பிள்ளை வரம் அருளுவான்… முருகனிருக்க பயமேன்!

0

புத்திர தோஷத்தில் கிரகங்கள் தரும் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்த்துவருகிறோம்,

இப்போது புத்திரபாக்கியத்தில் செவ்வாயின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

அஷ்டலட்சுமிகளில் தைரியலட்சுமியின் அருளாசி இருந்தாலே போதும்… மற்ற லட்சுமிகள் தானாகவே நமக்கு அருளை வாரி வழங்குவார்கள் என்பது மூத்தோர் வாக்கு.

அதற்கு என்ன காரணம்?

தைரியம் என்கிற வீரியம் இருந்தால்தான் மற்ற செல்வங்களை நாம் அடைய முடியும். என்ன சரிதானே?!

செவ்வாய் என்பவர் தைரியம், வீரியம், வேகம் இவற்றுக்கெல்லாம் அதிபதி.

ஒரு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் பலவீனம் அடைந்துவிட்டால் புத்திரபாக்கியத்தில் தடையை ஏற்படுத்திவிடுவார்,

ஏன்? ஆணின் விந்துவில் லட்சக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் ஒரேஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் உட்புகும். அந்த அணுதான் குழந்தையாக உருவாகிறது.

ஆணின் குறியிலிருந்து கருமுட்டை வரை உள்ள தூரம் நம்மை பொருத்தவரை சில சென்டிமீட்டர் தூரம்தான்.

ஆனால் கண்ணுக்கே புலப்படாத உயிரணுக்கு அந்த தூரம் என்பது ஒரு மாரத்தானுக்கு ஒப்பானது.

ஆக அந்தத் தூரத்தை வேகமாக ஓடி கடக்க, செவ்வாய் என்னும் வீரியம் இருந்தால் மட்டுமே முடியும்.

இப்போது புரிகிறதல்லவா! எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் செவ்வாய் என்னும் போர் வீரன் இருந்தால்தான் புத்திரபாக்கியம் உண்டாகும். ( ஏன் செவ்வாய் போர்வீரன்? கருவை நோக்கி ஓடும் ஓட்டம் மட்டும் முக்கியமல்ல, வேறுயாரும் நம்மை முந்திவிடக்கூடாது என்று மற்ற உயிரணுக்களையும் தாக்கி முந்தவிடாமல் செய்து முடிவில் வெற்றிக்கோட்டினை அடைகிறது)

நீங்கள் உயிரணுவின் (பெரிதாக்கப்பட்ட) வடிவத்தை பார்த்திருக்கிறீர்களா? இதுவரை பார்க்கவில்லை என்பவர்களுக்கு.. கூகுள் சென்று பார்க்கவேண்டும் என்று அவசியமில்லை.

நீங்கள் தினமும் வணங்கும் பெருமானின் கையில் இருக்கும் “வேலின் வடிவம்” தான் உயிரணுவின் வடிவம்.

இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன பரிகாரம் என்பது.

ஆம் முருகனை நம்பினோர் ஒருபோதும் கை விடப்படார்.

சரி… ஜாதகத்தில் செவ்வாய் பலவீனம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

செவ்வாய் கடக ராசியில் இருந்தால் நீசம் என்னும் நிலை அடைந்து தன் பலத்தை இழப்பார்.

செவ்வாய், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் அடைய, பலம் இழப்பார்,

செவ்வாய் கேதுவோடு இணைய தன் பலத்தை இழப்பார்,

(செவ்வாய் ராகுவோடு இணைய அடங்காத காமம் உடையவர்)

செவ்வாய் சந்திரனோடு ஒரே பாகையில்(டிகிரி) இணைந்தால் நீர்த்துப் போய்விடுவார்,

சனியோடு இணைய தன் சக்தியை இழப்பார்,

செவ்வாய் புதனோடு இணைய சிற்றின்பம் என்பது மேலும் சிறிய சிற்றின்பமாக முடியும், அதாவது “துரிதஸ்கலிதம்” என்னும் திருப்தியற்ற நிலையை உண்டாக்கும்,

இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதைப் பார்க்கலாம்,

நாம் முருகனின் பல்வேறு கதைகள், காவியங்களைப் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

அதில் ஒன்று பிரம்மாவிடம் இருந்த படைக்கும் தொழிலை தானே எடுத்துக்கொண்டது என்பதை அறிவோம்.

முருகனின் அவதார நோக்கமே இனவிருத்தி என்னும் மக்கள் பெருக்கமே, இவரே காதலின் அடையாளம், காமத்திற்கும் இவரே உருவம்.

இனவிருத்தி என்னும் சந்ததி விருத்திக்கும் இவரே காரணம். ஒவ்வொரு உயிரினமும் தனக்கு வீரியமுள்ள சந்ததியை உருவாக்கத்தான் முயற்சிக்கும்.

அந்த வகையில் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடைய, நல்ல அறிவாற்றல் உள்ள, எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்ட குழந்தை உருவாக “முருகப்பெருமானே” அருள் புரிவார்.

ஆக மேலே சொன்ன அத்தனை தோஷங்களுக்கும் ஒரே பரிகாரம் “முருகன்” மட்டுமே.- Source: thehindu


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply