தன் பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாபா கையாண்ட வழிமுறைகள்..!

0

தனக்கு இனிமேல் தேவைப்படாத ஒரு பொருளை, தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதுதான் மனித இயல்பும்கூட. ஆனால், பலருக்கு இந்த மனோபாவம் ஏற்படுவதில்லை. தனக்குத் தேவையில்லையென்றாலும்கூட, தன்னிடமிருக்கும் ஒரு பொருளை மற்றவர்களுக்குத் தருவதற்கு மிகவும் தயங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் மனோபாவத்தை பாபா எப்படி மாற்றினார் என்று பார்ப்போம்.

தம் பக்தர்களிடம் அதிக அன்பும் கருணையும் கொண்டிருந்த பாபா, தன் பக்தர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் பல வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறார். அப்படி ராம பக்தர் ஒருவரின் மனதை பாபா எப்படி மாற்றினார் என்பதைப் பார்ப்போம்.

ராமதாசி என்பவர் பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக ஷீர்டிக்கு வந்தார். அங்கு சில நாள்கள் தங்கினார். ஒருநாள் அவரை அழைத்த பாபா, தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி சோனமுகி கஷாயத்தை வாங்கி வரும்படிக் கடைக்கு அனுப்பி வைத்தார். ராமதாசி அங்கிருந்து கிளம்பியதுதான் தாமதம், பாபா தன் ஆசனத்தை விட்டு எழுந்து விரைந்து ராமதாசி இருந்த இடத்துக்கு வந்தார். ராமதாசி தன்னுடைய இடத்தில் வைத்திருந்த ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ புத்தகத்தை எடுத்து ஷாமாவிடம் கொடுத்து, பின்வருமாறு கூறினார்:
`ஷாமா! இது மிகவும் புனிதமான நூல். இது உனக்கு பிற்காலத்தில் மிகுந்த பயன் கொடுக்கும். இந்தப் புத்தகத்தை நாள்தோறும் படி. தினம் ஒரு பாடல் வீதம் பொருளுணர்ந்து படித்தால் அதன் பலன் மிகுதியாக உனக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.

ஆனால், இதைக் கேட்ட ஷாமா மிகவும் பதற்றமடைந்து, ‘தேவா! இது என்ன விளையாட்டு. எனக்கு சம்ஸ்கிருதம் படிக்கத் தெரியாது, பிறகு எப்படி நான் இந்தப் புத்தகத்தை படிக்க முடியும். மேலும் அந்த ராமதாசி மிகவும் கோபக்காரர். அவர் என்னிடம் நிச்சயம் சண்டைக்கு வருவார்’ என்று பயந்தபடி கூறிய ஷாமா, அந்தப் புத்தகத்தை பாபாவிடமிருந்து வாங்க மறுத்துவிட்டார்.

பாபா விடவில்லை. தன்னுடைய லீலையைத் தொடர்ந்தார். அவர் மீண்டும் ஷாமாவிடம் பின்வருமாறு கூறினார்:

“இந்தப் புத்தகத்தின் பயனை நீ அறியவில்லை. அதனால்தான் இதை வாங்க மறுக்கிறாய். ஒரு முறை நான் கடுமையான நெஞ்சுவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இந்த விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தை எடுத்து என் மார்பின் மீது வைத்து படுத்துக் கொண்டேன். அது என்னைப் பெரிதும் குணப்படுத்தியது” என்று கூறி, அதை ஆசீர்வதித்து ஷாமாவின் கையில் திணித்தார்.

இதற்குள் ராமதாசி சோனமுகி கக்ஷாயத்துடன் துவாரகாமாயிக்கு வந்தார். பாபாவின் லீலையை அறிந்த அன்னாசின்சினிகர் ராமதாசியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டார். அவ்வளவுதான் தாமதம், ராமதாசி கோபத்துடன் ஷாமாவிடம் வந்தார். “நீ என் புத்தகத்தை திருடுவதற்காகவே பாபாவிடம் சொல்லி என்னைக் கடைக்கு அனுப்பச் செய்திருக்கிறாய். ஏன் உனக்கு இந்த எண்ணம். என் புத்தகத்தை என்னிடம் ஒழுங்காகக் கொடுத்து விடு” என்று சத்தம் போட்டார்.
ஷாமா மிகவும் பணிவான குரலில், ‘நான் இந்தப் புத்தகத்தை எடுக்கவில்லை. பாபாதான் இதை என்னிடம் கொடுத்தார்’ என்று கூறினார்.

ஆனாலும் ராமதாசியின் கோபம் குறைந்தபாடில்லை. இதைக் கண்ட பாபா அவரை அழைத்தார். ‘ஓ ராமதாசி! ராம பக்தரான நீ இவ்வளவு கோபம் கொள்ளலாமா. கடவுளை வணங்கும் நீ எவ்வித பற்றும் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா. ஆனால், நீ இந்தச் சிறிய விஷயத்துக்காக இவ்வளவு கோபம் கொள்கிறாய். மேலும், நீ இந்தப் புத்தகத்தை மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். எனவே, ஷாமா இந்தப் புத்தகத்தைப் படித்து அதன் பயனைப் பெறட்டும் என்றுதான் அவனிடம் அளித்தேன். போ! காசு கொடுத்தால் இதுபோல பல புத்தகங்கள் கிடைக்கும். ஆனால், மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள். எதற்காகவும் நல்ல மனிதர்களை இழந்துவிடாதே” என்று கூறினார். இதைக் கேட்டு ராமதாசி மனம் அமைதியடைந்தது. பாபாவினால் அவருக்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைவருக்கும் ஏற்றவையாகும்.

நாம் அனைவரும் பணத்துக்கும் பொருளுக்கும் மதிப்பு அளிப்பதைவிட மனிதர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை பாபா இவ்வாறு நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply