பக்தர்களுக்கும் பாபாவுக்குமான பேச்சுவார்த்தை நேரடியானது..!

0

இடைத்தரகர்களின் அனுமதியின்றி நேரடியான பேச்சுவார்த்தை பக்தனுக்கும் பாபாவுக்குமானது . பாபாவின் பக்தர்களும் இதை உணர்ந்திருக்கிறார்கள். இது உன் வீடு நான் இங்குதான் உன்னோடு இருக்கிறேன். எதற்கு நீ அச்சம் கொள்கிறாய்.. வருவது வரட்டும்…என்னை விட்டுவிடாதே.. என்னைப் பற்றிகொண்டு எப்போதும் நிதானத்துடனும். என்னுடனும் ஒன்றியிருப்பாய்என்று சொல்லும் பாபா பல்வேறு தருணங்களில் பக்தர்களுக்கு இதை உணரவும் வைத்திருக்கிறார். இவரிடம் அடைக்கலமாகி விட்டால் அகில உலகமும் ஆண்ட திருப்தி கிடைக்கும். பசியாக இருக்கும் ஜீவன்களுக்கு பசியாற வைப்பவன் பாபாவுக்கே படையலிட்டதற்குச் சமம்.

ஷீரடியில் ஒருமுறை பாபாவின் பக்தனான நானாவிடம் பாபா, “எனக்குப் பூர்ண போளி வேண்டும். அதை நைவேத்யமாக கொண்டு வருகிறாயா?’ என்று கேட்டார். நானாவும் பாபாவின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு எட்டு பூர்ண போளிகளைச் செய்து பாபாவுக்கு எடுத்து வந்தார். பாபாவின் அருகில் வந்து,“நீங்கள் கேட்டபடி உங்களுக்குப் பிடித்த பூர்ண போளிகளை எடுத்து வந்திருக்கிறேன். நீங்கள் பசியாறுங்கள்’என்று அன்போடு கூறியபடி பாபா அருகில் தட்டுகளை வைத்து பக்கத்தில் அமர்ந்தார். பாபா புன்னகையுடன் தட்டுகளைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருந்தார். நானா இரண்டு முறை பாபாவிடம் உண்ணுமாறு பணித்தும் பாபா தட்டுக்களை மட்டும் வெறித்திருந்தார். சற்று நேரம் கழித்து பூர்ண போளியில் ஈக்களும், எறும்புகளும் மொய்த்தது.

சிறிது நேரம் கழித்து பாபா நானாவைப் பார்த்து,“நானா இந்தத் தட்டுக்களை எடுத்துச் செல்”என்றார். நானாவுக்கு கோபம் வந்துவிட்டது.“அதெப்படி நீங்கள் கேட்டபடி நான் எவ்வளவு சுவையான பூர்ண போளிகளைச் செய்து உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் தாங்கள் அதைத் தொட்டுக்கூட பாராமல் எடுத்துச் செல் என்றால் நான் எப்படி எடுத்துச் செல்வேன். என் முன்னால் நீங்கள் சாப்பிடவேண்டும். அப்போதுநான் நானும் இன்று சாப்பிடுவேன்’என்று கோபம்கொண்டார். பாபா, ’ஏதோ ஒரு ரூபத்தில் போளியை உண்டுவிட்டேன். நன்றாக இருந்தது.. அதனால் எனக்கு போதும் நீ எடுத்துச் சென்றுவிடு நானா’ என்றார்.

நானா சிணுங்கியபடி போளிதட்டுகளை எடுத்துக்கொண்டு சாவடிக்கு சென்றார். நானாவின் கோபத்தைப் போக்கும் பொருட்டு பாபா மீண்டும் நானாவை வரவழைத்தார். ’என்னுடன் 18 ஆண்டுக்காலங்கள் உடன் இருக்கிறாய். என்னைப் பற்றி இவ்வளவுதான் அறிந்துகொண்டாயா? உன் கணிப்பு அவ்வளவுதானா? எண் ஜாண் உடலில் மட்டும்தான் பாபாவைக் காண்கிறாயா? இதோப் பார் நான் எறும்பு ரூபத்திலும் வருகிறேன். ஈக்கள் வாயிலாகவும் மொய்க்கிறேன். எனக்குப் பிடித்த உணவை தோன்றிய ரூபத்தில் வந்து சாப்பிடுகிறேன். நீ எடுத்து வந்த போளியையும் அப்படித்தான் சாப்பிட்டேன் போதுமா’ என்று சமாதானப் படுத்தினார்.

’நீங்கள் எவ்வளவு சொன்னாலும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே’ என்று இயலாமையுடன் கூறிய நானாவைப் பார்த்து பாபா ஒரு சமிக்ஞை செய்தார். அது நானா மனதில் வேறு யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தைப் புதைத்து வைத்திருந்ததைப் பற்றியது. அதாவது பாபா சர்வந்தர்யாமி, தனது அந்தராத்மா எறும்பு உள்பட அனைத்து உயிர்களிலும் பாபாவால் வெளிப்பட முடியும் என்பதை உணர்ந்தார். நானா நான் செய்த சமிக்ஞையை எப்படிப் பார்த்தாயோ அப்படிதான் நானும் எனக்குப் பிடித்த உருவத்தில் நடமாடுகிறேன் என்பதையும் உணர்ந்துகொள் என்றார் பாபா.

பார்க்கும் உயிரினங்கள் எல்லாமே பாபாவாகவே இருக்கட்டும். அப்போதுதான் மனம் முழுக்க வெறுப்பு,கோபம், வஞ்சம் எதுவுமின்றி அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் இடமாக வைத்திருப்போம். பாபாவின் வசிப்பிடம் நமது தூய்மையான மனம்தான் என்பதால் அதில் அன்பு மட்டுமே பிரதானமாகயிருக்க வேண்டும் என்பதை பாபாவின் பக்தர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.. – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply