2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்.

0

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கருதி 2 நாள் பொது வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

அதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடங்கியது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை, ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 18 மாத அகவிலைப்படியினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஐ.என்.டி. யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.

தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லக் கூடிய ஊழியர்கள் சிரமப்பட்டனர். மிக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் நீண்ட நேரம் பஸ் நிலையங்களிலும், நிறுத்தங்களிலும் காத்திருந்தனர்.

குறிப்பாக சென்னையில் 10 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடியதால் பொது மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும், சிறிய வேன்களும் அதிகளவு ஓடியது. இதனால் பொது மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொது நிறுவன ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று போல் இன்றைய வேலை நிறுத்தம் தீவிரமாக இல்லை. பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் நடந்தது.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் 90 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்துதொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்களும் இன்று காலையிலே பணியில் ஈடுபட டெப்போவுக்கு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply