காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது: சென்னை-புதுவை இடையே நாளை கரையை கடக்கிறது.

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது.

இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளன. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது.

இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது.

இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது.

இது நாளை (12-ந்தேதி) மற்றும் 13-ந்தேதியில் தமிழக-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த பிறகு அரபிக்கடல் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு (ரெட் அலர்ட்) வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (12-ந்தேதி), 13, 14 ஆகிய தேதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply