ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்

0

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் உள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீகனகவல்லி தாயார் சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் கோயில். இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்வபீடம் வழித்தோன்றலில் வந்த ஸ்ரீவியாசராஜ சுவாமி என்பவர் வடநாட்டில் இருந்து தென்னாட்டில் 738 இடங்களில் ஆஞ்சநேயர் கோயில் கட்ட விரும்பினார். இதுபோல் இந்த பரிக்கல் கிராமத்தில் கோயில் பணி துவங்கப்பட்டது. அப்போது கோயில் கட்டுமான பணியின் போது இடைஞ்சல்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்போது இந்த பகுதியை ஆண்டு வந்த வசந்தராஜ மன்னர் காலத்தில் மீண்டும் கோயில் கட்டும் பணி நடந்தது. அப்போதும் ஏற்பட்ட இடைஞ்சல் காரணமாக பணிகள் நின்றது.

செய்வதறியாது திகைத்த மக்கள் பெருமாளை வணங்கி உள்ளனர். அப்போது பெருமாள் நரசிம்மர் அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து கோயில் கட்டுவதற்கு இடைஞ்சலாக பரகலா என்ற அசூரன் உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த அசூரனை அழிக்க நரசிம்மர் சம்ஹாரம் செய்ய ஆயத்தம் ஆனார். இதனை அறிந்து கொண்ட அசூரன், என்னை சம்ஹாரம் செய்வதால் என்ன பயன் என கேட்டு மண்டியிட்டு வணங்கினார். இதனால் மனமிறங்கிய நரசிம்மர், உன்னை மோட்சத்திற்கு அனுப்புவதாக தெரிவித்தார். இதுவும் போதாது என பரகலா அசூரன் கூறிய போது, இந்த இடத்திற்கு பரகலான் என சூட்டப்படும் என பகவான் கூறினார்.

இந்த பரகலான் என்பதே பரகால் ஆகி இப்போது மருவி பரிக்கல் கிராமமாக உள்ளது. பெருமாள் இந்த இடத்தில் சம்ஹார மூர்த்தியாக இருப்பதால் தன்னை வழிபட வரும் பக்தர்கள் அச்சப்படுவார் என நினைத்து தனது இடது மடியில் தாயார் லட்சுமியை எழுந்தருள செய்து தாயாரும், பெருமாளும் பக்தர்களுக்கு ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளாக காட்சி அளித்து வருகிறார். ஆஞ்சநேயர் கோயில் கட்ட இருந்த இடத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டதால் பெருமாளின் இடது புறத்தில் கர்பககிரகத்தில் சிறிய திருவடி ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

பெருமாள் பக்தர்களுக்கு அருள்கின்ற வரம் அனைத்தையும் ஆஞ்சநேயர் மூலமே வழங்கி வருகிறார். இதே ஆலயத்தில் கராள நரசிம்மராக நின்ற கோலத்தில் பெருமாள் நரசிம்ம முகமாய் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் 5ம் நாள் கருட சேவையும், 7ம் நாள் சந்திரபிரபை வாகனத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரும், கராள நரசிம்மரும் ஒரே வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். பெருமாள் சன்னதியில் கர்ப்பககிரகத்தில் ஆஞ்சநேயர் பக்த ஆஞ்சநேயராக காட்சி அளிப்பது பரிக்கல் கிராமத்தில் மட்டுமே.

தாயார் லட்சுமி காட்சியளிக்கும் நரசிம்மர்

பொதுவாக நரசிம்மர் எப்போதும் கோயில் உக்கிரமூர்த்தியாகவும் தனது மடியில் மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து இருப்பார். ஆனால் பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் மட்டுமே இந்தியாவிலேயே எங்கும் காணாதபடி தனது வலதுபுறத்தில் தாயார் லட்சுமியுடன் காட்சி அளித்து வருகிறார்.

திருமண தடை நீங்கும்

பதவி உயர்வு மற்றும் பதவி பறிபோனவர்கள் பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் அவர்கள் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்றும், நீண்ட இழுபறியில் இருக்கும் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆண் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றி வைத்தும், பக்த ஆஞ்சநேயர் முன்பு நெல் கொட்டி அதில் எழுதி வைத்து வழிபட்டால் தங்களது எந்த கோரிக்கையும் பெருமாள் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

கோயிலுக்கு செல்லும் வழி

விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் கெடிலம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மேற்கே சென்றால் இந்த பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்லலாம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply