கவலைகள் காணாமல் போக கணபதிக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் பிள்ளையார் அருள் செய்வார். விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் காத்தல், அங்குச கரம் அழித்தல், பாசம் உள்ள கை மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்… இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள். எல்லா உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் அடக்கி, பாதுகாத்து அருள்வதை அவரது பேழை வயிறு உணர்த்துகிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில், அதிகாலையில் நீராடி, பூஜை செய்யும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு, மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம். அழகான குடை அமைத்து, அதன்கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தனகுங்குமத் திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப்புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி வழிபடுவதால் வீட்டில் செல்வம் பெருகும், அறிவு பிரகாசிக்கும், குடும்ப ஒற்றுமை உண்டாகும், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றெல்லாம் புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பிள்ளையார் நோன்பு, சித்தி விநாயக விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி போன்ற பிள்ளையாருக்கு உகந்த வேறு சில விரதங்களும் உண்டு. செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மிகவும் நற்பலன் தரும். விநாயகரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பிரதிஷ்டை செய்யலாம். எளிதில் கிடைக்கும், எங்கும் கிடைக்கும் அருகம்புல்லினால் 108 முறை அவரின் திருநாமத்தைச் சொல்லியும், விநாயகர் அகவல் முதலான துதிப்பாடல்களைப் படித்தும் வழிபடுவதால், நமக்குத் தேவையான நல்ல கல்வி, பட்ட மேற்படிப்பு, நிலையான வேலை என்று அனைத்தையும் அருள்கிறார் விநாயகர். மேலும், தன்னை சரணாகதி அடைந்த பக்தர்களின் கவலைகளை காணாமல் போக செய்கிறார் கணபதி என்று புராணங்கள் கூறுகின்றன.

எளிமையான வழிபாடு

கணபதி வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொல்கிறார்கள். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply