மகாலட்சுமி அருள் கடாட்சம் என்றும் நிலைபெற வேண்டுமா? இந்த விரதங்களை தொடர்நது கடைபிடியுங்க..!

0

1. ஹோமம்: ஸ்ரீஸுக்தம் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீஸுக்தம் என்பது வேதம் என்னும் உத்யானத்தில் பாரிஜாத மரம் போன்றது. வாக்குகளுக்கு அப்பாற்பட்ட லட்சுமியின் பெருமைகளை உணர சாதுக்களுக்கு ஸ்ரீஜுக்தம் கண்களாக அமைந்திருக்கின்றது என்கிறார் மகாகவி வேங்கடாத்ரீ. ஸ்ரீஸுக்தத்தில் லட்சுமி தன்னிடம் வந்திருக்க வேண்டும் என்று வேண்டப் பெறுகிறது. இது வேள்வியின் மூலம் மகாலட்சுமியின் அருளைப்பெறும் வழியை காட்டுகிறது. இது செய்ய இயலாதவர்கள் பாராயணம் செய்யலாம்.

2. பாராயணம்: கனகதாரா தோத்திரம் ஸ்ரீஸ்துதி போன்ற திருவருளும் தேவியின் பெருமை பேசும் திருநூல்களை தினமும் பாராயணம் செய்து வரலாம். பாராயணம் செய்யவும் இயலாதவர்கள் ஜபம் செய்யலாம்.

3. ஜபம்: வில்ல மரத்தடியில் அமர்ந்து ஹக்ரீவ மந்திரத்தை ஜபித்தாலும் திருவருளைப் பெறலாம்.

4. விரதங்கள்: சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருட்கண்ணோக்கம் பெறலாம். அவையாவன:

சம்பத் கவுரி விரதம் மங்ளகவுரி விரதம்
கஜ கவுரி விரதம் விருத்தகவுரி விரதம்
லலிதா கவுரி விரதம் துளசிகவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம்
சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம்
சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம்
மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு தரும்.

5. சாப்பிடுவதில் ஒழுங்கு: சாப்பிடுவதில் ஒழுங்கு வேண்டும். பசித்தபின் புசி, கூழானாலும் குளித்துக்குடி, பல்விளக்காமல் காபி குடிக்காதே, குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக சாப்பிட வேண்டும். தூய உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன் நீர் குடி, உண்டபின் நீர் குடிப்பது நல்லது. சாப்பிடுவதற்கு முன் அதனை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கிழக்கு நோக்கி உண்டால் நலம் விளையும்.

காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும், இரவு உணவை 7 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும். உடன் உறங்க கூடாது. மூன்று வேளை உண்பவன் ரோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, ஒருவேளை உண்பவன் யோகி.
வாரம் ஒருமுறையேனும் உண்ணாதிருக்க வேண்டும். அடிக்கடி சாப்பிடுவது அஜிரணத்திற்கு வழி வகுக்கும். சமையல் அறையில் சுத்தம் தேவை. அங்கே அன்னலட்சுமி இருக்கிறாள்.

6. உடுத்துவதில் ஒழுங்கு: தூய எளிய ஆடைகளை உடுத்த வேண்டும். பெண்கள் பூச்சூடி பொட்டுடன் திகழ வேண்டும். ஆண்கள் உரிய முறையில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். வில்வம், தும்பை, தாமரை ஆகியவற்றை ஆடவர், மகளிர் தலையில் சூடக்கூடாது. ஓராடையுடன் பூஜை செய்யக்கூடாது.

7. பேசுவதில் ஒழுங்கு: தேவையான விஷயங்களை மட்டும் தெளிவாகப்பேச வேண்டும். அளவுடன், ஆர்வத்துடன், இனிமையாகப் பேச வேண்டும். உண்மையை எண்ணிய பின் பேசுதல் வேண்டும், ஏற்புடைய முறையில் ஐயந்தீறக பேச வேண்டும். ஒத்துக் கொள்ளுமாறு, ஓசை குறைத்துபேச வேண்டும். இவை லட்சுமிகரமாகும்.

8. அன்றாடக் கடமைகள்: அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். காலையில் எழுதல், கடவுளை தொழுதல், கழிவினைக் கழிதல், பல் துலக்கல், குளித்தல், அனுஷ்டானம் செய்தல், பூஜை செய்தல், வேலையில் ஈடுபடுதல், சந்தியாவந்தனம் செய்தல், திருக்கோயிலுக்கு சென்று வருதல், உலவி வருதல், படித்தல், பாராயணம் செய்தல், கேட்டல், உரிய முறையில் உறங்கல் என நாட்கடமைகள் பல உள்ளன. அவற்றை உரிய நேரத்தில் உரிய முறையில் செய்பவர்களிடம் லட்சுமி என்றும் இருப்பாள்.

9. வாழ்நாள் கடமைகள்: மனிதனுக்குரிய வாழ்நாள் கடமைகள் பல. அவற்றுள் தென்புலத்தார். தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்று ஐந்திடத்தும் செய்ய வேண்டிய அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டும். தென்புலத்தார் என்போர் நம் மூதாதையர். இறந்துவிட்ட அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். தெய்வத்திற்கு உரிய கடன்களை செலுத்த வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும். சுற்றத்தினரைப் பேண வேண்டும். தன்னையும் நெறி வழுவாமல் காத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்தும் ஒரு மனிதனின் தலையாய வாழ்நாள் கடமைகள். இவற்றை முறையாக செய்து வந்தால் லட்சுமி நீங்காதிருப்பாள்.

10. உழைப்பே லட்சுமி நிலைத்திருக்க ஒரே வழி.

குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பது பழமொழி. ஆதலின் உழைக்க வேண்டும். திருமாலின் மார்பிலிருக்கும் லட்சுமி உழைப்பவரின் காலில் இருப்பாள். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply