குபேரனின் கர்வத்தை நீக்கிய விநாயகர்..!

0

குபேரனுக்கு தன் செல்வத்தைப் பற்றிய கர்வம் ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று இவ்வளவு பெரிய இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டிருக்க மாட்டான். ‘சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும், நம்மிடம் உள்ள அளவிட முடியாத செல்வத்தைக் காட்டி ஆச்சரியப்பட வைக்க வேண்டும்’ என்று நினைத்ததன் பலனை இப்போது குபேரன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

சர்வ அங்கங்களும் ஒடுங்கிப் போய் நடுங்கிக் கொண்டிருந்த குபேரனுக்கு இன்றைய பொழுது அவ்வளவு நன்றாக புலரவில்லை என்பதை உணர்ந்து கொண்டிருந்தான். அவனது எண்ண ஓட்டம் காலைப்பொழுதை பற்றி, பின்நோக்கி விரைந்தது.

செல்வத்தால் அகந்தை

அதிகாலையில் எழுந்ததும் குபேரனுக்கு அந்த சிந்தனை ஏன் தோன்றியது என்றே தெரியவில்லை. ஆனாலும் தோன்றிவிட்டது. அவன் உள்ளம், மூவுலகங்களிலும் தனக்கு ஈடாக எவரிடமும் இல்லாத செல்வங்களை பற்றி எண்ணி பெருமை கொண்டது. தன்னிடம் உள்ள செல்வங்களை சிவபெருமான் காண வேண்டும், அவ்வாறு கண்டால் சிவபெருமான் வியந்து போவார் என்றும் குபேரன் எண்ணினான்.

எண்ணத்தை செயல்படுத்த கயிலாயத்திற்கு சென்றான். அங்கு வீற்றிருந்த சிவபெருமானையும், பார்வதி தேவியையும் பார்த்து கைகூப்பி வணங்கி வழிபட்டான் குபேரன். ‘அம்மையப்பனே! தாங்கள் இருவரும் என் வீட்டிற்கு உணவருந்த வர வேண்டும். அதன் மூலம் நான் பாக்கியவான் ஆவேன்’ என்றான்.

சிவனுக்கு அழைப்பு

ஒவ்வொரு உயிரையும் அறிந்து வைத்திருக்கும் ஈசனால், குபேரனின் உள்ளத்தை அறிய முடியாதா?. குபேரன் அன்பினாலோ, பக்தியாலோ அழைக்கவில்லை. அவனது செல்வத்தை காட்டி, நம்முடைய வியப்பை கண்டு மகிழ்ச்சியடையவே அழைக்கிறான் என்பதை சிவபெருமான் புரிந்து கொண்டார். அவர், ‘குபேரா! உன் அன்புக்கு நன்றி. தற்போது உன் வீட்டிற்கு வந்து உண்ண முடியாத சூழலில் நான் இருக்கிறேன்’ என்றார்.

இதைக்கேட்டதும் தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமே என்ற ஏமாற்றம் தோன்றியது குபேரனுக்கு. அது அவன் பேச்சில் தெரிந்தது. ‘ஐயோ! பெருமானே! நான் விருந்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். தாங்கள் வரவில்லை என்றால், நான் பெரும் ஏமாற்றத்திற்கு தள்ளப்படுவேன்’ என்றான்.

விநாயகரை அனுப்பினார்

சிவபெருமானின் முகத்தில் குறுநகை தவழ்ந்தது. ‘குபேரா! நீ என்னை மிகவும் வற்புறுத்தி அழைக்கிறாய். ஆகையால் நான் என்னுடைய மைந்தன் கணேசனை அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறியபடி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனான விநாயகரை காட்டினார்.

‘நான் ஒரு பெரும் படையே சாப்பிடும் அளவுக்கு உணவு தயார் செய்திருக்கிறேன். இந்தச் சிறுவன் வந்து எவ்வளவு உண்பான்?. சமைத்து வைத்தது எல்லாம் வீணாகப் போகிறது’ என்று தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டான் குபேரன். பின் விநாயகரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அப்போது, ‘குபேரா! என் மைந்தன் உணவு உண்பதில் அதிக விருப்பமுடையவன்’ என்று மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்தார் சிவபெருமான். அதற்கு குபேரனோ, ‘ஐயனே! தங்கள் புதல்வன் வயிறும், மனமும் நிறைவடையும்படி உணவளிப்பேன்’ என்று வாக்களித்து அங்கிருந்து அகன்றான்.

உணவு பரிமாறினான்

விநாயகரும், குபேரனும் குபேரபுரியை வந்தடைந்தனர். குபேரனின் அரண்மனை மேற்கூரையும், தூண்களும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. கதவுகள் மற்றும் சாளரங்கள் அனைத்தும் வைரம், வைடூரியம், மாணிக்கம் போன்ற நவரத்தின கற்களால் இழைக்கப்பட்டிருந்தன. அந்த அரண்மனையை பார்த்து விநாயகர் வியந்தார். அவர், ‘குபேரா! இந்த அரண்மனை உன்னுடையதா?’ என்று கேட்டார்.

‘ஆம்! என்னுடையதுதான். நீ என் அரண்மனையை சுற்றிப்பார்க்கிறாயா? அதன் பிறகு நாம் உணவு உண்ணலாம்’ என்று கூறி விநாயகரை அழைத்துச் சென்று அரண்மனையை சுற்றிக் காட்டினான். பிறகு விநாயகரை உணவு உண்ணும் அறைக்கு அழைத்துப் போனான் குபேரன்.

அங்கு பெரிய, பெரிய பொற்பாத்திரங்களில் அறுசுவை உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. மோதகம், லட்டு என இனிப்பு வகைகள் ஒரு பக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குபேரன், விநாயகரை அமர வைத்து, தன் பணியாட்களை வரவழைத்து உணவு பரிமாறும்படி செய்தான்.

உணவு தீர்ந்தது

உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக பரிமாறப்பட்டது. அனைத்தையும் ருசி பார்த்தார் விநாயகர். அவர் சாப்பிடச் சாப்பிட, வயிறு நிரம்புவதற்கு பதிலாக பசிதான் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் காரணமாக, குபேரன் செய்து வைத்திருந்த உணவு அனைத்தையும் உண்டு முடிக்கும் நிலைக்கு வந்து விட்டார் விநாயகர். இதனைப் பார்த்த குபேரனும் பணியாளர் களும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இதற்கிடையில் சமையல் அறையில் இருந்து ஓடிவந்த சமையல்காரர், அனைத்து உணவு வகைகளும் தீர்ந்து போய்விட்டன என்று குபேரனிடம் கூறினார். உணவு தான் தீர்ந்து போயிருந்தது. விநாயகரின் பசியோ முன்பை விட அதிகமாகி இருந்தது‘ ‘என்ன உணவு வர தாமதமாகிறது?” என்று குரல் எழுப்பினார் விநாயகர். நேராக சமையல் அறைக்கு சென்றவர், உணவு ஏதும் இல்லாததால், சமைக்காமல் வைக்கப்பட்டிருந்த அரிசி, காய்கறி போன்றவற்றை எடுத்து சாப்பிட்டார். கொஞ்ச நேரத்தில் அதுவும் காலியானது.

கண்ணில் பட்டதை…

பசி மிகுதி காரணமாக, விநாயகருக்கு கோபம் வந்தது. ‘குபேரா! என் தந்தையிடம், என் வயிறும், மனமும் நிறையும்படி உணவளிப்பதாக உறுதி கூறினாயே! ஆனால் என் பசி இன்னும் தீரவில்லை’ என்று கூறியவாறே கண்ணில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து உண்ண ஆரம்பித்தார். சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள், கரண்டிகள் என வயிற்றுக்குள் சென்றன. பின்னர் அரண்மனையின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் உடைத்து வாயில் போட்டார்.

‘குபேரா! நான் உண்பதற்கு வேறு ஏதாவது தரவில்லை என்றால், கடைசியில் உன்னைத்தான் விழுங்குவேன்’ என்று எச்சரித்தார். நடுநடுங்கிப் போனான் குபேரன். அவனது எண்ண ஓட்டம் அப்படியே நின்றது. ‘இனிமேலும் பொறுத்திருந்தால் ஆகாது’ என்று நினைத்தவன், உடனடியாக கயிலாயத்திற்கு சென்று சிவபெருமான் முன் நின்றான். அவர் கால்களில் விழுந்தான்.

ஈசன் கூறிய வழி

‘ஐயனே! நான் என் ஆணவத்தால் தங்களை விருந்துக்கு அழைத்தேன். அந்த ஆணவத்தால் நானே அழியப்போகிறேன். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று நடந்தவை அனைத்தையும் விவரித்தான்.

புன்னகைத்தவாறே சிவபெருமான் கூறினார். ‘குபேரா! உன் அகந்தையால் விநாயகனுக்கு நீ எதைக் கொடுத்தாலும் அவன் பசி அடங்காது. நீ அவனை சிறுவன் என்று நினைத்துக் கொண்டாய். ஆனால் அவன் அண்டசராசரங்களையும் தின்று ஜீரணிக்கும் சக்தி கொண்டவன். இருப்பினும் ஒருவன் அன்போடு கொடுக்கும் உணவு அவன் பசியை தீர்த்து விடும்’ என்றார். பின்னர் குபேரனின் கையில் ஒருபிடி அவலைக் கொடுத்து, ‘இதை அன்போடும், பக்தியோடும் விநாயகனுக்கு கொடு!’ என்று கூறினார்.

சிவபெருமானிடம் இருந்து அவலை பெற்றுக் கொண்டு விரைந்த குபேரன், அதனை மிகுந்த அன்புடன் விநாயகருக்கு கொடுத்தான். அதனை வாங்கி உண்ட விநாயகருக்கு பசி முற்றிலும் தீர்ந்து போனது. அப்போதுதான் குபேரன் தன் அரண்மனையைப் பார்த்தான், அதில் பாதியை விநாயகர் தின்று தீர்த்திருந்தார்.

கர்வம் கூடாது

‘விநாயகப் பெருமானே! என் ஆணவத்தால் நான் மிகப்பெரிய செல்வந்தன் என்று நினைத்திருந்தேன். அந்த அறியாமையால் நான் செய்த பிழையை நான் உணர்ந்து கொண்டேன்’ என்று கூறினான்.

விநாயகர் அவனுக்கு ஆசி கூறி அங்கிருந்து மறைந்தார்.

மகாவிஷ்ணு, சீனிவாசராக அவதரித்த போது, அவர் பத்மாவதியை மணம் முடிக்க பெரும் செல்வத்தை கடனாக கொடுத்தான் குபேரன். அப்படியானால், குபேரன் எவ்வளவு பெரிய செல்வம் உடையவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எவ்வளவு செல்வம் படைத்திருந்தாலும், ஆணவம் கூடாது என்பதையே இக்கதை வலியுறுத்துகிறது. – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply