மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் இன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் சந்திப்பு.

0

திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள்.

வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார்.

மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.

இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply