குழந்தை வரம் அருளும் மகா காளியம்மன் வழிபாடு

0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 8 கிமீ தொலைவில் அரியக்குடி வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் உள்ளது பெரிய உஞ்சனை கிராமம். இங்கு பழமையான ‘உச்சினி மகா காளியம்மன்’ கோயில் உள்ளது. கோயில் வளாத்தில் கூரை வேய்ந்த கட்டிடத்தில் அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வளாகத்தில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலின் பிடிமண்ணை எடுத்தே கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற காளி கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த அம்மனின் அனைத்து அம்சங்களையும் கொல்கத்தா காளியம்மனிடம் பக்தர்கள் காணலாம். பிரமாண்ட நிலைக்கதவு மற்றும் சுற்றுச்சுவர்களுடன் கூடிய இந்த கோயில் முன்பு இன்றும் வற்றாத குளம் உள்ளது. 150 வருடங்களுக்கு முன்பு கோயில் முன்பு உள்ள திண்ணையில் பஞ்சாயத்தை கூட்டி தங்களது பிரச்னைகளுக்கு கிராம மக்கள் தீர்வு கண்டுள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோயில் உள்ளது.

தல வரலாறு:

பழங்காலத்தில் ‘உஞ்சனை நாடு’ என இந்த கிராமம் அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இந்த உச்சி மகா காளியம்மன் கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு தென்னங்கீற்றுகளால் மேற்கூரை வேயப்பட்ட சன்னதியில் எழுந்தருளியிருக்கும் அம்மனுக்காக, சன்னதியின் பின்புறம் புதிதாக கோயில் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக அதே வடிவமைப்பில் பி்ரமாண்ட கருவறையுடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அம்மனின் உத்தரவு கிடைக்காததால் சிலையை புதிய கருவறைக்கு மாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்றும் கூரை வேய்ந்த கட்டிடத்திலேயே அம்மன் அருள் பாலித்து வருகிறார்.

உஞ்சனை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நன்கு விளைச்சல் உள்ள காலங்களில் மட்டுமே கிராம மக்களால் முளைப்பாரி திருவிழா நடத்தப்படுகிறது. கோயிலில் தினமும் 4 கால பூஜைகள் நடக்கிறது. இங்கு வந்து வழிபட்டால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமும், குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பேறும் கிடைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். உஞ்சனை கிராம மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் உச்சி மகா காளியம்மன் குலதெய்வமாக உள்ளார். இந்த கோயிலுக்கு பக்தர்கள் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் மற்றும் ஆட்டோக்களில் சென்று வரலாம்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply