இணையத்தளம் மூலம் 15 வயதான சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்கள் என்பதுடன், 6 பேர் சிறுமியை கடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் கைதானவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்படவுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர் லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரத்து செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட 3 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 15 வயதான சிறுமியை விற்பனை செய்வதற்கு உதவிய மற்றுமொரு நபர் அது தொடர்பான விசாரணைகளின்போது, வேறொரு யுவதியை விற்பனை செய்வதற்காக அழைத்து சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் மற்றும் சந்தேக நபர் ஆகியோர் வௌ்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



