கிண்ணியா- காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலயத்திற்கு சொந்தமான அரச காணியை மீட்டுத்தருமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை!

0

கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலயத்திற்கு சொந்தமான அரச காணியை மீட்டுத்தருமாறு மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுகின்றனர்.

1995ம் ஆண்டு கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் ஹமீது என்பவரின் மூத்த மகன் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தந்தையின் ஞாபகார்த்தமாக பாடசாலையொன்றை நிர்மாணிப்பதற்கு இக்காட்சியை வழங்கியிருந்தார்.

இருந்தபோதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கு தெரியாமல் தனி நபரொருவர் பாடசாலைக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்து வேலி அமைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த காணி அரச காணி எனவும் கிண்ணியா பிரதேச செயலகம் ஆவணப்படுத்தியிருந்த போதிலும் கடந்த 25 வருடங்களாக பாடசாலை மாணவர்களும்,இளைஞர்களும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனாலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தனக்கு சொந்தமான காணியென கூறி பாடசாலைக்கு அருகில் வேலி அமைந்துள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகள் குறித்த இடத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இடம்பெற்று வந்ததாகவும் அப்பாடசாலையின் அதிபர் அஹமட் ராஜி தெரிவித்தார்.

பாடசாலைக்கு சொந்தமான அரச காணியை தனி நபரொருவர் துப்புரவு செய்து தன்னுடைய காணி என கூறுவது எதிர்கால மாணவர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் இது விடயமாக கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் காணி அலுவலகம் மிக விரைவில் கவனம் செலுத்தி பாடசாலைக்கு சொந்தமான அரச காணியை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply