திருகோணமலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குற்பட்ட பகுதியில் நேற்றுமேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.
கிண்ணியா இடிமன் பகுதியில் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போதே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று தானாக விரும்பி அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட வங்கி ஊழியர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கிண்ணியா பைசல் நகர் பகுதியில் உள்ள 3 நபர்களுக்கும் பூவரசன்தீவு பகுதியில் உள்ள ஒருவருக்கும் இடிமன் பகுதியை சேர்ந்த ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடைய 7 நபர்களுக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக டொக்டர் றிஸ்வி குறிப்பிட்டார்.
மொத்தமாக 78 பரிசோதனைகளின் போது இவ்வாறு 14 தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டிருப்பதானது தொற்றாளர்கள் நாளாந்தம் அதிகரிக்கின்றது என்பதனை உணர்த்துகின்றது எனவும் வெளியிடங்களுக்கு செல்வதனை குறைத்து வீட்டிலிருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.



