
ராமராவண யுத்தத்தில் ராவணன் மகனான இந்திரஜித் விடுத்த நாகபாசத்தால் லட்சுமணன் மூர்ச்சையுற்றான். வைத்தியர் ஒருவர், ‘சஞ்சீவகரணி, விசல்யகரணி, சந்தானகரணி எனும் தெய்வீக மூலிகைகள் திருப்பாற்கடல் நடுவே சஞ்சீவி மலையில் உள்ளன. அவற்றைக் கொண்டு வந்தால் லட்சுமணன் உயிர் பிழைத்துவிடுவார் என்று கூற மூலிகை களைக் கொண்டுவரும் பொறுப்பை ஆஞ்சநேயர் ஏற்றார். உடனே, திருப்பாற்கடலை அடைந் தார். அங்கே அவரால் மூலிகை களை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அதனால், சஞ்சீவி மலையையே தூக்கிச் செல்ல எண்ணினார்.
சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த ஆஞ்சநேயர் ஐயங்கார்குளம் என்ற ஒரு தலத்தில் சிறிது நேரம் தங்கி மலையைத் தோள்மாற்றி எடுத்துச் சென்றாராம். அப்போது மலையினின்று ஒருபாகம் இத்தலத்தில் விழுந்தது. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி விழுந்த இடம் என்பதால், அதன் மருத்துவ குணங்கள் காற்றில் கலந்து, அதனூடே ஆஞ்சநேயரின் அருட்கனலும் இத்தலத்தில் நிலைபெற்று இன்றளவும் பரிமளிக்கின்றன. இப்படி சஞ்சீவிராயர் சற்று நேரம் தங்கியிருந்த தலம் என்பதால் இங்கு உருவாகியிருக்கும் ஆலயம் சஞ்சீவிராயர் கோயில் என்று வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்தாலும்கூட நோய் நிவர்த்தியும், மன நிம்மதியும் வெகு எளிதில் கைகூடுகிறது என்பது மக்களின் நம்பிக்கை.ஐயங்கார்குளம் எனும் இக்கோயில் தீர்த்தம் திருமகளின் சாந்நித்தியம் நிறைந்தது என்பதால் இதனை லக்ஷ்மீசரஸ் என்கின்றனர். சஞ்சீவி பர்வதத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும் இக்குளத்து புனித நீருக்கு உண்டு என்கிறார்கள். ஐயங்கார்குளம், காஞ்சிபுரம்கலவை பாதையில் பாலாற்றை அடுத்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
