ஆண்கள் பார்த்தால் கண் பார்வை பறிபோய் விடுமாம்!

0

ஆடி, தை மற்றும் மாசி ஆகிய மூன்று மாதங்களில் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் இந்த அவ்வையார் பிள்ளையார் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் வரக்கூடிய எல்லா செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் அல்லது ஒரே ஒரு செவ்வாய்க் கிழமையிலும் மேற்கொள்ளலாம். அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அனுஷ்டிக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு தெரியாமல் ஊரில் இருக்கும் திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் அனைவருமாக சேர்ந்து ஊரில் இருக்கும் வயதான பெண்மணியின் வீட்டில் வைத்து வழிபடுகிறார்கள். இரவு 11 மணிக்கு மேல் தொடங்கப்படும் இந்த விரதத்தை பற்றிய எந்த ஒரு ரகசியமும் ஆண்களுக்கு தெரிய கூடாதாம். அப்படி தெரிந்தால் அவர்களுடைய கண் பார்வை பறி போய்விடும் என்கிற சாபம் உண்டாம்.

இந்த விரதத்தின் பொழுது புங்கை மர இலை மற்றும் புளிய மர இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலைகளுக்கு நடுவில் ஒரு சொம்பில் தண்ணீரை நிரப்பி அதன் மீது தேங்காயை கும்பம் போல வைக்க வேண்டும். பின்னர் எல்லா பெண்களும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வரும் அரிசியை இடித்து மாவாக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து உப்பில்லாமல் கொழுக்கட்டைகளை பிடிக்க வேண்டும். திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவருடைய உருவத்தை கொழுக்கட்டையாக பிடிக்கலாம். ஒரே மாதிரியான வடிவத்தில் இல்லாமல் வெவ்வேறு விதங்களில் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொழுக்கட்டைகளை பிடிக்க வேண்டும். பின்னர் விளக்கு ஏற்றி வழிபாடு செய்த பின்பு இந்த கொழுக்கட்டைகளை அவர்களே கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் சாப்பிட்டு விட வேண்டும். பிறகு ஒன்றும் தெரியாதது போல் அவரவர் வீட்டிற்கு சென்று படுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கிய தடை மற்றும் குடும்பத்தில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி, வறுமை ஒழிந்து செல்வம் பெருகுமாம். செல்வ செழிப்புடன் இருக்க அவ்வையார் ரகசியமாக இந்த விரதத்தை புராண காலத்தில் ஒரு பெண்மணிக்கு அறிவுறுத்தியதாக நம்பப்படுகிறது. விரதத்தின் பொழுது பிள்ளையார் கதைகள், அவ்வையார் கதைகளை படிப்பது உண்டு.

ஒருமுறை ஔவையார் ஒரு வீட்டில் பசி என்று உணவு கேட்க சென்றார். அந்த வீட்டில் ஏழு ஆண்களும், ஒரே ஒரு பெண் பிள்ளையும் உண்டு. தாய், தந்தையர் இல்லாத வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. ஏழு அண்ணன்மார்களும் கொண்டு வரும் அரிசியை கொண்டு உணவு சமைப்பதில், இவளுக்கு மிஞ்சியது வெறும் கஞ்சி தான். ஒரு பிடி அரிசி மட்டுமே இவர்களுக்கு தினமும் உணவாக இருந்தது. இந்த வறுமை நிலையில் அவளுடைய உடைகள் கூட கிழிந்த நிலையில் இருந்தது எனவே அவளால் வெளியில் வந்து அவ்வையாருக்கு உணவு பரிமாற முடியவில்லை என்று தேம்பித் தேம்பி அழ தொடங்கினாள். இவளின் அழுகை சத்தத்தை கேட்ட அவ்வையார் இந்த விரதத்தை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

கடைபிடிக்க வேண்டிய சிறிதளவு அரிசி மற்றும் தேங்காயையும் அவரே கொடுத்தார். ஆனால் அடுப்பை எரிக்க நெருப்பு அவளிடம் இல்லை. இதனால் அருகிருந்த புங்கை மற்றும் புளிய மரத்தின் மீது கால் வைத்து ஏறி எங்காவது நெருப்பு கிடைக்கிறதா? என்று பார்த்தாள். ஒரு மயானத்தில் நெருப்பு எரிவதை கண்டு அங்கே சென்று பிணத்தில் இருந்து நெருப்பை எடுத்து வந்து விளக்கு ஏற்றி அரிசியை இடித்து கொழுக்கட்டை பிடித்து வைத்து ஔவையார் கூறியது போல விரதம் மேற்கொண்டாள். புங்கை மற்றும் புளிய மரம் இந்த விரதத்திற்கு உதவியால் அதன் இலைகளை கொண்டு வந்ததாகவும், பிணத்திலிருந்து நெருப்பைக் கொண்டு வந்ததால் பிண உருவத்தை கொழுக்கட்டை ஆகவும் செய்து படைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் அந்த பெண் ரொம்பவும் செல்வ செழிப்புடன் இருந்தாள். அவளது குடும்பமும் செல்வாக்கு நிறைந்ததாகவும், நல்ல இடத்தில் திருமணம் முடிந்தும் சென்றாள். இதை அவளுடைய அண்ணி மார்களுக்கு ரகசியமாக கூறிவிட்டு சென்றாலும், அவர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் வறுமை நிலைக்கு சென்றனர். அதன் பிறகு மீண்டும் அப்பெண் இந்த விரதத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினாள். அதன் பின்பு அன்னிகள் இந்த விரதத்தை கடைபிடித்து திரும்பவும் செல்வ செழிப்பை அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே ரகசியமாக ஆண்களுக்கு தெரியாமல் பெண்கள் மட்டும் கடைபிடிக்கும் இந்த விரதம் ரொம்பவும் வியப்பிற்குரியதாகவும், அற்புதமான பலன்களையும் கொடுக்கிறது.

Leave a Reply