கும்.

இந்து பக்தர்கள் பாட்டு பாடி கோலாகலமாக இருப்பது, இஸ்லாமிய பக்தர்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது என்பதில் பாபா மிகவும் உறுதியாக இருந்தார். எனவே அவர் தனக்கான சாகட் எனப்படும் காலை நேர ஆரத்தி மற்றும் கேஜ் எனப்படும் இரவு நேர ஆரத்தி ஆகிய இரு இரண்டு ஆரத்தியையும் மசூதியில் நடத்த விரும்பவில்லை. அந்த இரு ஆரத்தியையும் அவர் சாவடியில் நடத்தச் செய்தார். மதியம் மற்றும் மாலை நேர ஆரத்திகள் மட்டும் துவாரகமாயி மசூதியில் நடத்தப்பட்டன.

மசூதியிலும், சாவடியிலும் பாபாவுக்கு ஆரத்தி தொடங்கும் முன்பு மணி அடிக்கப்படும். மணி சத்தம் கேட்டதும் பக்தர்கள் விரைந்து வந்து விடுவார்கள். அனைவரும் பாடல் பாடியபடி ஆரத்தி காட்டுவார்கள். 1918-ம் ஆண்டு சாய்பாபா மறைந்த பிறகும் ஆரத்தி காட்டப்படுவது தொடர்கிறது. அவரது பளிங்கு சிலைக்கு அபிஷேகம் செய்து, அலங்கரித்து நைவேத்தியம் வைத்து ஆரத்தி காட்டுகிறார்கள். மற்ற ஊர்களில் சாய்பாபாவுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டு, சீரடியில் பூஜைகள் நடப்பது போல தினசரி பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். அப்போது ஆரத்தி காட்டும் பழக்கமும் அனைத்து பாபா ஆலயங்களிலும் தொடங்கியது.

இன்று சீரடியில் 4 வேளை ஆரத்தி எந்த நேரத்தில் தொடங்கிறதோ அதே நேரத்தில் உலகம் முழுவதும் சாய்பாபா ஆலயங்களில் ஆரத்தி காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தினம், தினம் கோடிக்கணக்கான பக்தர்கள் பாபாவுக்குரிய பாடல்கள் பாடி ஆரத்தியில் தங்களை தாங்களே மெய் மறக்க செய்து கொள்கிறார்கள்.

பாபாவுக்கு நடத்தப்படும் ஆரத்தியை பார்த்துக்கொண்டே பாடல்களை கேட்பது மெய்சிலிர்க்க செய்யும். இந்த மகிமையை சாய்பாபா தம் பக்தர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தினமும் ஏற்படுத்துகிறார். தன் அருகில் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். அதனால் சாய்பாபாவுக்கு ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்த மாத்திரத்திலேயே மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறது.

சீரடி சாய்பாபாவை ஒரு தடவை நினைத்தாலே போதும், நிச்சயம் அவர் நமக்கு அருள் காட்சிக் கொடுப்பார். நிறைய பக்தர்களின் வாழ்வில் இந்த அற்புதம் நடந்துள்ளது. சாய் பக்தர்கள் தினமும் அவரது அருள்முகத்தைப் பார்க்க தவறுவதே இல்லை. அவரிடம் மனம் விட்டுப் பேசி ஆசி பெற தயங்குவதும் இல்லை. ஆரத்தி தான் இந்த பக்குவத்தை பக்தர்கள் மனதில் மலரச் செய்கிறது.

பெரும்பாலான சாய் பக்தர்கள் அவரை தங்கள் இல்லத்தில் ஒருவராகவே கருதி உபசரிப்புகள் செய்வதுண்டு. மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரின் இறுதி இலக்கு என்ன? ஆனந்தமாக வாழ வேண்டும். இறுதியில் மறு பிறப்பு இல்லா முக்தியை பெற வேண்டும் என்பது தான். இந்த இரண்டையும் தரும் கண்கண்ட கடவுளாக, குருவாக, நம் கையை பிடித்து செல்லும் தோழனாக, வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.

பொதுவாக சாய்நாதரின் அருள் பெற பக்தர்கள் தினசரி வழிபாடு, விரதம், 4 கால ஆரத்தி செய்வதுண்டு. இதில் 4 கால ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவதை சற்று நினைத்துப்பாருங்கள் பிரமிப்பாக இருக்கும். உலகில் எந்த ஒரு மகானுக்கும் மக்கள் இத்தகைய வழிபாட்டை செய்வதே இல்லை.

இந்த தனித்துவத்துக்கு 4 வேளை ஆரத்தியே அடிப்படையாக உள்ளது. இந்த 4 வேளை ஆரத்தியை, செய்வதும், ஆரத்தியில் கலந்து கொள்வதும் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி. ஆலயங்களுக்கு செல்ல இயலாத நாட்களில் வீடுகளில் இந்த 4 வேளை ஆரத்தியை பாபாவுக்கு பக்தர்கள் செய்ய மறப்பது இல்லை. ஆரத்தி மூலமாக சத்குருவான சாய்பாபாவை வணங்கினால் வாழ்க்கையில் ஒழுக்கமும், பாதுகாப்பும் தேடி வரும். சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும்.

நிறைய பக்தர்கள் வாழ்வில் இந்த ஆரத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காகட ஆரத்தி நாம் நலமாக இருக்க உதவுகிறது. மதிய வேளை ஆரத்தி நமது வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பம் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. மாலை நேர தூப ஆரத்தி, நமது மனம் போன போக்கில் போகாமல் சாய்நாதரை சரண் அடைய உதவுகிறது. இரவு நேர சேஜ் ஆரத்தி நாம் தினமும் பெறும் நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளது. ஆரத்தி செய்யப்படும் இடங்களிலும், ஆரத்தி செய்பவர்களிடமும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று சாய்நாதர் பல தடவை உறுதிபட கூறியுள்ளார்.

எனவே சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி. அடுத்த முறை சாய்பாபா தலத்துக்கு செல்லும் போது, நிச்சயம் ஆரத்தி செய்து வழிபட வேண்டும் என்று இப்போதே மனதில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஏனெனில் தினமும் சாய்நாதரை ஆரத்தி காண்பித்து வழிபட்டவர்கள், அவரோடு நெருங்கும் அரிய பாக்கியத்தை பெற்றனர். அவர்களுள் முதன்மையானவராக மகல்சாபதி இருந்தார். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply