
ஷிர்டி சாய்பாபா மறைந்து நூறாண்டுகளான பிறகும் தன் எளிய போதனைகளால் மதங்களைக் கடந்து இந்தியா முழுவதும் பக்தர்களை ஈர்த்து வருகிறார். சாய்பாபாவின் பிறப்பு, பிறந்த இடம் குறித்து சரியான தகவல்கள் இல்லை.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமது நகருக்கு அருகேயுள்ள ஷிர்டிக்கு வரும்போது மஹல்சபதி என்பவரால் சாயி என்று அழைக்கப்பட்டார். ஷிர்டியில் துவாரகமயி என்னும் சாவடியில் தங்கி எளிய மக்களுடன் வாழ்ந்து தனது அற்புதங்களாலும் போதனைகளாலும் லீலைகளாலும் இன்றும் தேசம் முழுக்கப் புகழைப் பரப்பியிருப்பவர்.
தனது பேச்சில் உருது வார்த்தைகளை அடிக்கடி உச்சரித்த சாய்பாபா இந்துவா, முஸ்லிமா என்று நிச்சயமாகச் சொல்லத் தடயங்கள் எதுவும் இல்லை. இன்றும் ஷிர்டியில் அவரது ஆலயத்தில் குரானும் ஓதப்படுகிறது.
“நான் பரமேஸ்வரனின் சேவகன். நம் குருவின் அற்புதமான ஆசிர்வாதத்தினாலும் அவரது கிருபையினாலும் நான் பக்தர்களது கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு சுபத்தை உண்டு பண்ணுகிறேன்” என்றவர் அவர். அல்லா நல்லது செய்வார் என்ற அர்த்தமுடைய ‘அல்லா பலா கரேகா’ என்ற வாக்கியத்தையும் அதிகம் உச்சரித்தவர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அக்டோபர் 15-ம் நாளில் மகாசமாதி அடைந்த ஷிர்டி சாய்பாபா எளிய மக்களின் துயர்களையும் கஷ்டங்களையும் தீர்த்த ஒரு ஃபக்கீர் மட்டுமல்ல.

இந்து- முஸ்லிம் மத நல்லிணக்கத்தின், கலாசார பந்தத்தின் அறுபடாத தொடர்ச்சியும் ஆவார். அவரது பொன்மொழிகளிலிருந்து சில:
# குழந்தை, ருசியான பதார்த்தங்கள் வேண்டினால், தாய் கசப்பு ஔஷதம் கொடுப்பாள். குழந்தை அழுது பிடிவாதம் செய்தால், தாயின் பிரேமை மாறாது. மருந்தின் கசப்பு வியாதியைக் குணப்படுத்துகிறது. குழந்தைக்கு இவ்விஷயம் தெரிவதில்லை.
# பாம்பாகட்டும் தேளாகட்டும் எல்லாவற்றிலும் ஈஸ்வரன் சுகமாக அமர்ந்துள்ளான். அதனால் எல்லாவற்றையும் பிரேமையுடன் பார். ஈஸ்வரன் ஜகத்தின் சூத்ரதாரி. எல்லாம் அவன் ஆணைப்படி நடந்து கொள்பவை. பாம்பாகட்டும், தேளாகட்டும், ஈஸ்வரன் ஆக்ஞைக்கு எதிராக நடப்பதில்லை. அதனால் பிராணிகள் மேல் பிரேமையையும் தயையும் காண்பியுங்கள். சாகசத்தை ஒதுக்கிவிட்டு பொறுமையைக் காட்டு. எல்லோரையும் ரட்சிப்பவன் ஸ்ரீஹரியே.
# வாசனையே ஆசை, விருப்பம் எனப்படும். அது புத்தியில் ஜனிப்பது. அதற்கும் ஆத்மாவுக்கும் சம்பந்தமே இல்லை.

# வெங்காயத்தை ஜீரணித்துக் கொள்ள முடிபவர்களே அதைத் தின்ன வேண்டும்.
# நான் பிராணனை விட்ட பிறகும்கூட என் வாக்குகளை பிரமாணம் என்று பாவனை செய்யுங்கள். என் சமாதியில் இருந்து, என் எலும்புகள் உங்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கும். நான் என்ன, என் சமாதிகூட, உங்களுடன் பேசும். வேறொன்றும் வேண்டாமல், என்னைச் சரண்டைந்த பக்தர்களின் பின்னே நின்று சமாதி அசைந்து கொண்டேயிருக்கும். உங்களுடைய கண்ணுக்குக் காணாமல் இருந்தாலும், என்னைக் குறித்துச் சிந்தை வேண்டாம்.
# மனம், புத்தி, இந்திரியங்கள் எந்த விதமாக இருந்தாலும் அவை ஜடம் என்று தெரிந்தவுடனேயே விஷயங்களில் விரக்தி உண்டாகி, ஞானத்தை மூடியிருக்கும் திரை விலகும். தன் நிஜ ஸ்வரூபத்தை மறந்து விடுவதே மாயை. ‘ஆத்மா நான்’ என்ற ஞானம் இல்லாவிட்டால், ‘சரீரமே நான்’ என்ற நினைவு வரும். – Source: thehindu
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
