சாய்பாபா வாழ்ந்த சீரடி கோவிலின் மகத்துவம்

0

சீரடி, சமத்துவத்தையும் சமதர்மத்தையும் போதித்த மகாஞானி சீரடி சாய் பாபா வாழ்ந்த புண்ணிய இடம். ஹிந்து மற்றும் இசுலாமிய மத வழக்கங்களை ஒன்றினைத்து அவர் உருவாக்கிய வழிபாட்டு முறைகள் அமைதிக்கும், சகோதரத்துவத்துக்கும் அச்சாரமாக அமைந்தது. அவர் ஆற்றிய அற்புதங்களும், தந்த ஆசிர்வாதங்களும் உலகம் முழுக்க அவருக்கென கோடிக்கணக்கான மக்களை அவரின் போதனைகளை பின்பற்றுபவர்களாக மாற்றியது. ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 19ஆம் நூற்றாண்டில் சாய் பாபாவை அறிந்தவர்களும், அவரை பின்பற்றுபவர்களும் குறைந்த அளவிலேயே இருந்திருக்கின்றனர். அதற்கு பிறகு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சாய் பக்தி அலையானது உலக மக்களிடம் அவரின் போதனைகளை எடுத்துச் சென்றது.

மதத்தினால் பிளவுபட்டுக்கிடந்த மக்களை இவரின் வழிகாட்டு நெறிமுறைகள் அவர்களுக்குள் புதைந்து கிடந்த சகோதரத்துவத்தை வெளிக்கொண்டு வரவே கோடிக்கணக்கான மக்கள் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். 1918 ஆம் ஆண்டு அவர் சமாதி நிலையை அடைந்தாலும் இன்றும் சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் அவரை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மகாராஷ்ட்ராவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்தியாவின் முக்கியமான ஆன்மீக சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சீரடி நகரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அஹ்மத்நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது மும்பையில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஷீரடி கோயில் இந்நகரத்தின் மையமாக திகழ்கிறது.

இங்கு ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 25,000 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். சீரடி சாய் பாபா சமாதி அடைந்த பிறகு 1922இல் அவரின் சமாதியின் மேல் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே சாய் பாபாவை தரிசிக்க வரிசையில் காத்திருக்கின்றனர். வியாழக்கிழமை இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. புத்தாண்டு பிறப்பு இக்கோயிலின் மிக முக்கியமான பண்டிகை. புது வருடத்தை சாய் பாபாவின் ஆசிர்வாதத்துடன் துவங்கினால் அந்த வருடம் சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு அன்று இங்கே தரிசனத்திற்காக வருகின்றனர்.

சீரடிக்கு வரும் பக்தர்கள் அப்படியே ஷீரடி சனி கோயிலுக்கும் சென்றுவருவது மேலும் சிறப்பை தரும். சீரடியில் இருந்து 75கி.மீ தொலைவில் சிக்னாப்புரில் அக்கோயில் அமைந்திருக்கிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மைசூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சீரடிக்கு ரயில் சேவைகள் உண்டு. இதை சாய்நகர் சீரடி ரயில் நிலையம் என்று அழைக்கின்றனர். அல்லது மும்பை, நாசிக் நகரங்களில் ஏதாவது ஒன்றை வந்தடைந்து அங்கிருந்து சீரடியை அடையலாம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply