பாவம் அனைத்தும் நீக்கும் வைகுண்ட ஏகாதசி விரத முறை பற்றி சிவபெருமான் கூறியவை..!

0

வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.

சிவபெருமான் கூறிய வைகுண்ட ஏகாதசி விரத முறை
கயிலை நாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்தவேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply