டாஸ்மாக் மதுகடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் வெளியானதாக பரபரப்பு- அரசு அதிகாரிகள் மறுப்பு.

0

சென்னை மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக பார் உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது.

விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதற்கிடையே டாஸ்மாக் பார்கள் தொடர்பான ஏலம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் உள்ளன.

இதனால் சென்னையில் குடிமகன்கள் சாலை ஓரங்களில் வைத்து மது அருந்தி வருகிறார்கள்.

இந்த நிலைமை மாற முறைப்படி டாஸ்மாக் பார்களை ஏலத்தில் விட வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்கள் தொடர்பான டெண்டர் அறிவிப்பை இறுதி செய்து அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை மத்திய மண்டல மேலாளர் தனது எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார் ஏலம் ஒப்பந்தம் மேற்கொண்டது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான ஒப்பந்த அறிவிப்பும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் பார் உரிமையாளர்களும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பார் ஒப்பந்தம் தொடர்பான எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

மத்திய மண்டல மேலாளர் வெளியிட்டதாக வெளியாகி உள்ள அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

டாஸ்மாக் பார் தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்திருக்கும் நிலையில் வருகிற 21-ந்தேதி அது தொடர்பான இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply