
சுகபோகக்காரகன், சிற்றின்பத்தின் ஊற்று, சங்கீத கலைஞான ஒளி, கவிதரும் கிரகம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சுக்கிரனின் சொந்த ஆட்சி வீட்டில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை ஐப்பசி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த ராசி சனீஸ்வரரின் உச்ச ஸ்தானமாகும். சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறும் சமயம், சூரியனின் வெப்ப ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சூரியன் தனது நீச்ச ராசியான துலாமில் பலம் குறைந்து இருக்கும்பொழுது, ஐப்பசி மாதத்தில் வெப்பம் மிகமிகக் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும், சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்தும் இருக்கும். இவர்கள் எல்லோரையும் கவர்ந்து வசப்படுத்தக்கூடிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியன் நீசம் அடைவதால் ஆன்மபலம் குன்றியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தார் மற்றும் சொந்த பந்தங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள்.
பெருந்தன்மையும் பரந்த நோக்கமும் கொண்டவர்கள். வரும்முன் காப்போம் என்பதை இவர்களிடம்தான் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு முன்பு பலமுறை சிந்தித்து செயல்படுவார்கள். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அலட்சியம் இருக்காது. ஏதேனும் சந்தேகம் வருமானால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை, ஆதரவு கேட்கத் தயங்க மாட்டார்கள். நுனிப்புல் மேய்கின்ற பழக்கம் அறவே இருக்காது. ‘ஓடுமீன் ஓட உருமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு’போல மிகவும் தந்திரமும், பொறுமையும் மிக்கவர்கள். சுயதேவைகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்வார்கள். இடம் பொருள் அறிந்து பேசி காரியம் சாதிப்பதில் சமர்த்தர்கள்.
அடிப்படையில் இனிமை, பற்று, அன்புடையவர்கள். உயர்தர ஆடை அணிகலன்கள் அணிவதில் அலாதி பிரியம் இருக்கும். வாசனை திரவியங்கள் மீது அதிக மோகம் உண்டு. நயமாக, நளினமாக பேசி பெண்களைக் கவர்வதில் வல்லவர்கள். அதேபோல் பெண்களும் ஆண்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதில் கைதேர்ந்தவர்கள். புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். வானளாவ புகழ்ந்து, மதிப்பு, மரியாதை காட்டினால் இவர்களிடமிருந்து எந்த சலுகையையும் சுலபமாக பெற்றுவிடலாம். எனவே இவர்களைச் சுற்றி எப்பொழுதும் நான்குபேர் இருந்துகொண்டே இருப்பார்கள். இளவயதில் சில தகாத நட்பினால் சில இடையூறுகள், கௌரவப் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
தீய பழக்க வழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும். இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். பல விஷயங்களில் ஞானமுடையவர்கள் பெரிய கலா ரசிகர்களாக இருப்பார்கள். இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதில் விருப்பமுடையவர்கள். சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நல்ல பலத்துடன் கேந்திர, பார்வை அமைப்பில் ஜாதகத்தில் இருக்கும்போது பிறந்தவர்களுக்கு மிக உயர்ந்த நிலை, அந்தஸ்தான வளமான வாழ்க்கை அமையும். பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் காதல் கட்டாயமாக இருக்கும்.
தனம் குடும்பம் வாக்கு

பண வரவு, செல்வ வளம் எல்லாம் சாதகமாக சேரும் காலங்களில் வருமுன் காப்போம் என்பதற்கேற்ப திட்டம் போட்டு முதலீடுகள் செய்வார்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதேநேரத்தில் எதற்கு செலவு செய்யவேண்டுமோ அதைச் சரியாகச் செய்வார்கள். கஞ்சத்தனம் இவர்களிடம் இருக்காது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற தணியாத தாகம் உடையவர்கள். குடும்பப் பொறுப்பை உணர்ந்து சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். நியாய, தர்மத்திற்காக பல விஷயங்களில் விட்டுக் கொடுப்பார்கள். அதே நேரத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப துர்வாசர்போல் கோபம் கொந்தளித்து பின்விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் பேசிவிடுவார்கள்.
திட தைரிய வீரியம்
தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். தேவைப்பட்டால் மட்டுமே அடுத்தவரின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவார்கள். வம்பு, வழக்குகள் பிடிக்காத ஒன்று. ஆனால், குட்டக் குட்ட குனிந்துகொண்டிருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை எப்படி முடிக்க வேண்டும், யாரை எப்படி மடக்கினால் வழிக்கு வருவார் என்ற கணக்குகள் எல்லாம் தலைகீழ் பாடமாகும். ஒருமுறை திடமாகவும், தீர்க்கமாகவும் சிந்தித்து செயலில் இறங்கிவிட்டால் அதை முடிக்காமல் ஓயமாட்டார்கள். சில நேரங்களில் தான் என்ற ஆணவம், செருக்கு இருக்கும். அதனால் சொந்த, பந்தங்கள், நண்பர் வட்டங்களில் கெட்ட பெயர் வரும். பிரச்னைகள், வெளிவிவகாரங்கள், மனக்கசப்புகளை குடும்பத்தினரிடம் காட்ட மாட்டார்கள். செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் நல்ல ஸ்தான பலத்தில் சாதகமாக அமைந்துவிட்டால் எதையும் தைரியமாக எதிர்கொண்டு, தடைகளைக் கடந்து வெற்றி பெறுவார்கள்.
சொத்து சுகம்
சொத்து சுகம் என்பது அவரவர்கள் வாங்கி வந்த வரம், நம் கர்ம வினை, கிரகஸ்தான அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் செல்வம், செல்வாக்கு அமையும். கடினமான உழைப்பின் மூலம் சொத்து வாங்க நினைப்பவர்கள். செவ்வாய், சனி, புதன் அருட்பார்வை இருந்தால் சொத்துகள் குவியும். சொந்த உழைப்பு, பூர்வீகச் சொத்து, மாமன் வகையில் வசதி வாய்ப்பு, மனைவி மூலம் செல்வம் என சொத்து, பணம், நகைகள், வாகனம் ஆகியவை அமையும். பெண் உறவுகளால் சுகம், லாபம் அடைபவாகள். விவசாய விளைநிலங்கள், காப்பி, தேயிலை எஸ்டேட், கட்டிட வாடகை வருமானங்கள் மூலம் பயனடைவார்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். நல்ல சத்தான உணவுகளை இனம்கண்டு உண்பார்கள். போஜனப் பிரியர்கள். பெண்களுக்கு அடிக்கடி வயிற்றுப் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், சிறுநீர் தொற்று என நோய்கள் வரும். பொதுவாக ஜீரணக் கோளாறு, கண் உபாதை, கால், கை முட்டுகளில் வலி, நீர்கோர்த்தல், கீவாதம் போன்ற உடல் உபாதைகளால் அவதிப்படுவார்கள்.
பூர்வ புண்ணியம் குழந்தைகள்

சனீஸ்வரர் உச்சம் பெறுகின்ற துலா ராசியில் கதிஸ்தானமாகிய சூரியன் இருப்பதால் ஆண், பெண் வாரிசுகளுக்கு குறைவிருக்காது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகளால் பெருமை, யோகம் அடைவார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள் இவர்களை தாங்குவார்கள். சுக்கிரன், சந்திரன், புதன் பலமாக இருக்கப் பிறந்தவர்கள், மிக உயர்வான வாழ்க்கை வாழ்வார்கள். இந்த மாத பௌர்ணமியில் பிறப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சிவன் வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். உக்கிர தெய்வங்களை உபாசனை செய்வதில் மனம் லயிக்கும். முருக வழிபாட்டிலும் மனதை செலுத்துவார்கள். யோகம்தியானம் இவர்களுக்கு எளிதில் கூடிவரும்.
ருணம் ரோகம் சத்ரு
மறைமுக, நேர்முக எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆனால், இவர்களின் பேச்சு, செயல், விமர்சிப்பது போன்றவற்றால் எதிரிகள் உருவாவார்கள். ஆனாலும் எதையும் சமாளிக்கும் திறமையும், ஆற்றலும் இருக்கும். குரு நல்ல பார்வை பலத்தில் இருப்பவர்கள் சரியாக காய் நகர்த்தி வெற்றி காண்பார்கள். இவர்களுக்கு ரத்த உறவுகள் மூலம் பிரச்னைகள் வராது. நண்பர்கள், தொழில் போட்டியாளர்கள், அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் மூலம் சங்கடங்கள் வரும். கடன், பணம் விஷயங்களில் திட்டம் போட்டுச் செய்வார்கள். அகலக்கால் வைக்கமாட்டார்கள். வம்பு, வழக்குகளில் தேவை இல்லாமல் போய் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.
பயணங்கள் மனைவி கூட்டாளிகள்
உல்லாசப் பிரியர்கள். பயணங்கள் செய்வதில் அலாதி விருப்பம் உடையவர்கள். இயற்கையை ரசனையுடன் அனுபவிப்பவர்கள். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, பல சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதில் ஆர்வமுடையவர்கள். அடிக்கடி வாகனத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அது இரண்டு சக்கரமாக இருந்தாலும் நான்கு சக்கர சொகுசு காராக இருந்தாலும் பணத்தைப்பற்றி கவலைப்படாமல் புதிய வாகனங்களில் செல்வதையே விரும்புவார்கள். சந்திரன் சாதகமாக இருப்பவர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளைக் காண விரும்புவார்கள். ஆற்றல்மிக்க, பேரழகியான பெண் மனைவியாக அமைவார். பொதுவாக திருமணத்திற்கு பிறகுதான் யோகம். எண்ண ஓட்டங்கள் ஒரு சீராக இருக்காது. இவர்களை புரிந்துகொண்டு நடந்துகொள்வது மிகக்கடினம்; ஆகவே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இருந்தாலும் சுலபமாக மனம் மாறி நேசக்கரம் நீட்டுவார்கள். ஒரு சிலருக்கு மிக உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்கு, சொத்துள்ள மனைவி அமையும் பாக்கியம் உண்டு.
தசமஸ்தானம் தொழில்
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இன்ஜிணியர்களாக வருவதற்கான யோகம் உள்ளது. நீதித்துறையில் பணியாற்றும் பாக்யமும் கிட்டும். கப்பல், மீன்வளத்துறை, தண்ணீர் சம்பந்தமான இலாக்காக்களில் பணி அமையும். வழக்கறிஞர்களாகவும், பேச்சாளர்களாகவும், ஆசிரியர்களாகவும்,விரிவுரையாளர்களாகவும் விளங்குவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிகஅவும் முடியும். திரைப்படம் சம்பந்தமான உபதொழில்களில் ஈடுபடுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, தண்ணீர் சார்ந்த வியாபாரம், பூ, காய், கனி போன்றவையும் கை கொடுக்கும். கடல் சார்ந்த உணவுப் பொருட்கள், அழுகும் பொருள் வியாபாரம், இரும்பு, எந்திரம், எண்ணெய் சம்பந்தமான தொழிலில் லாபம் கொழிக்கும். செங்கல் சூளை, ஹோட்டல், பேக்கரி போன்றவற்றிலும் ஜீவனம் அமையும். இரும்பு சம்பந்தமான வாகன உதிரிபாகங்கள் பெண்கள் விரும்பும் நவநாகரீக ஆடை அணிகலன்கள், பெண்கள் உள்ளாடைகள், வாசனை திரவியங்கள், வெள்ளி வியாபாரம், என்று பல்வேறு தொழில்கள், உபதொழில்களில் ஈடுபடும் பாக்கியம் உள்ளவர்கள்.- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
