கிராமத்துடனான கலந்துரையாடல் தேசிய அபிவிருத்தி.

0

கிராமத்துடனான கலந்துரையாடல் தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகம் தோறும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மொரவெவெ மற்றும் கோமரன்கடவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நேற்று (12) உரிய பிரதேச செயலகங்களில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

கிராமிய மக்களுடைய அபிவிருத்தி தேவைகளை கிராமிய மக்களிடமிருந்து பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்து உள்ளது. அதன் மூலமாக கிராமம் அபிவிருத்தியடையும். அத்துடன் கிராமத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

எனவே கிராம மக்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அரசாங்கம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தற்போது பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் மூலமாக கிராம மக்களுடைய வாழ்வாதாரம் மேம்பட கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். உற்பத்தி கிராம வேலைத்திட்டம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் கிராம மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலமாக உண்மையான தேவைகளை இனங்கண்டு பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும்.

நிதி அமைச்சர் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இம்முன்மொழிவை கிராமிய மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியதாகவும், கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான காத்திரமான பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாகவும் இதன்போது அரசாங்க அதிபர்கள் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

பிரதேச செயலக ரீதியாக பெற்றுக் கொள்ளப்பட்ட குறித்த திட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் வருடங்களில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி உதவிகளை பெற்றுக்கொண்டு கிராமத்தின் தேவைகள் கிரமமான முறையில் பூர்த்தி செய்வதற்கு இத்திட்ட முன்மொழிவு ஏதுவாக அமையும்.

கிராம அடிப்படையில் பெறப்படும் திட்ட முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டு மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்ட முன்மொழிவு தயாரிக்கப்படவுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உரிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உரிய பிரதேச செயலாளர்கள், பிரதேச அரசியல் தலைமைகள் உட்பட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply