
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு , (13.4.19) கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை ஒட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நவமியன்று அதிகாலையில் இருந்து விரதம் இருந்து வீட்டில் சீதா சமேத ராமச்சந்திர மூர்த்தியின் படத்தை வைத்து அதில் ஆவாஹனம் செய்து, பூஜை செய்வது மிகவும் நல்லது. பானகம், நீர்மோர் ஆகியவற்றை நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கினால் சகல துன்பங்களும் நீங்கி நல்லருள் கிட்டும் என்பது ஐதீகம்

ராமநவமியன்று நாள்முழுவதும் ராமநாம ஜபம் செய்வது மிகவும் உகந்தது. ‘தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும்பதத்தை…’ என்றும் ராம நாமமே, ஏழ்பிறப்பை ஏற்படுத்தும் பிறவி நோய்க்கு அருமருந்து என்றும் கம்பர் ஏற்றிப்பாடுகிறார்.
இந்த நாளில் ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புபூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் பல கோயில்களில், ராம கீர்த்தன பஜனைகள் நடைபெறும். பத்துநாள் உற்சவமாகவும் கொண்டாடப்படும். உற்சவத்தில் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் முக்கிய வைபவங்களாக அமையும். ஸ்ரீராம நவமியன்று ராமரை வணங்குவதுபோலவே, ராமதாசரான அனுமனையும் வணங்குதல் நலம் தரும். – Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
