பணம் பெருக ரகசிய வழிகள் ஏதாவது உண்டா?

0


நாம் வாழுகிற இடத்திலிருந்து எண்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எட்டு திசைகளில் உள்ள ஊர்களில் இருக்கும் ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றிலிருந்து எட்டு சிறிய செப்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் எட்டு மூலையிலும் புதைத்து வைக்க வேண்டும். அப்படி புதைக்கும் போது கூடவே வில்வ இலை, நெல்லிமரத்து இலையுடன் கொம்பு மஞ்சளையும் சேர்த்து புதைக்க வேண்டும். புதைத்த பிறகு அந்த இடத்தில் எட்டு வாரங்கள் நீங்கள் எந்தகிழமையில் புதைத்தீர்களோ அந்த கிழமையில், அந்த நேரத்தில் கற்பூரம் ஏற்றி குல தேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்கினாலும் செல்வம் பெருகும் என்கிறார்கள் முன்னோர்கள். அதைவிடுங்கள், வேறு என்ன வழிகள் உள்ளன? சற்று ஆராய்ந்து பார்ப்போமா?


மனம் போல் மாங்கல்யம், எண்ணம் போல வாழ்க்கை என்ற சொலவடை நினைவிருக்கிறதா? அது உண்மைதான். உங்கள் எண்ணங்கள் எப்படியோ அது போலத் தான் வாழ்க்கையும் சரி, வெற்றி வாய்ப்புக்களும் சரி அமையும். பணத்தை பெருக்குவதில் வெற்றிகரமாக செயல்படுபவர்களின் பேட்டிகளைப் பத்திரிகையில் படிக்கும் போது உங்களுக்கே தெரிந்து விடும். அவர்கள் பாசிட்டிவ் விஷயங்களாகவே பேசுவார்கள். அவர்களுடைய எண்ணம், சிந்தனை, எல்லாமே மேலும் மேலும் பணம்….அதனால்தான் அவர்களைவிட்டு ஒரு இம்மியளவு கூட நகராமல் அது அவர்களிடம் தங்கிவிடுகிறது. எனவே முதலில் மனத்தளவில் பணக்காரனாக மாறுங்கள். 


உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள். பணமா, புகழா, வெற்றியா அல்லது நிம்மதியான வாழ்க்கையா? அது எதுவாக இருந்தாலும் அதற்கான காரணத்தையும் நீங்கள் உணர்வளவில் தெளிவாக வைத்திருக்க வேண்டும். நான் நிம்மதியான வாழ்க்கை வாழ எனக்குப் பணம் தேவை. அதற்காக நேர்மையாக உழைத்து பாடுபட்டு அதை அடைந்தே தீருவேன் என்ற நிலைப்பாடு உங்களுக்கு இருந்தால், அதை கூர்மைப்படுத்தி அதற்காக ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுங்கள். சிந்தனை செயல் எல்லாமே அதை நோக்கியே இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது துடுப்பில்லாத ஓர் படகு போல.எனவே ஓர்மையுடன் வெற்றியினை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். நிச்சயம் ஒருநாள் இலக்கினை அடைந்துவிடுவீர்கள். 


உழைப்பின் சிறப்பை உணர்ந்து முன்னேற்றப் பாதைக்கான உங்களுடைய வேலைகளை உறுதியுடன் 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதைப் பெறுவீர்கள். No pain, no gain என்ற பழமொழியை நினைவில் நிறுத்துங்கள். ஹென்றி ஃபோர்ட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ஃபோர்டு. உலகப் பணக்காரர்களில் தன்னிகரற்றவராகத் திகழ்ந்தவர். அவருடைய வெற்றிக்கான ரகசியம் செயல் செயல் செயல் மட்டுமே. ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க சும்மா கனவு கண்டு கொண்டிருந்தால் போதுமா? ஒவ்வொரு நிமிடத்தையும் உழைப்பாக உருமாற்றி அற்புதங்களை கண்முன் நிகழ்த்திக் காட்டியவர் ஹென்றி ஃபோர்டு. ஒரு செயலை செய்ய முடியும் என உறுதியாக நீங்கள் முதலில் நம்ப வேண்டும்.


தியானம் என்பது காட்டில் முனிவர்கள் தவம் செய்வது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதன் அர்த்தம் மனத்தை ஒருமுகப்படுத்துதல். தவ வாழ்க்கை மேற்கொள்பவர்கள் மேலான விஷயங்களுக்காக, இறைநிலை அடைவதற்காக மனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். ஆனால் பணம் அல்லது பொருள்சார்ந்த வெற்றிகளை வேண்டுபவர்கள் அதே தியானத்தை செய்யும் வேலைகளில் காண்பித்தால் நிச்சயம் வெற்றிதான். மனத்தை ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையைச் செய்யும் போது அது உங்களை வேற லெவலுக்கு அழைத்துச் செல்லும். தீவிரத்தன்மை அல்லது ஒற்றைத்தன்மையுடன் உங்கள் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக கவனமாக எடுத்து வைத்தால் நிச்சயம் வெற்றிதான்.


நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பது நல்லதுதான். ஆனால் செயலூக்கம் தான் உங்கள் வெற்றியின் படிகளில் பயணிக்கச் செய்யும். ஒரு பாதையை தேர்ந்தெடுத்து முழு மனத்துடன் அதில் மட்டுமே பயணம் செய்யுங்கள். பின் ஒருபோதும் திரும்பிப் பார்க்காதீர்கள். காரணம் இடர்பாடுகளை நினைத்து பாதிவழியில் திகைத்து நின்றீர்கள் எனில் தோல்வியின் முதல்நிலை உங்களுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். வெற்றியாளர்கள் எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் பயப்படுவது இல்லை. தோல்வியோ திரும்பிப் பார்ப்பதோ அவர்களின் சரித்திரத்தில் கிடையாது. உயரப் பறத்தல் என்பதே அவர்களின் ஒரே தாரக மந்திரம்.


நீங்கள் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கான வழி வகைகளை ஆராய்ந்து அதனை நோக்கி அல்லும் பகலும் முன்னேற வேண்டும். சில நாட்கள் ஓய்வு தேவை என்று ஆசுவாசமாக இருந்துவிடக் கூடாது. அதிசயங்கள் எல்லாம் ஓரிரவில் நடந்துவிடாது. தொடர் முயற்சி ஒன்றே வெற்றிக்கான அடிப்படை. அதற்காக உணவின்றி, தூக்கமின்றி ஓய்வின்றி போராட வேண்டும் என்பதில்லை. எந்தந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்பதில் உறுதியும் தெளிவும் வேண்டும். 


நீங்கள் எந்தத் தொழிலை தேர்ந்தெடுத்து செய்வதாக இருந்தாலும் சரி அது உங்கள் மனத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். வேலையை அது பணம் தரும் கருவியாக மட்டும் பார்க்காமல் அதன் ஒரு பகுதியாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். சந்தோஷமாக அதைச் செய்து பாருங்கள். வேலை வேறு வாழ்க்கை வேறெல்ல. எல்லாமும் ஒன்றுதான் என்ற மனப்பான்மை மிகவும் முக்கியம். நமக்குப் பிடித்த செயல்களைச் செய்யும் போது இயல்பாகவே நாம் அதை முழு மனத்துடன் செய்து முடிப்போம்.


உங்கள் தொழிலை நீங்கள் நடத்துகிறீர்களோ அது உங்களை அவ்வாறே நடத்தும். உதாரணமாக உங்கள் வேலையை பொழுதுபோக்குவது போலச் செய்து வந்தால் அதில் கிடைக்கும் வருவாயும் சிறிதளவு தான் இருக்கும். அதே சமயம் உங்கள் நிறுவனத்தையோ அல்லது தொழிலையோ மகத்தானதாக நினைத்து உழைப்பைக் கொட்டினால் அதற்குத் தகுந்தாற் போல் உங்கள் பணம் வளரும், மேலும் வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். 


வாழ்க்கையிலும் சரி தொழிலிலும் சரி வெற்றி தோல்வி என்பது சகஜம். இதை உணர்ந்து தோல்வி நிலையில் மனம் வாடி உடைந்துவிடாமல் அடுத்து என்ன என்று யோசித்து கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். அடுத்தடுத்து தோல்விகள் வருகிறதா? அதற்கும் பயப்பட வேண்டாம். ஒவ்வொரு தோல்வியும் வெற்றியாளராகிய உங்களை உருவாக்கவே ஏற்பட்டுள்ளது. துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது போல பயம் இல்லாமல் இருக்கும் போது ஒரு கட்டத்தில் தோல்வியே தோற்றோடிவிடும். – Source: Dinamani


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply