
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு நிலைத் தெய்வமாகவும், பெரும்பான்மையான மக்களின் வழிபடு தெய்வமாகவும் ‘இசக்கி அம்மன்’ விளங்குகிறாள். இந்த அம்மனுக்கு சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பத்திலுள்ள ஓம் சக்தி நகரில் ஆலயமொன்று நிறுவப்பட்டுள்ளது. ஓம்சக்தி நகரில் இந்த ஆலயம் அமைந்திருப்பதால் ஓம் சக்தி இசக்கி அம்மன் என்ற பெயருடனே மக்களுக்கு அருட்பாலித்து வருகின்றாள். இந்த ஓம்சக்தி இசக்கி அம்மன் இடுப்பில் குழந்தையுடன், சாந்த சொரூபமாக காட்சி அளிக்கின்றாள். இந்த இசக்கி அம்மனின் இடது கையில் குழந்தையும், வலது கையில் சூலமும் உள்ளது.

இது அன்பும், வீரமும் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பதையும், விவேகத்துடன் கூடிய வீரம் இருக்க வேண்டுமென்பதையும், குழந்தையை இடுப்பில் வைத்து அரவணைத்துக் காப்பதுபோல மக்களாகிய நம்மையும் காப்பாள் என்பதை உணர்த்துகின்றது. குழந்தை வரமருளும் தெய்வமாகவும், குழந்தைகளை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுவதால் பெண்களால் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படுகின்றாள். மேலும் ஆச்சரியமாக இங்கு திருவள்ளுவருக்கும், தமிழ் பாட்டி ஒளவையாருக்கும் சிலை அமைத்து வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் தமிழில் மந்திரங்களை படித்து வழிபாடு செய்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களோடு வழிபாடும் தமிழ் முறைப்படி நடைபெறுகின்றது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளாலேயே அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும், வழிபாடு செய்வதும் விசேஷமும் முக்கியமானதுமாகும். இந்தக் கோயிலின் ஆடித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த மூன்று நாட்களும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளும், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
