தினம், தினம் அற்புதம் செய்த சீரடி சாய்பாபா

0

சாய்பாபா தினம், தினம் அற்புதம் செய்தார். அவரைத் தேடி வந்த ஒவ்வொரு பக்தரும் தம் தோ‌ஷங்கள் நீங்கப் பெற்று புத்துணர்ச்சி அடைந்தனர். இதனால் சீரடி புண்ணியத் தலத்தின் புகழ் நாடெங்கும் பரவியது.

இந்த நிலையில் பாபா தனது ஸ்தூல திருமேனியில் இருந்து ஆத்மாவை பிரிக்க முடிவு செய்தார். இந்த உலகில் இருந்து விடை பெறப்போவதை அவர் தம் பக்தர்கள் பலரிடமும் சூசகமாகவும், பரிபாஷையாகவும் தெரிவித்தார். ஆனால் சாய்பாபா சொன்னதை அப்போது யாருமே சரிவர புரிந்து கொள்ளவில்லை. 1918-ம் ஆண்டு சாய்பாபா தன் உயிரை உதிர்த்துக் கொண்ட பிறகுதான் அதை உணர்ந்தனர்.

1918-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தவேச புவா என்ற பக்தையை சாய்பாபா அழைத்தார். புலா 2 வாரங்களுக்கு ஒரு தடவை சீரடி வந்து பாபாவை தரிசனம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அவரை அழைத்த பாபா, “இனி நீ அடிக்கடி இங்கு வர வேண்டிய அவசியம் இருக்காது. உன் இருப்பிடத்துக்கே நான் வருவேன்” என்றார்.

1918-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமதி சந்திராபாய் என்ற மற்றொரு பக்தையிடமும் பாபா அவ்வாறு கூறியிருந்தார். அந்த இரு பக்தைகளுக்கும் பாபா ஏன் அப்படி சொன்னார் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. சில மாதங்களில் பாபா உயிர் துறந்த போதுதான் அவர் சூசகமாக தங்களிடம் சொன்னதை உணர்ந்தனர்.

பக்தர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் சாய்பாபா சுமார் 2 ஆண்டுகளாக தனது இறுதி பயணத்துக்கான ஏற்பாடுகள் பற்றி அடிக்கடி கூறி வந்தார். சில செயல்கள் மூலமாகவும் அவர் தான் விடை பெறப்போவதை உணர்த்தினார். 1918-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள் அவர் பேட் பாபாவின் மகனான காசிம் என்பவனை அழைத்தார். அவனிடம் ஒரு மாலையை எடுத்துக் கொடுத்தார். அதோடு ரூ.250 அளித்தார்.

பிறகு பாபா, “இந்த மாலையையும், ரூ.250 பணத்தையும் அவுரங்காபாத்துக்கு எடுத்துச் செல். அங்கு பான்னே மியா என்று ஒரு பக்கீர் இருக்கிறார். அவரது கழுத்தில் இந்த மாலையைப் போடு. 250 ரூபாயையும் கொடுத்து விடு. அவர் உன்னிடம் இது யார் கொடுத்த மாலை என்று கேட்பார்.

அவரிடம் நீ, இது பாபா கொடுத்தது. ஒன்பதாவது மாதம், ஒன்பதாவது நாள் அல்லா ஏற்றி வைத்த தீபத்தைத் தாமே எடுத்துக் கொள்ளப் போகிறார். அல்லாவின் கருணை அத்தகையது என்று கூறும்படி கூறினார். காசிமும் அவ்வாறே அவுரங்காபாத் சென்று பக்கீர் பான்னே மியாவை சந்தித்தார். அப்போது பக்கீர் பான்னே மியா மிகவும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

நீண்ட நேரமாக அவர் தியானத்தில் இருந்தார். அவர் விழிப்பு நிலைக்கு வராததால் காசிம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, பாபா கொடுத்தனுப்பிய மாலையை அவர் கழுத்தில் போட்டார். பக்கீர் பான்னே மியா எதுவும் புரியாமல் “என்ன இது?” என்று கேட்டார். உடனே காசிம் தன்னிடம் பாபா மாலையும் ரூ.250 பணத்தையும் கொடுத்து அனுப்பியதை கூறி, பாபா சொல்லியதையும் மறக்காமல் கூறினார். அதைக் கேட்டதும் பக்கீர் பான்னே மியா அதிர்ச்சியில் உறைந்தார்.

வெளியில் வந்து வானத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பாபா விடை பெறப் போகிறார் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. ஆனால் காசிமுக்கு எதுவுமே தெரியவில்லை. பக்கீர் பான்னே மியாவிடம் விடைபெற்று சீரடி திரும்பினார்.

1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம்…. ஒருநாள் தனது இவ்வுலக வாழ்வு நிறைவு பெறப் போவதை சாய்பாபா மிகத் துல்லியமாக உணர்த்தினார். அந்த நிகழ்வு மிகவும் உணர்வுப் பூர்வமானது. சாய்பாபா எப்போதும் தம்முடன் ஒரு செங்கல் வைத்திருந்தார் என்பதை முந்தைய பக்கங்களில் நீங்கள் படித்து இருப்பீர்கள். அந்த செங்கலைத்தான் தினமும் அவர் தலையணை போல வைத்துக் கொண்டு தூங்குவார்.

அந்த செங்கலை பாபா தம் குருவாகவே கருதி, மிகவும் பயபக்தியுடன் கையாண்டு வந்ததை அவரிடம் நெருக்கமாக இருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். இதனால் அவர்கள் அந்த செங்கலை தொடுவதே இல்லை. இந்த நிலையில் மாதவ் பாஸ்லே என்று ஒரு சிறுவன் துவாரக மாயி மசூதியில் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தான். தினமும் மசூதியைப் பெருக்கி சுத்தப்படுத்தும் பணியை அவன் செய்து வந்தான்.

பாபாவின் மனதிலும் அவன் இடம் பிடித்திருந்தான். பாபா அவனைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவனுக்கு ஆசி வழங்கி செல்வார். அன்று மாதவ் பாஸ்லே மசூதியை சுத்தம் செய்து கொண்டிருந் தான். அப்போது மூலையில் இருந்த செங்கல்லைப் பார்த்தான். பாபா தன் தலைக்கு வைத்து படுக்கும் செங்கல்லில் தூசி படிந்து இருப்பதைக் கண்டான்.

உடனே செங்கலை எடுத்து சுத்தம் செய்தான். செங்கலை ஒரு கையில் பிடித்தபடி மற்றொரு கையால் தட்டி விட்டு சுத்தம் செய்தான். அப்போது செங்கல் எதிர்பாராதவிதமாக அவன் கையில் இருந்து தவறி கீழே விழுந்தது. தரையில் பட்டு மிகச்சரியாக இரண்டு துண்டாக உடைந்தது.

சத்தம் கேட்டு பாபா ஓடி வந்தார். செங்கல் கீழே விழுந்து இரு துண்டுகளாக உடைந்து கிடப்பதைப் பார்த்ததும் பதறிப் போனார். “அய்யோ குருநாதா” என்று கத்தினார், கதறினார். செங்கலின் 2 துண்டுகளையும் எடுத்து நெற்றியில் வைத்தப்படி அழுதார். “எத்தனை ஆசையாய் குருநாதர் எனக்கு இந்த செங்கலை தந்தார். என் உயிரையே நான் இதில் வைத்து இருந்தேனே…. இவ்வளவு நாட்களாக இது என்னுடன் இருந்தது. இன்று அத்தனையும் பறி போய் விட்டது” என்று அவர் கண்ணீர் மல்க முணுமுணுத்தார்.

பாபா அரற்றும் குரல் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். உடைந்த செங்கலை வைத்துக் கொண்டு பாபா ஏன் அழுது கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. பாபா கண்ணீர் விட்டதால் அவர்களுக்கும் அழுகை வந்தது. பக்தர்களின் துயரத்தை கண்ட பாபா, தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினார். அழுகையை நிறுத்தி விட்டு சகஜ நிலைக்குத் திரும்பினார். தனது கையில் வைத்திருந்த செங்கல் துண்டுகளை ஏக்கத்துடன் பார்த்தபடி தடவி கொடுத்தார்.

பிறகு அந்த செங்கல் துண்டுகளுக்கு பாபா முத்தமிட்டார். அப்போது மீண்டும் அவருக்கு கண்ணீர் வந்தது.

அப்போது ஒரு பக்தர் தைரியத்தை வரவழைத்து கொண்டு, “ ஏன் பாபா அழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பாபா, சோகமான குரலில், “செங்கல் உடையவில்லை. எனது விதியே முடிந்து விட்டது. இந்த செங்கல்தான் எனது வாழ்க்கை துணையாக இருந்தது. இதன் துணை கொண்டு நான் தினமும் ஆத்மாவை மேம்படுத்தி வந்தேன். அது எனது உயிராக இருந்தது. செங்கல் உடைந்ததன் மூலம் எனது உயிர் இந்த உடலில் இருந்து பிரிந்து விட்டது” என்று கூறினார்.

பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாகி விட்டது. “என்ன பாபா சொல்கிறீர்கள்?” என்று பரபரப்பு பொங்க கேட்டனர். அதற்கு சாய்பாபா, “இனி இந்த உலகில் நான் நீண்ட காலம் வாழ மாட்டேன். விரைவில் எனது மூச்சை நிறுத்திக் கொள்வேன்” என்றார். இதைக் கேட்டு பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அவர்களை சமரசம் செய்த சாய்பாபா, “என்னை யார் மிகவும் விரும்புகிறாரோ, அவர் எப்போதும் என்னைக் காண்பார். எப்போதும் என் நினைவில் இருப்பவர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன். அவர்களை தன்னிலை உணர செய்து விடுதலை அளிப்பேன். என்னுடன் இரண்டற கலந்து விடச் செய்வேன். எனவே என்னிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

பாபாவின் இந்த வார்த்தையை கேட்டு பக்தர்கள் அமைதி பெற்றாலும் பாபா விரைவில் நம்மை விட்டு பிரியப் போகிறார் என்பதை பலரும் புரிந்து கொண்டனர். அந்த பக்தர்கள் தவிப்போடு இருந்தனர். அவர்கள் பயந்தது போலவே 1918-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி உடைந்த செங்கலில் இருந்து ஆன்மா பிரிந்தது போல, பாபா உடலில் இருந்தும் உயிர் நீங்கியது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply